மாயையின் இயல்பை நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம் என்றால் அது ஒரு கணத்தில் நம்மைவிட்டு ஓடிப்போகும். புரிந்துகொள்ளாமல் அதற்கு ஓர் உயர்ந்த இடத்தைக் கொடுத்துவிட்டால், அதன் கை வலுத்துவிடும், அது நம் தலைமீது ஏறி ஆட்டம் போடும்.
ஒரு கிராமத்தில் கல்யாணம் ஏற்பாடாகி இருந்தது. மாப்பிள்ளை வீட்டார் அந்தக் கிராமத்துக்கு வந்து ஒரு வீட்டில் தங்கினர். பெண்வீட்டார் வேறொரு வீட்டில் இருந்தனர். இவ்விரு வீட்டாருக்கும் நடுவில் வேறொருவர் வந்து, தனக்கு எல்லாச் சவுகரியங்களும் வேண்டும் என்று இரு வீட்டாரிடமும் அதட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று "நீங்கள் எல்லாவற்றுக்கும் தாமதமாக வருகிறீர்கள். அதனால் பெண் வீட்டாருக்குப் பிரச்சனையாக இருக்கிறது" என்பார். மாப்பிள்ளை வீட்டார் அவரைப் பெண்வீட்டுப் பெரிய மனிதர் போலும் என்று எண்ணினர்.
அவர் பெண்வீட்டாரிடம் போய் மாப்பிள்ளைக்கும் அவரது உறவினர்களுக்கும் நீங்கள் போதிய மரியாதை கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். இப்படியாக அவர் நாடகமாடினார். பெண்வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டுப் பெரியவர் போலவும், மாப்பிள்ளை வீட்டாரிடம் பெண்வீட்டுப் பெரியவர் போலவும் அவர் நடித்தார். இந்த நாடகம் அளவுக்கதிமாகப் போனதும் இருவீட்டாரும் சேர்ந்து அவர் யார் என்று தூண்டித் துருவ ஆரம்பித்தனர். இருபக்கத்தாரில் எவருக்கும் அவர் சொந்தமல்ல என்பது தெரியவந்தது.
மாயையின் மூலத்தை நீ தேடத் தொடங்கினால், அது காணாமல் போய்விடும், நமது கதையில் வருகின்ற 'பெரியமனிதரை'ப் போலவே.
நன்றி: சனாதன சாரதி, மே 2018
ஸ்ரீ சத்திய சாயிபாபா |