விபத்து என்ன வடிவில் வரும் யாராலும் சொல்ல முடியாது. நீச்சல், கிரிக்கெட் என்று எல்லாவற்றிலும் சிகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தார் ப்ரீத்தி. Under 19 பிரிவில் தேசிய அளவில் வெற்றிபெற்ற தமிழகப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன். நீச்சல் வீராங்கனை. படிப்பிலும் சுட்டி. இந்திய தேசியப் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த இனம்புரியாத விபத்து நிகழ்ந்தது. அதில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கழுத்துக்குக் கீழே செயலிழந்தார். ஆனால், ப்ரீத்தி ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்தார். குணப்படுத்தவே முடியாத உடல்நிலையில், அடுத்தது என்ன என்று யோசித்தார். அதன் விளைவுதான் Soulfree. இன்று தன்னைப்போலவே தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு தன்னம்பிக்கைப் பயிற்சி அளிக்கிறார். தண்டுவடப் பாதிப்பு குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார். தமிழக அரசின் 'கல்பனா சாவ்லா' விருது, ரெக்ஸ் இந்தியா விருது, சாதனைப் பெண் விருது, சிகரம் தொட்ட பெண்கள் விருது, ஃபெமினா பெண்சக்தி விருது, செஞ்சிலுவைச் சங்க விருது எனப் பல்வேறு விருதுகளைக் குவித்திருக்கிறார். ப்ரீத்திக்கு ஆங்கிலக் கவிதைகள் எழுதுவதும், வாயால் ஓவியம் வரைவதும் மிகப் பிடித்தமானவை. கதைகளும் எழுதுவார். இன்னுமொரு விருதைப் பெறச் சென்னைக்கு வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடினோம். இதோ, ப்ரீத்தி பேசுகிறார்...
தவமாய்த் தவமிருந்து... என் அப்பா பெயர் சீனிவாசன். அம்மா விஜயலக்ஷ்மி. திருமணமாகி, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தவமாய்த் தவமிருந்து பிறந்த குழந்தை நான். அப்பாவுக்கு நீச்சல்வீரர் ஆகவேண்டும்; ஒலிம்பிக்ஸில் பங்குபெற வேண்டும் என்ற கனவு இருந்தது. அது நிறைவேறவில்லை. ஆகவே என்னை ஒரு நீச்சல் வீராங்கனை ஆக்க நினைத்தார். 3 வயதில் நீச்சல் கற்க ஆரம்பித்தேன். காலை 5.30 மணிக்கு நீச்சல் கற்கப் போவதில் நாள் தொடங்கும். என் குழந்தைப்பருவம் ஐஸ்க்ரீம், நண்பர்களுடன் விளையாட்டு, ஊர் சுற்றுவது என்றெல்லாம் கழியவில்லை. கடுமையான உழைப்பும் கட்டுப்பாடும் கூடிய வாழ்க்கை. பயமும், தயக்கமும் இல்லாமல் எதையும் அணுக, என் பெற்றோர்கள் அன்று தந்த ஊக்கமும், பயிற்சிகளும்தான் இதற்குக் காரணம்.
பால் ஆற்றிக் கொடுத்த டீம் மேட்ஸ்! சிறுவயது முதலே கிரிக்கெட் என்றால் ஒரு வெறி. 1983ல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இறுதி ஆட்டத்தில் இந்தியா, எதிரணியில் வெஸ்ட் இண்டீஸ். அப்போது எனக்கு நான்கு வயது. கறுப்பு-வெள்ளை டி.வி.யில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லாரும் இந்திய அணியை சப்போர்ட் செய்து கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த வயதிலேயே, இந்திய அணியில் தங்கள் திறமையைக் காட்டத்தான் விளையாடுகிறார்கள், நாட்டுக்காக அல்ல என்பதாகப் பட்டது. நான் வெஸ்ட் இண்டீஸை ஆதரித்தேன். விவியன் ரிச்சர்ட்ஸை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால், அவர் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிவிட்டார். நான் மிகவும் எமோஷனல் ஆகிவிட்டேன். எனக்கு ஜுரமே வந்துவிட்டது. அப்படி ஒரு கிரிக்கெட் காதல்.
அதைப் பார்த்து அப்பா என்னைக் கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்த்தார். எட்டு வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டேன். என்னைவிட 20 வயது பெரிய சீனியர்களுடன் இணைந்து ஒரு டீமாக விளையாடுவேன். அவர்கள் என்னைச் சக விளையாட்டு வீரராகவே நடத்துவார்கள். எனக்கு அவர்கள் பால் ஆற்றிக் கொடுப்பார்கள். அதெயெல்லாம் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
பல நாடுகளில் படிப்பு நான் நன்றாகப் படிப்பேன். முதல் இரண்டு ரேங்க்கில் வந்து விடுவேன். அப்பாவுக்கு அடிக்கடி இடமாற்றம் வரும் வேலை. 12 வருடங்களில் நான் மூன்று நாடுகளில், 9 பள்ளிகளில் படித்திருக்கிறேன். ஜெர்மனி, அமெரிக்கா, வட இந்தியா, தென்னிந்தியா என்று எங்கெங்கோ படித்திருக்கிறேன். அமெரிக்காவில் பல பள்ளிகளில் படித்திருக்கிறேன்.
அமெரிக்காவில் கிரிக்கெட் கிடையாது. அது எனது கனவு என்பதால் 12வது முடித்ததுமே, மேலே இந்தியாவில் படிக்க முடிவுசெய்து இந்தியா திரும்பினேன். அமெரிக்காவில் 12வது முடிக்கும்போது 'Who's Who Among American High School Students' பட்டியலில் இடம்பெற்றேன். அது இருந்தால் அங்குள்ள மிகச்சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும். ஆனால், சிறந்த கலாசாரமும் பண்பாடும் கொண்ட நமது நாட்டில் இருக்கவேண்டும்; எனது உழைப்பும், திறமையும் நமது நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் சென்னைக்கு வந்து எனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்தேன்.
