அனைத்துமானவள்
உதயசூரியனை வாரத்தில் ஐந்து நாள் வென்று
சேவலின் கூவலை வேலையற்றுப் போகச்செய்து
அதே எட்டுப்புள்ளி கோலம் தப்பாமல் போட்டு
சுப்ரபாதத்தை மூன்று வரி முணுமுணுத்து
பில்ட்டர் காப்பி மணம் வீடெங்கும் பரப்பி
பால் கணக்கைக் கேலண்டரில் குறித்து
குக்கர் விசிலை கணக்கில் வைத்து
மாமாவின் டயாபெடீஸ் அளவை மனதில் கொண்டு
விழிக்காத குழந்தையை அதட்டி எழுப்பி
முடிக்காத வீட்டுப்பாடத்தை முடிக்கச்செய்து
குளிக்க மறுப்போரைத் தரதரவென இழுத்து
பாத்ரூமிலேயே உறங்கியோரைக் கோஷமிட்டு வெளியேற்றி
இட்லியை ஒரு விரலால் குத்திச் சோதித்து
தேங்காய்ச் சட்னியைக் கொறகொறவென அரைத்து
துணைக்கு நேற்றைய குழம்பையும் சூடேற்றி
உற்ற பந்துக்களுக்கு கோப்பை கொடுத்து
குடல் உபாதைக்கு உபாயம் கூறி
முகப்பருவுக்கு அழகுக்குறிப்பை அள்ளி வீசி
பிடித்த நண்பர்களுக்கு லைக்குகள் கிள்ளி வீசி

பிடிக்காத நண்பி பெற்ற லைக்குகளுக்கு வெதும்பி
பொங்கிய பாலைத் ததும்பாமல் இறக்கி
பீன்ஸ் பொரியலுக்கு தேங்காய்த் துருவி
டிபன் பாக்ஸில் அளவோடு திணித்து
ஒளிந்திருக்கும் சாக்ஸைச் சரியாகத் தேடி
பிய்ந்த பட்டனை அப்போதே தைத்து
மகனின் பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி
மகளின் இரட்டைப் பின்னலை திட்டிக்கொண்டே கட்டி
சன் நியூஸ் செய்திகளை ஒருகாதில் வாங்கி
சனியன்கள் போடும் சண்டைகளை மறுகாதில் தேக்கி
காக்காய்க் குளியலைக் கச்சிதமாக முடித்து
காட்டன் சேலையை நச்செனக் கட்டி
ஸ்டிக்கர் பொட்டைக் கண்ணாடியில் இருந்து மீட்டு
பிரிட்ஜில் உறங்கிய மல்லிப்பூவை தலையில் சூடி
அப்போதுதான் விழித்த கணவன் கொடுத்த
அன்பு முத்தத்தைப் பெற்று
அன்றைய தினக்கூலி கிடைத்த சந்தோஷத்தில்
அலுவலகம் புறப்பட்டாள்

கிருஷ்ண பிரசாத் பார்த்தசாரதி,
ஹார்ட்ஃபோர்டு, கனெக்டிகட்

© TamilOnline.com