வாணி பிரதீப்
'சன்னிவேல் ஓவியக் கழகம்' ஜூன் மாதத்தில் நடத்திய ஓவியக் கண் காட்சியில் வாணி பிரதீப்பின் தஞ்சாவூர்ப் பாணி ஓவியம் 'யசோதா கிருஷ்ணா'வுக்கு முதல் பரிசு கிடைத்தது. தைலவண்ணம், நீர்வண்ணம், அக்ரிலிக், பேஸ்டல், பேனாவால் மைகொண்டு வரைந்தது, கலவை ஊடகம் என்று 72 ஓவியங்கள் போட்டியிட்ட இந்தக் காட்சியில் தஞ்சாவூர்ப் பாணி ஓவியம் வெற்றி பெற்றதில் வாணிக்குப் பெருமையும் மகிழ்ச்சியும்.

வழக்குரைஞர் தொழில் செய்யும் வாணிக்கு ஓவியராகப் பரிமளிக்கத்தான் ஆசை. அவரும் எல்லாவகை ஓவியங்களும் தீட்டுவார். "வண்ணங்களின் மேலான எனது விருப்பத்தையும் கடவுளின் மீது நான் கொண்ட பக்தியையும் வெளியிட ஓவியம் உதவுகிறது" என்கிறார் வாணி.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் அவர் தஞ்சாவூர்ப் பாணி ஓவியங்களைப் படைக்கக் கற்றார். "அமெரிக்காவில் தஞ்சாவூர்ப் பாணியைப் பிரபலமாக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் சந்தோஷம்" என்கிறார் அவர்.

கி.பி. 18-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உருவான தஞ்சாவூர் ஓவியங்கள் பெரும்பாலும் இந்துக் கடவுளர்களைச் சித்தரிக்கவே பயன்படுகின்றன. இவற்றில் காணும் பளிச்சென்ற வண்ணங்கள், விலைகூடிய மணிகள் கொண்ட ஆபரணங்கள், தூய தங்க ரேக்குகள் (gold foils), கண்ணாடி வில்லைகள் எல்லாம் சேர்ந்து இவ் வோவியங்களுக்கு முப்பரிமாணத் (three dimensional) தோற்றம் கொடுக்கிறது.

சன்னிவேல் ஓவியக் குழாம் (Sunnyvel Art Club) ஓர் இலாப நோக்கற்ற, ஓவியர்களுக்கான அமைப்பு. இது சன்னிவேல் பகுதியில் வாழும் ஓவியர்களுக்கு பயிற்சி, கண்காட்சி, மற்றும் விருதுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருகிறது. எல்லா நிலை ஓவிய ஆர்வலர்களும் இதன் மூலம் பயன்பெறலாம். மாதந்தோறும் ஓவியப் போட்டிகளை நடத்தி வருகிறது.

வாணி பிரதீப்புடன் தொடர்புகொள்ள:
மின்னஞ்சல்: srishtiarts@gmail.com
தொலைபேசி: 408.738.6892

சன்னிவேல் ஓவியக் குழாத்தைப் பற்றி மேலும் அறிய: www.sunnyvaleartclub.org

© TamilOnline.com