லண்டன் ஸ்கூலோடு தொடர்புடைய மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் சயன்சஸ் என்ற கல்வி நிறுவனத்தில் தொலைதூரக் கல்வி முறையில் எம்.பி.ஏ. படித்தேன். முதல் வருடம் முடிந்து விடுமுறையில் அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கே சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து சான் டியகோ வரை காரிலேயே போய் வந்தோம். உற்சாகமாக இருந்தது. சென்னை திரும்பினோம். காலேஜ் தொடங்குமுன் நண்பர்களோடு பாண்டிச்சேரிக்குச் சுற்றுலா சென்றேன். அந்த நாள் ஜூலை 11, 1988. மறக்கமுடியாத நாள். அன்றுதான் அந்த விபத்து நிகழ்ந்தது.
புரிபடாத விபத்து! பாண்டிச்சேரியில் கடற்கரை, அரவிந்த ஆச்ரமம், மணக்குள விநாயகர் கோவில் எல்லாம் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் தனியாருக்குச் சொந்தமான பீச் ஒன்று இருந்தது. அங்கு விளையாட ஆசை வந்தது. விளையாடினோம். ஒரு 3 அடிதான் தண்ணீர் இருந்தது. திடீரென்று ஒரு பெரிய அலை. காலின்கீழ் மண் அரிக்கவே விழுவேனோ என்று தோன்றியது. அதிலிருந்து தப்பிக்கத் தண்ணீருக்குள் டைவ் அடித்தேன். திடீரென்று எனக்கு ஏதோ 'ஷாக்' அடித்தமாதிரி இருந்தது. நான் எழுந்து நிற்கிறேன், முடியவில்லை. அங்கே பாறைகூட எதுவும் இல்லை. எதிலும் அடிபடவில்லை. ஒரு சொட்டு ரத்தம் சிந்தவில்லை. என்னவென்றே புரியவில்லை. மூச்சுவிடச் சிரமப்பட்டேன். நண்பர்கள் என்னைக் கரைக்குத் தூக்கிப் போயினர். கழுத்துக்குக் கீழே எனக்கு எந்த உணர்வும் இல்லை! ஒரு மணி, இரண்டு மணி நேரத்தில் சரியாகிவிடும் என்று நம்பினேன்.
நண்பர்கள் ஆம்புலன்ஸில் என்னை ஜிப்மருக்குக் கொண்டு போனார்கள். அங்கே டாக்டர்கள் என்னைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு ஒரு ஸ்பாண்டிலைடிஸ் காலரை மாட்டிவிட்டு, "இது ஆக்சிடெண்ட் கேஸ். சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போய்விடுங்கள்" என்று சொல்லிவிட்டனர். விபத்து நடந்து மூன்று மணி நேரம் ஆகியும் எந்தவிதமான மருத்துவ உதவியோ, சிகிச்சையோ கிடைக்கவில்லை. மருத்துவ உதவி உடனடியாகக் கிடைத்திருந்தால் சரியாகியிருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் உதவி, சேவை என்பதெல்லாம் மறைந்து, 'வேலை' ஆகிவிட்டது எனக்கு மன வருத்தத்தைத் தந்தது.
சேவை என்று சொல்லப்படும் விஷயங்கள் நான்கு. முதலாவது ஆன்மீகம் - கடவுளை அடைவதற்கான வழியைக் கூறுவது. இரண்டாவது கல்வி - நாம் யார், இந்த உலகம் என்ன என்பதை நமக்குக் காண்பித்துக் கொடுப்பது. மூன்றாவது மருத்துவம் - உயிர் காப்பது. நான்காவது அரசியல். இவை நான்குமே தூண் போன்றவை. மானுடருக்குச் சேவை செய்யும் எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே இதில் ஈடுபட வேண்டும். ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால், அது ஊழலாகி உடைய ஆரம்பித்தது என்றால் சமுதாயத்திற்குக் கேடு. பண்பாட்டின், கலாசாரத்தின் அழிவிற்கான துவக்கம் என்பது என்னுடைய கருத்து.
குருவின் காலடியில்... விபத்தின்போது எனக்கு 18 வயது. அதுவரை பெற்றோர்கள்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஒரே நாளில் விபத்து என்னை முடக்கிப் போட்டுவிட்டது. அப்பா சிகாகோவில் வேலை செய்துகொண்டிருந்தார். நானும் அம்மாவும் அங்கே சென்றோம். அங்கே Rehabilitation Institute of Chicago என்ற அமைப்பில் எனக்குச் சிகிச்சை தொடர்ந்தது. அது அமெரிக்காவிலேயே மிகச்சிறந்த மறுவாழ்வு மையம். அங்குமே ஒரு கட்டம்வரைதான் பார்த்துக்கொள்ள முடியும் என்ற நிலை வந்தபோது என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். நாங்கள் இந்தியாவிற்குத் திரும்பிவிட முடிவு செய்தோம்.
எங்கள் குரு யோகி ராம்சுரத்குமார். அவர் திருவண்ணாமலையில் இருந்தார். ஆகவே, குரு காலடியில் வாழ்க்கையைக் கழிக்க முடிவெடுத்தோம். அவரே எங்களை அழைத்து, எங்களுக்காகத் திருவண்ணாமலையில் ஒரு வீடு பார்த்துத் தந்தார். 2000ல் நாங்கள் அமெரிக்காவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தோம்.
எனக்குக் கோபம் கோபமாக வந்தது. இனிமேல் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை. யாராவது ஆன்மீகம் பேசினால் கோபம் வரும். என் வலியை யாராவது தாங்கிக் கொள்ளப் போகிறார்களா? இதை மாற்றப் போகிறார்களா? அப்புறம் எதற்கு இது என்றெல்லாம் தோன்றியது. அப்பாவிடம் இந்த ஆன்மீகம் வேண்டாம் என்று நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். அப்பா ரமண மகரிஷியின் போதனைகளை எல்லாம் படித்துக் காண்பிப்பார். "இதெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்" என்பேன். என்னுடைய வலியும், வேதனையும் அப்படி.
