அம்மாவின் பொய்கள் பற்றிக் கவிதை எழுதினார் ஞானக்கூத்தன், நம்மவரின் பொய்கள் பற்றி யார் எழுதப் போகிறார் கவிதை?
தரையில் கழுநீரையோ இரவில் தெருவில் குப்பைகளையோ கொட்டினால் லட்சுமி போய்விடுவாளாம்
விரித்த தலையோடு பெண்கள் வீதிப்படி தாண்டினால் பாவம் வந்து பிடித்துக் கொள்ளுமாம்.
மடிசார் புடவையின் மூன்று முடிச்சில் லட்சுமியும் சரஸ்வதியும் பார்வதியும் பத்திரமாக அமர்ந்திருக்கிறார்களாம்.
கற்பனைப் பொய்களும் மாய்மால மாரீச வார்த்தைகளும் சொல்லிச் சொல்லியே இந்து மதம் இந்த கதிக்கு வந்துவிட்டது.
துணிச்சலாக இந்துமதத்தை விமர்சித்து இப்படி ஒரு கவிதையை எழுதியிருப்பவர் நாத்திகவாதியோ, கடவுள் மறுப்பாளரோ, புரட்சி எண்ணம் கொண்ட அரசியல்வாதியோ அல்ல. தனக்கென்று உரிய பாரம்பரியத்தை விடாமல் கடைப்பிடித்து, அதே சமயம் அதில் சீர்த்திருத்த வேண்டிய விஷயங்களையும் தனது எழுத்து மற்றும் கட்டுரைகளில் வலியுறுத்தி, தன் வாழ்விலும் பின்பற்றி வந்த எழுத்தாளர் பூரணி எழுதியது இது. இக்கவிதையை எழுதியபோது அவருக்கு வயது 70. மேற்கண்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பு வெளியானபோது அவருக்கு வயது 90.
'பூரணி' என்ற பெயரில் சிறுகதை, கவிதை, கட்டுரைகளை எழுதிவந்த இவரது இயற்பெயர் சம்பூர்ணம். இவர், 17 அக்டோபர் 1913ல் சீதாலட்சுமி அம்மாள் - ராமசாமி ஐயர் தம்பதியினருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தையார் தமிழ்ப் பண்டிதர். தொல்காப்பியத்திற்கு எளிய உரை எழுதியவர். தாயாரும் தமிழார்வம் மிக்கவர். அந்தச் சூழலில் வளர்ந்ததால் பூரணிக்கு இயல்பாகவே தமிழார்வம் இருந்தது. தந்தை, பெண்கள் பள்ளி ஒன்றை உருவாக்கி, நடத்தி வந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேல் நன்கு நடந்து கொண்டிருந்த அப்பள்ளியை சில பொருளாதாரச் சூழல்களால் அன்னிபெசண்ட் அம்மையாரின் பொறுப்பில் ஒப்படைத்தார். அக்காலக் குடும்பச்சூழல் காரணமாகப் பூரணியால் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயில முடிந்தது. ஆனாலும் வாசிப்பு தொடர்ந்தது. தந்தை தமிழறிஞர் என்பதால் நிறையப் புத்தகங்களை வாங்கி வருவார். அதனைப் படித்து உலக அறிவையும், தந்தையின் சேகரிப்பில் இருந்த நூல்களைப் படித்து இலக்கிய ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டார். பக்தர்கள் சரித்திரம், பதிவிரதைகள், வீரப் பெண்மணிகள் போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டை, பெருமையைப்பற்றி விரிவாகப் புரிந்துகொள்ள உதவின. கூடவே தந்தை வாங்கிக் கொடுத்த நாவல்களையும் வாசித்து வந்தார். எழுத்தார்வம் சுடர்விட்டது.