அதெல்லாம் ஆரம்பத்தில்தான். பின்னர் அந்த உபதேசங்கள் மெல்ல மெல்ல என்னுள் ஊறி, வாழ்க்கை பற்றிய உண்மையான புரிதல் வந்தது. 'நான் இந்த உடலல்ல; ஆன்மா' என்பது புரிந்ததால்தான் நான் இப்போது இப்படி இருக்கிறேன். உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நெருக்கடியான காலம்... அப்பா இரண்டு மணி நேரத்தில் அண்ணாமலையில் ஏறி, இறங்கி விடுவார் அப்பா. பௌர்ணமிக்குப் பௌர்ணமி என்னையும் வீல் சேரில் கூட்டிக்கொண்டு மலை சுற்றி வருவார். பிராணாயாமம், தியானம், யோகம் எல்லாம் செய்வார். அவருடன் கிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த நண்பர்கள் அமெரிக்கா உள்படப் பல நாடுகளில் உயர்ந்த பதவிகளில் இருந்தார்கள். அவர்களுக்கு யோகம் குறித்த சி.டி.க்களை அனுப்பி "ஸ்ட்ரெஸ் வேண்டாம். தியானம், யோகம் செய்யுங்கள்" என்று அறிவுரை சொல்வார். நல்ல ஆரோக்கியமாக இருந்தார். ஆனால், திடீரென 57 வயதில் மாரடைப்பில் காலமானார். அதை என்னால் தாங்கவே முடியவில்லை. அவர் வாழ்க்கையே ஒரு தவம்தான். அது திடீரென முடிந்துபோகுமென நான் நினைக்கவில்லை.
அப்பாதான் குடும்பத்தின் அச்சாணி. அவர் இல்லை. இனி என்னை யார் எழுப்பி உட்கார வைப்பார்கள்? காய்கறி யார் வாங்கி வருவார்கள்? பேங்க்கில் என்ன இருக்கிறது? பல கேள்விகள். அம்மாவுக்கு செக்கில் கையெழுத்துப் போடக்கூடத் தெரியாது. அப்பாவிடம் நான் எதுவும் கவலைப்பட்டுக் கேட்டால் "நீ ஏன்பா கவலைப்படறே. நான் பார்த்துக்கறேன். நான் உங்க எல்லாருக்கும் எல்லாம் செஞ்சுட்டு கடைசியாதான் போவேன்" என்பார். அப்படிப்பட்டவரின் இழப்பை என்னால் தாங்கவே முடியவில்லை. நான் அதுவரை செல்ஃபோன் கூடப் பயன்படுத்தியதில்லை. 2007ல் அப்பா மறைந்த அன்றுதான் நான் ஃபோன் செய்து வேண்டியவர்களுக்குத் தகவல் சொன்னேன்.
அங்கு வந்த எல்லாரும், "இதுவரை அப்பா உன்னைப் பார்த்துக் கொண்டார். அம்மாவுக்கும் வயதாகிவிட்டது. உன் எதிர்காலத்தை நீ யோசித்துக் கொள்" என்று சொன்னார்கள். நான் சிந்திக்க ஆரம்பித்தேன். ஆனால், அப்பா மறைந்த நான்கு நாட்கள் கழித்து அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. அம்மாவைச் சென்னைக்கு அழைத்துச் சென்றோம். "ஆபரேஷன் வேண்டாம். மருந்து சாப்பிட்டால் போதும்" என்று டாக்டர் சொன்னார். அப்பா, அம்மா தவிர வேறு யார் முகத்தையுமே நான் பார்த்ததில்லை. என்ன செய்யப் போகிறேன் என்று கலக்கம் ஏற்பட்டது. மிக நெருக்கடியான காலகட்டம் அது.
அம்மாவுக்கு ஆபரேஷன் என்னைத் தூக்கிச் சேரில் உட்கார வைத்தாலே அம்மாவுக்கு நெஞ்சுவலி வந்துவிடும். நாளடைவில் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. எப்படிச் செய்யப் போகிறோம், பணத்துக்கு எங்கே போவது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. திடீரென்று முடிவெடுக்கும் பொறுப்பு என்மீது. தற்காலிகமாகச் சென்னைக்குச் சென்றோம். அங்கே, அந்த டாக்டரிடம் போகவேண்டாம், சரியாகாது என்றெல்லாம் சொன்னார்கள். மீறி ஏதாவது சொன்னால் "உனக்கே கை, கால் சரியில்லை. உதவலாம் என்று வந்தால், சொல்வதைக் கேட்காமல் உன் இஷ்டத்துக்குத்தான் செய்வாய் என்றால் என்ன அர்த்தம்?" என்று பேசினார்கள்.
அப்போது அப்பாவின் நண்பர் முரளி அங்கிள் ஃபோன் செய்தார். அவர் என்னை இரண்டு வயது முதலே தூக்கி வளர்த்தவர். அவரால் ஒரு காரணத்தால் நேரில் வர முடியவில்லை என்றும், என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகவும், அதற்காக பாலாஜி என்ற நண்பரை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். நான் அம்மாவின் ஹார்ட் பிரச்சனை பற்றிச் சொல்லி அதற்கு டாக்டர் சத்தியமூர்த்தியின் அப்பாயின்ட்மெண்ட் பெற்றுத் தருமாறு கேட்டேன். அவரது அப்பாயின்ட்மெண்ட் கிடைக்க ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குடியரசுத் தலைவரின் மருத்துவக் குழுவில் சீஃப் கார்டியாலஜிஸ்ட் ஆக இருந்தவர். நான் முன்னர் சொன்ன பாலாஜியின் உறவினர் டாக்டர் சத்தியமூர்த்தி! அடுத்த நாளே அப்பாயின்ட்மெண்ட். அம்மாவின் சிகிச்சை நல்லபடியாக முடிந்து திருவண்ணாமலை திரும்பினோம். இதுதான் கடவுளின் கருணை. நான் எதுவும் செய்யவில்லை, எல்லாம் கடவுள் நடத்தி வைக்கிறார் என்ற உண்மை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.
மரண அனுபவம் "நான் உடலல்ல; ஆன்மா" என்ற புரிதல் வர எனக்கு இரண்டு முறை ஏற்பட்ட Near Death Experience காரணம். அது 2001ம் வருடத்தின் ஒரு நாள், திடீரென மூச்சுவிட மிகவும் சிரமமாகப் போய்விட்டது. உட்கார வைத்தால் மூச்சுவிட முடியவில்லை. படுத்தால் சரியாகி விடும். உட்கார்ந்தால் மூச்சுத் திணறி, உடம்பெல்லாம் நீலமாகிவிடும். இது மூன்று மாதம் தொடர்ந்தது. மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. சாப்பிடுவது உட்பட எல்லாமே படுத்தபடிச் செய்யவேண்டும்! படுக்கைப் புண் வந்துவிட்டது.
ஒருநாள் அம்மா, "நீ ரெண்டு நிமிஷம் சேரில் உட்கார்ந்து கொள். இந்தப் படுக்கை விரிப்புகளை மாற்றிவிடுகிறேன்" என்று சொல்லி, என்னைச் சேரில் உட்கார வைத்தார். எனக்கு மூச்சுத் திணறி, கண்கள் சொருகிவிட்டன. நினைவு போய்விட்டது. அம்மா திரும்பிப் பார்ப்பதற்குள் அப்படி ஆகிவிட்டது. அம்மா ஷீட் மாற்றி என்னைப் படுக்க வைக்கும்போது உடலில் மூச்சு இல்லை. அம்மா நான் இறந்துவிட்டதாக நினைத்து, பக்கத்து அறையில் படுத்திருந்த எனது பாட்டியைக் கூப்பிட்டார். பாட்டி காஞ்சி மகாப் பெரியவரின் பரமபக்தை. பெரியவரே தனது படம் ஒன்றை பூஜிப்பதற்காக அவருக்குக் கொடுத்திருந்தார். அந்தப் படத்தைக் கொண்டு வந்து என் நெஞ்சில் வைத்து பாட்டி கதறி அழுதார்.
உடம்பிலிருந்து வெளியேறிய நான் மேலே இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது உடலில் இரண்டு கால்களும் மடிந்து இருக்கின்றன. பாட்டியும் அம்மாவும் அழுகிறார்கள். எனது முட்டியின் அருகில் பரமாச்சாரியாரின் படம். படத்தைப் பார்த்த அடுத்த கணம் நான் என் உடலில் இருந்தேன். எனக்கு நினைவு திரும்பிவிட்டது! "எனக்கு என்ன ஆச்சு, வீல் சேர்ல இருந்த நான் எப்படி பெட்டுக்கு வந்தேன்?" என்று அம்மாவிடம் கேட்டேன். அம்மா "ஒன்றுமில்லை, டாக்டர் வந்து பார்ப்பார்" என்றார்.
பின்னர் நான் அம்மாவிடம் நடந்தையெல்லாம் சொன்னேன். நினைவு திரும்பும் முன்னால் நான் 'தம்ப்ஸ் அப்' மாதிரி விரலைக் காட்டி, "Yogi Ramsurathkumar, I won" என்று சொன்னதாக அம்மா சொன்னார். அது எனக்கு நினைவில்லை. ஆனால், அதற்குப் பிறகு எனக்கு முன்போல் உட்கார்ந்து கொள்ள முடிந்தது. மூச்சுப் பிரச்சனை சரியாகிவிட்டது. டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு எல்லாம் நார்மல் என்றார்கள். அவர்களிடம். "மூன்று மாதங்களாக எனக்கு இப்படி மூச்சுவிடும் பிரச்சனை இருந்தது. படுத்ததும் சரியாகிவிடும்" என்றதும், "உங்களுக்கு ஹார்ட்டில் பிளாக் இருந்திருக்கிறது. உட்காரும்போது நல்ல ரத்தம் அங்கு போகமுடியாமல் பிரச்சனை வந்திருக்கிறது" என்றார்கள். "சரி, அது எப்படிச் சரியானது?" என்று கேட்டால். "அந்த பிளாக் தானாகக் கரைந்திருக்கும்" என்றார்கள்.
மறுபடி மரண அனுபவம் இரண்டாவது அனுபவம் ஜூலை 9, 2008ம் நாள் நடந்தது. அதாவது விபத்து நடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு. மதியம் சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந்தேன். எனக்கு அப்போது திடீர் திடீரெனக் கை, கால்கள் உதறும். அப்போது வயிற்றுக்குக் கீழே எல்லாமே இழுத்துப் பிடிக்கும். மூச்சே விடமுடியாது. காலை மடக்கிச் சாய்த்து அமர வைத்தால் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். அன்று அப்படிச் செய்தும் சரியாகவில்லை. மூச்சு விடமுடியவில்லை. அம்மாவைக் கூப்பிடக்கூட முடியவில்லை. கஷ்டப்பட்டுக் கூப்பிட்டு அம்மா வரும்போது, "அம்மா.. ஐ யாம் டையிங்" என்றேன். அம்மா பதறிப்போய் என்னன்னவோ செய்தார். டிரெஸ்ஸைத் தளர்த்துகிறார், முதுகைத் தட்டுகிறார். எதுவும் பலனளிக்கவில்லை. மீனைத் தரையில் தூக்கிப் போட்டால் எப்படித் துடிக்குமோ அப்படி உடல் துடிக்கிறது. அதை நான் உணர்கிறேன். எனக்கு மூச்சு இழுக்க ஆரம்பித்துவிட்டது. சட்டென்று எனக்கு பயம் போய்விட்டது.
முதலில் நடந்த விபத்துக்குப் பிறகு எனக்கு எப்போதும் பயமாகவே இருக்கும். அப்பா, அம்மா இல்லாவிட்டால் என்ன ஆவேன் என்றெல்லாம் யோசிப்பேன். பயங்கரமான கனவுகள் வரும். அந்தப் பயம் அன்றைக்குப் போய்விட்டது. நடக்கும் எல்லாவற்றையும் நான் உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் இது உடலுக்கு வெளியிலான அனுபவமல்ல. மெல்ல மெல்லப் பிரக்ஞை போக ஆரம்பித்தது. அப்போது நான் உரத்த குரலில் "I surrender to the will of my Master" என்கிறேன். மூச்சு நின்றுவிட்டது. உடல் நீலம் பாரித்துச் சில்லிட்டுவிட்டது.
அம்மா போய்ப் பாட்டியை அழைத்து வருகிறார். இப்போதும் பாட்டி அதே பரமாச்சாரியாரின் படத்தை என் அருகில் வைத்து, "எழுந்திரு, எழுந்திரு" என்று என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு எந்த உணர்வும் இல்லை. "யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார்" என்று அம்மா கதறும் குரல் வெகு தூரத்தில் கேட்கிறது. அதை நான் உற்றுக் கவனித்தபோது, அந்த ஒலி அதிகமானது. கொஞ்சம் அருகே கேட்டது. இன்னும் கவனித்ததில் மிக அருகே கேட்கிறது. அடுத்த விநாடி எனக்குப் பிரக்ஞை வந்துவிட்டது. பாட்டி என்னை அடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. "I am back. I am back. Don't beat me" என்று கத்தினேன். அம்மா ஏற்கனவே இருதய நோயாளி. அந்தச் சம்பவத்தால் வலி அதிகமாகி, மாத்திரையைப் போட்டுக்கொண்டு அப்படியே படுத்துவிட்டார். அதன் பிறகு நானே ஃபோன் செய்து ஓர் உதவியாளரை வரச் சொன்னேன். அவர் வந்து என்னைப் படுக்கையில் படுக்க வைத்தார். பின்னர் டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னார்.
கிட்டத்தட்ட 8 நிமிட நேரம் மூச்சுப் பேச்சில்லாமல் இருந்திருக்கிறேன். 30 விநாடிக்கு மேல் மூளைக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் 'மூளைச்சாவு' ஏற்படும் என்கிறது மருத்துவம். நான் பிழைத்தது 'மிராக்கிள்' என்றுதான் சொல்லமுடியும்.
புதிய புரிதல் எனக்குச் 'சரணாகதி' வருவதற்கான ஒருவழி இது என்பதாகத்தான் இந்த அனுபவத்தை நான் நினைக்கிறேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனக்குப் பயம் போய்விட்டது. புரிதல் வந்துவிட்டது. நான் இந்த உடலல்ல. ஏதோ சில காரணங்களுக்காக, கடவுளின் செயல்களைச் செய்வதற்கு ஒரு கருவியாக நான் இருக்கிறேன். இப்படிப் படைக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. வாழ்க்கை பற்றிய தெளிவு வந்துவிட்டது. என்னுடைய பார்வைக்கோணம் முழுவதுமாக மாறிப்போனது. வெற்றி என்பது என்ன? எதையாவது அடைவதா? அல்லது அடைவதற்கு எதுவுமே இல்லை என்னும் நிறைவை அடைவதா? அப்போது முதல் எதையாவது சாதித்து இந்த உலகில் இருக்க வேண்டும் என்ற தேவை எனக்குப் போய்விடது. ஆனால், கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை வைத்திருக்கிறார் என்னும்போது, அவர் கொடுக்கின்ற வேலைகளைச் செய்யவேண்டும், அது நமது கடமை என்ற எண்ணம் வலுப்பட்டது.
அம்மாவுக்கு இதயப் பிரச்சனை இருக்கிறது. ஏற்கனவே முட்டியில் ஓர் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. ஏப்ரலில் மற்றுமொரு சிகிச்சை இருக்கிறது. பாட்டிக்கு 90 வயதாகிவிட்டது. அப்பா காலமாகிவிட்டார். இப்படி எனக்கும் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. நாளை என்னை எழுந்து உட்கார வைக்கப் போவது யார், குளிக்க வைப்பது யார். எதுவுமே தெரியாது. But we are able to survive. Not only able to survive we are able to flourish. This is Grace.
Soulfree பிறந்தது நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஒருவர் தண்டுவடப் பாதிப்பால் முடங்கிப் போனால், குடும்பத்தினரின் நிலைமை என்ன? அவர்களுக்கு அறிவுரை கூறி வழிநடத்தவோ, மேம்படுத்தவோ அரசு உதவிகள் இல்லை. அதிலும் அவர்கள் ஏழைகளாக இருந்துவிட்டால் வாழ்க்கையே அவர்களுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் நரகமாகிவிடும். எனக்கு ஓரளவு வசதி இருந்தது, அப்பா, அம்மா துணை இருந்தனர். அப்படி இல்லாதவர்கள் நிலை?
திருவண்ணாமலையில் இடுப்புக்குக் கீழே செயல்பாடு இல்லாத இரண்டு பெண்கள் இருந்தனர். ஆனால், கைகள் வேலை செய்யும் என்பதால் வீல் சேரில் அமர்ந்தபடியே வீடு கூட்டுவது, சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது எல்லாம் செய்து வந்தனர். ஆனால், குடும்பத்தினரின் வசவுகள் அவர்களை நோகடித்தது. ஒருநாள் அவர்களுக்கு நெருக்கமானவர்களே "நீ எல்லாம் தண்டச் சோறு, எதற்காக உயிரோடு இருக்கிறாய்? உன்னாலதான் அண்ணன், தம்பி, தங்கைக்குக் கல்யாணம் ஆகவில்லை, உறவினர்கள் வருவதில்லை" என்றெல்லாம் திட்டி, பூச்சி மருந்தை வாங்கி வந்து, பக்கத்தில் வைத்துவிட்டார்கள். அணு அணுவாக இப்படி நொந்து சாவதைவிட, ஒரேயடியாகப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று முடிவுசெய்து அவர்கள் விஷத்தைக் குடித்து இறந்து போய்விட்டார்கள். எனக்குத் தெரிந்த சிறிய வட்டத்தில் இரண்டு பேர் என்றால், இந்தியா முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள், அவர்கள் நிலைமை என்ன ஆகும் என்று தோன்றியது.
அதுபோல என் அப்பாவின் நண்பர்கள் ஒரு சமயம், "உன் குடும்பத்தால் உன்னை சப்போர்ட் பண்ண முடியவில்லை என்றால் நீ என்ன செய்யப் போகிறாய்" என்றார்கள். நானும் யோசித்தேன். சரி, என்னைப் போன்றவர்கள் பணம் கொடுத்து நிரந்தரமாகத் தங்குவதற்கு ஏதாவது நிறுவனம், அமைப்பு இயங்குகிறதா என்று தேடினேன். இல்லை, எதுவுமே இல்லை. புனேவில் ஒன்றே ஒன்று இருக்கிறது. ஆனால், அது போரில் காயமுற்ற ராணுவ வீரர்களுக்கானது. ஓரளவு வசதியுள்ள எனக்கே இந்த நிலைமை என்றால் வசதியற்ற ஏழைகளின் நிலை? அம்மாவிடம் இதைப்பற்றிச் சொன்னபோது, "நீ ஆரம்பி. உன்னால் முடியும்" என்றார். "என்னையே என்னால் பார்த்துக்கொள்ள முடியாது. நான் போய் எப்படி! எனக்கு எதுவுமே தெரியாதே" என்று தயங்கினேன். "அம்மா, உன்னால் முடியும்" என்றார். அதுதான் விதை. அப்படித்தான் 2013ல் Soulfree ஆரம்பிக்கப்பட்டது.
Soulfree என்ன செய்கிறது? சோல்ஃப்ரீ மூலம் இன்று 500 பேருக்கு மேல் உதவி பெறுகிறார்கள். அவர்கள் இருக்குமிடத்திற்கே எங்கள் உதவி போய்ச் சேருகிறது. அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறோம். போதிய வருமானம் இல்லாமதவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குகிறோம். தேவைப்படுபவர்களுக்குச் சக்கர நாற்காலி வழங்குகிறோம். அதுபோக வருடத்திற்கு இரண்டு முறை, மருத்துவ உபகரணங்கள் உள்பட 34 பொருட்கள் கொண்ட பெட்டகம் ஒன்றைத் தருகிறோம். சமீபமாக ரீசார்ஜபிள் எமர்ஜென்சி விளக்கு கொடுக்கிறோம். காரணம், படுக்கையிலேயே படுத்த நிலையில் வாழ்ந்த ஒருவருக்கு படுக்கைப்புண் வந்து, அதை மின்சாரம் இல்லாத ஒரு நாளில் எலி வந்து கடித்துவிட்டது. மேலும் புண்ணாகி, அவஸ்தைப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் குணமானது. எங்கள் பயனாளிகளில் பலர் கிராமத்தில், குடிசைகளில் வாழ்பவர்கள். "தாய் விட்டுச் சீதனம் வருவதுபோல எங்களுக்கு சோல்ஃப்ரீயின் பெட்டகம் வருகிறது என்று ஒருவர் எங்களுக்கு எழுதியிருந்தார்." படுக்கைப் புண்ணினால் அவதிப்படுபவர்களுக்கு 'ஏர் பெட்' அளிக்கிறோம். பலர் சுயமாகச் சம்பாதிக்கவும் உதவுகிறோம்.
எங்களுடைய தன்னார்வலர்கள் முழுநேர வேலையாக விண்ணப்பதாரரின் ஊர், வயது, குடும்பச் சூழல் எல்லாத் தகவல்களையும் - அவர்களுடைய urine tube size வரை - சேகரித்துச் சரிபார்ப்பார்கள். பின்னர் உதவி செய்வோம். சோல்ஃப்ரீ ஆரம்பித்து ஐந்து வருடமாகி விட்டது. வெளி மாநிலங்களில் இருந்தும் உதவி கோரி விண்ணப்பங்கள் வருகின்றன. தற்போதைக்கு எங்கள் கவனம் தமிழகத்தின் மீதுதான் உள்ளது. இருக்கும் ஆதாரங்களை வைத்து என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறோம்
தொழில் செய்யும் ஆர்வம் உள்ளவர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை, வழிகாட்டல் செய்வதுடன் தேவையானால் நிதியும் அளிக்கிறோம். எங்கள் வேலை முதலில் அவர்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தூண்டுவது. எங்கள் பயனாளிகளில் துணிகளுக்கு இஸ்திரி செய்து சம்பாதிப்பவர் இருக்கிறார். நாங்கள் 3 ஏக்கர் நிலம் லீஸுக்கு வாங்கிக் கொடுத்து, அதில் விவசாயம் செய்து, 100 மூட்டைக்கு மேல் நெல் அறுவடை செய்து, பல பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு ஒரு பயனாளி உயர்ந்திருக்கிறார்.
நிதித் ஆதாரம் பணத்தைப்பற்றி நான் யோசித்ததோ கவலைப்பட்டதோ இல்லை. பணம் இல்லாவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை. தனிப்பட்ட முறையில் என்னுடைய தேவைகள் மிகக்குறைவு. மீடியாமூலம் என்னைப்பற்றி அறிந்து பள்ளி, கல்லூரிகளில் இருந்தெல்லாம் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைப் பயிற்சி அளிப்பதற்காக அழைப்பார்கள். பெரிய கம்பெனிகளில் பேசக் கூப்பிடுவார்கள். அங்கு நான், "எனக்கு எதுவும் வேண்டாம், என் அமைப்புக்கு உதவுங்கள். அதற்கு வருமான வரிவிலக்கு உண்டு" என்று கோரிக்கை வைப்பேன். இப்படி வருவதுதான் எங்கள் நிதி ஆதாரம். எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்கிறோம். கடவுளின் கருவியாக நாம் செயல்படும்போது நம்முடைய தகுதி என்பது நம்முடைய நேர்மையில்தான் இருக்கிறது. நிதி உதவி யாருக்கு, என்னென்ன போகிறது, அவர்களுடைய ஃபோன் நம்பர் என்ன என்று எல்லாவறையும் நன்கொடையாளருக்கு அனுப்பி விடுவோம். கையில் பணமாக வாங்குவதில்லை. எல்லாமே வங்கிமூலம் தான். 80G வரிவிலக்குப் பெற்றிருக்கிறோம். வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்காக (FCRA) விண்ணப்பித்திருக்கிறோம். விரைவில் அது கிடைத்து விடும். (Soulfreeக்கு உதவ)
உறவும் நட்பும் என் அம்மா எனக்குக் கடவுள் மாதிரி. கடந்த 21 வருடங்களில் அவர் இரவில் 8 மணி நேரம் தொடர்ந்து தூங்கியதாகச் சரித்திரம் கிடையாது. காரணம், இரண்டு முறையாவது என்னை மாற்றிப் படுக்க வைக்கவேண்டும். எனக்கு படுக்கைப்புண் இருக்கிறது. அதுமாதிரி பாட்டி எனக்கு உறுதுணையாக இருப்பவர். நண்பர்கள் சப்போர்ட் இல்லாமல் என்னால் வாழ முடியாது. இங்கே வந்திருக்கும் பாலாஜி, தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் குழுவின் கோச் ஆக இருக்கும் ஹேமமாலினி போன்றவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி வருகிறார்கள். நான் திருவண்ணாமலையிலிருந்து தனியாகச் சென்னை வந்தால்கூட இங்கே உதவ நண்பர்கள் இருக்கிறார்கள். என்மீது அத்தனை அன்பு. இது ஒரு கொடுப்பினை.
கனவுக் கிராமம் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கவும், தங்களால் முடிந்த தொழில்களைச் செய்து, அந்த வருமானத்தை அவர்களே அனுபவிக்கவும் ஒரு தற்சார்பு கிராமத்தை உருவாக்கும் ஆசை இருக்கிறது. அதற்குப் பல ஏக்கர் நிலம் வேண்டும். கட்டடம் கட்ட வேண்டும். அதற்குப் பெரிய அளவில் நிதி வேண்டும். பகையோ, வன்மமோ, விரோதமோ இல்லாமல் எல்லாரும் எல்லாரையும் ஏற்றுக்கொண்டு இனிமையாக வாழும் கிராமமாக அது அமையவேண்டும். என்னை மாதிரி இருப்பவர்கள் யாரும் அவமானப்படுத்தப்படாமல், சித்திரவதைப்படாமல், தற்கொலை முயற்சிக்குச் செல்லாமல் ஆனந்தமாக வாழக்கூடிய இடமாக அந்தக் கிராமம் இருக்கவேண்டும்.
குறுகிய கால மறுவாழ்வு மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரவேண்டும். நல்ல மனிதர்கள் எங்களுடன் கை கோத்துச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது என்னுடைய கனவல்ல. தெய்வசங்கல்பம். என் வேலை serving, inspiring, empowering. அவ்வளவுதான். வழிமுறைகளை பகவான் ஏற்படுத்திக் கொடுப்பார். இவை என்னுடைய வாழ்நாளில் நடக்காவிட்டாலும், எதிர்காலத்தில் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புன்னகை மாறாமல் பேசுகிறார் ப்ரீத்தி. "வாழ்க்கையில் இழக்கக்கூடிய எல்லாவற்றையும் நான் இழந்துவிட்டேன். ஆனால் நான் சந்தோஷமாக இருக்கிறேன். சிரிக்கிறேன். ஆனால், எல்லாமே கிடைத்திருக்கும் பலரால் இன்றைக்குப் புன்னகைக்க முடியவில்லை. சந்தோஷமாக இருக்க முடியவில்லை. சிரியுங்கள். சந்தோஷமாக இருங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே." சொல்லிவிட்டுப் புன்னகைக்கிறார் ப்ரீத்தி. நம்மை அறியாமல் கண் கலங்குகிறது. சொல்ல வார்த்தை இல்லாமல் வாழ்த்துக் கூறி விடை பெறுகிறோம்.
சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்.
*****
கிரிக்கெட் - கற்றதும், பெற்றதும் சிறுவயது முதலே கிரிக்கெட் எனது கனவு. அதற்காக நான் கடுமையாக உழைத்தேன். எனக்கானது 10 ஓவர் என்றால் நான் அதை முழுமையாக பௌலிங் செய்வேன். இன்றுவரைக்கும் எனது சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை. என்னைவிடச் சின்ன வயதில் யாரும் விளையாட வரவில்லை. சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டதனால் என்னுடைய டெக்னிக் பெர்ஃபெக்ட் ஆக இருந்தது. நீச்சலடித்ததால் தோளில் பலம் இருந்தது. பவுண்டரியில் இருந்து பந்து வீசினால் நேராக விக்கெட் கீப்பர் கிளவுஸுக்குள் போகும். பார்வையாளர்கள் நான் விளையாடும்போது "லோகி.. லோகி" என்று கூச்சலிடுவார்கள். அப்போது மேற்கிந்திய அணியில் கஸ் லோகி என்று ஒரு வீரர் இருந்தார். அவர் குள்ளமாக இருப்பார். நன்கு விளையாடுவார். என்னையும் குள்ளமானவர் என்று நினைத்தார்களே தவிர நான் வயதில் சிறியவள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அது எனக்கு ஒரு பெரிய பாராட்டு.
நான் under 19 டீம் கேப்டனாக இருந்தேன். தென் மண்டல டீமில் சேர்ந்து விளையாடுவதாக இருக்கும்போது விபத்து நிகழ்ந்தது.
- ப்ரீத்தி சீனிவாசன்
*****
மறக்கமுடியாத நாள் ஒருநாள் என்னைத் தூக்கிச் சேரில் உட்கார வைக்கவேண்டும். அம்மா இதயநோயாளி. அவரால் செய்யமுடியாத நிலை. இருந்தாலும் அவர் நான் பண்ணுகிறேன் என்று வந்தபோது, "வேண்டாம்மா. துணைக்கு இப்போது இருப்பது நீ ஒருத்திதான். நீயும் போய்விட்டால் நான் என்ன செய்வேன்! வேண்டாம்" என்று சொல்லிவிட்டேன். எனக்கு இப்படி ஆனதைத் தாங்க முடியாமல் வருந்தியதால்தான் அப்பா சீக்கிரம் போய்விட்டார். ஒரே துணையான அம்மாவையும் இழக்க நான் விரும்பவில்லை. அம்மா, சாலையில் அமர்ந்திருந்த சாதுக்களைக் கெஞ்சி, அவர்களில் ஒருவர் வந்து எனக்குத் தேவையான உதவியைச் செய்து சேரில் உட்கார வைத்துவிட்டுப் போனார். இதைவிடப் பரிதாபமான நாள் வேறென்ன இருக்க முடியும்!
- ப்ரீத்தி சீனிவாசன்
*****
தண்டுவடப் பாதிப்பு தண்டுவடப் பாதிப்பு (Spinal cord injuries) யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். உலகத்தில் எங்குமே அதற்குச் சிகிச்சை கிடையாது. அடிபட்ட புள்ளிக்குக் கீழே உள்ள அத்தனை நரம்புகளும் செயலற்றுப் போகும். அமெரிக்காவில் 38 நிமிடத்துக்கு ஒருவர் தண்டுவடம் பாதிக்கப்படுகிறார். ஆகவே இது அரியவகை பாதிப்பு அல்ல. 250,000 மில்லியன் நபர்கள் அமெரிக்காவில் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதற்கான புள்ளிவிவரம் கிடையாது.
உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. இதில் 43% பெண்கள். ஆனாலும் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் நிரந்தரமாகத் வாழக் காப்பகம் இங்கே கிடையாது. இருக்கும் சில இடங்களில் ஆறு மாதம், ஒரு வருடம் தங்கலாம். மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தாலும், அங்கிருந்து செல்கிறவர்கள் அதன் பிறகு என்ன ஆகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இது மிகப்பெரிய சோகம்.
- ப்ரீத்தி சீனிவாசன்
*****
முதுகுத்தண்டுவட வாரம்! ஒரு சமயம் புதிய தலைமுறை எனக்குப் 'பெண் சக்தி' விருது கொடுத்தது. எனது பேச்சால் கவரப்பட்ட சேனலின் தலைவர், "உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், செய்கிறோம்" என்றார். நான் பணம் கேட்பேன் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நானோ ஒரு வாரத்திற்கு உங்கள் சேனலில் 'முதுகுத் தண்டுவடப் பாதிப்பு' குறித்த விடியோக்களை ஒளிபரப்ப முடியுமா என்று கேட்டேன். அவர்களுக்கு ஆச்சரியம். ஆனால், ஒப்புக்கொண்டார்கள். செப்டம்பர் 5 எனது பிறந்த நாள். அன்றுதான் 'World spinal cord injury day' கூட. அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு தண்டுவடப் பாதிப்பு, மறுவாழ்வு குறித்து விவரமாக டாக்டர்கள் உரையாடி ஒலிபரப்பினார்கள். இந்தியத் தொலைக்காட்சிகளில் இது குறித்து ஒருவாரம் தொடர்ந்து ஒளிபரப்பானது இதுதான் முதன்முறையாக இருக்கும். ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவியும் செய்தார்கள்.
- ப்ரீத்தி சீனிவாசன்
*****
மாற்றுத் திறனாளிகளுக்குத் தடைக்கல் ஆகாதீர்கள் நான் மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டேன். கல்லூரிகளில் இங்கே மாடியில் தான் வகுப்பு நடக்கும்; லிஃப்ட் கிடையாது; பிற வசதிகள் இல்லை. 'இங்கே ஏன் படிக்க வருகிறீர்கள்?', 'உங்களுடைய டிஸெபிலிடி எங்கள் பட்டியலில் இல்லை' என்றெல்லாம் பல அலைக்கழிப்புகள். அமெரிக்காவில் 12வது படித்ததால் எனக்கு இங்கே கல்லூரியில் படிக்கத் தகுதி உண்டா என்று வேறு சிலருக்கு சந்தேகம். அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுமதிக் கடிதம் வாங்கி வந்த பிறகுதான் சேர்த்துக் கொண்டார்கள். மெடிகல் சோஷியாலஜி பட்ட வகுப்பில் சேர்ந்தேன். தேர்வு மட்டும் எழுதினால் போதும், பிராக்டிகல்ஸ் கிடையாது. அடுத்து எம்.எஸ்ஸி. சேரும்போது சேர்க்க முடியாது என்று மீண்டும் பிரச்சனை. ஆனால், அப்போதுதான் நான் சோல்ஃப்ரீ ஆரம்பித்திருந்தேன். அதுபற்றிப் பரவலாகச் செய்தி வெளியாகியிருந்தது. அதனால் என்னைப் பற்றி, என் பிரச்சனைகளைப் பற்றிப் பலருக்கும் தெரிய வந்திருக்கவே எனக்கு அட்மிஷன் கொடுத்தார்கள். அந்த வகையில் மீடியாவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவற்றின் சக்தி மிகப்பெரியது.
இப்போது எனக்கு ஐ.ஐ.டி.யில் பிஎச்.டி. செய்ய அட்மிஷன் கிடைத்திருக்கிறது. ஒரு காலத்தில் அஞ்சல்வழியே பட்டக்கல்விக்கே அனுமதி மறுக்கப்பட்டது. பின் போராடி ஆய்வு செய்யுமளவிற்கு வந்திருக்கிறேன் என்றால் அந்தத் தகுதி எனக்கு இருக்கிறது என்றுதானே பொருள். எனவே, ஒருவர் வீல் சேரில் இருக்கிறார், மாற்றுத்திறனாளி, அவரால் படிக்க முடியாது என்றெல்லாம் ஆர்வமுள்ள ஒருவரது கல்வியைத் தடை செய்யாதீர்கள் என்பதே எனது கோரிக்கை.
- ப்ரீத்தி சீனிவாசன்
***** |