பால்ய விவாகம் சகஜமாக இருந்த காலகட்டத்தில், 1926ல், இவரது 13ம் வயதில், 23 வயதான வைத்தீஸ்வரனுடன் திருமணம் நிகழ்ந்தது. தாராபுரத்தில் இல்லற வாழ்க்கை துவங்கியது. கணவர், தன் சகோதரர்களுடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றை நடத்திவந்தார். அதற்கு உறுதுணையாக இருந்தார் பூரணி. ஓயாத வேலை என்றாலும் அவ்வப்போது கிடைத்த ஓய்வுநேரத்தை வாசிப்பதிலும் சிறு சிறு கவிதைகள் எழுதுவதிலும் செலவிட்டார். கணவரும் மனைவியின் விருப்பம் அறிந்து ஆனந்தபோதினி, விகடன், கலைமகள், தமிழ்நாடு போன்ற இதழ்களுக்குச் சந்தா கட்டி வரவழைத்தார். 1929ல் இவரது முதல் கவிதையான 'தமயந்தி சுயம்வரக் கும்மி' வெளியானது. தான் கவிஞரானது பற்றிப் பூரணி, "நான் என் மன உளச்சலையும் வேதனையையும் பாட்டின் மூலம் வெளிப்படுத்த விரும்பவில்லை. பக்திப் பாடல்களும் எழுத முயலவில்லை. என் மனத்தை ஈர்த்த ஏதேதோ விஷயங்களைப் பாட்டாக்கினேன். தடங்கலின்றி வார்த்தைகள் மனத்திலிருந்து வெளிவரத் தொடங்கின. பிசிர் இல்லாத மரபுக் கவிதைகள் பிறக்கத் தொடங்கின" என்கிறார். தொடர்ந்து 'நலங்குப் பாடல்கள்', 'கோலாட்டப் பாட்டு', 'வில்லுப் பாட்டு' என விதவிதமாக எழுதினார். இவர் எழுதிய 'தேசிய ஓடம்', 'நாகரீக ஓடம்', 'நலங்குப் பாடல்கள்' போன்றவை அக்காலத்துக் கல்யாணங்களில் விரும்பிப் பாடப்பட்டன. மாதர் சங்கத்தினருக்காக 'இந்திய சுதந்திர வரலாறு' பற்றிய வில்லுப்பாட்டை அரங்கேற்றிப் பாராட்டைப் பெற்றார். பள்ளிக் குழந்தைகளுக்காகவும், அவர்கள் நடத்தும் நாடகங்களுக்காகவும் நிறையப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
கவிதைகள் மட்டுமல்லாமல் சிறுகதைகளும் நிறைய எழுதியிருக்கிறார் பூரணி. 1937ல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சித்தன் இதழில் இவரது முதல் சிறுகதை வெளியானது. கோவையிலிருந்து வெளிவந்த பாரத ஜோதி இதழிலும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தாயுமானவரின் பாடல்கள் பல சிறுவயது முதலே பூரணிக்கு மனப்பாடம். அதுபோல வேதநாயகரின் சர்வசமய சமரச கீர்த்தனையும் இவரது மனம் கவர்ந்த ஒன்று. இந்நிலையில் இவர் வாசித்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்று நூல் இவருள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அவரையே மானசீக குருவாகக் கொண்டு அவரது கொள்கைகளின் படி வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் ஹிந்திமொழியின் மீது ஆர்வம் கொண்டு விஷாரத் நிலைவரை தேர்ச்சி பெற்றார். மாணவர்களுக்கு ஹிந்தி ட்யூஷன் நடத்தி வந்தார். பிரபல மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத், தாராபுரத்தில் பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு வசித்த பூரணியிடம் ஹிந்தி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலகாலத்திற்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தவர் மகன்களுடன் வசிக்கலானார். அக்காலகட்டத்தில் தனது ஓய்வு நேரங்களில் கதை, கவிதை, கட்டுரை எனப் பலவற்றை எழுதும் வழக்கத்தை வைத்திருந்தார். கவிதை ஆர்வம் காரணமாகப் பொன்னடியான் நடத்திய கடற்கரைக் கவியரங்கங்களில் பங்கேற்றுக் கவிதை வாசித்திருக்கிறார். பாரதி கலைக்கழக அரங்குகளிலும் கவிதைகள் வாசித்திருக்கிறார். இவரது கவிதைகள் நாரண. துரைக்கண்ணன், நா.சீ. வரதராஜன் (பீஷ்மன்), மாலன் போன்றோரால் பாராட்டப்பட்டவை. ஆழமான அதே சமயம் அழகியல் அம்சமும் குறையாத உட்பொருள் உடைய கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறார் பூரணி.
சங்கொடு கிளிஞ்சல் செப்பாக்கி தன் மடி நிறையத் தான் தூக்கி இங்காரோடு விளையாட எகிறிக் குதித்து வருகின்றாய்...
என்ற 'அலைகள்' பற்றிய இவரது கவிதை அக்காலத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.
1992ல் தனது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து 'பூரணி நினைவலைகள்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். சுமங்கலியாக மரணமடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசையாக இருக்கக்கூடிய சமூகத்தில், இவர் முன் அந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "எனக்கு இப்படி ஒரு ஆசை இல்லை. என் கணவர் வயோதிகத்தால் மூளை கலங்கியவராக இருக்கிறார். அவர் ஒன்று கிடக்க ஒன்று ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார். அவரை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மனைவியான நான் இருப்பதால் இது முடிகிறது. நான் இறந்துவிட்டால் அவர் சீரழிந்து போய்விடுவார். அவரைக் கரை ஏற்றி விட்டுத்தான் நான் சாக விரும்புகிறேன். என் பிணம் பூவும், பொட்டும், மாலையும், மரியாதையும் பெறாமல் போனால் பரவாயில்லை. காலவெள்ளத்தில் எல்லாம் ஒருநாள் மறைந்துதான் போய்விடப் போகிறது" என்றார்! (பூரணி நினைவலைகள்)
'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்த மூத்த பெண் தமிழ்க் கவிஞர் இவர் ஒருவர்தான். மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். கபீர் கவிதைகளையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் சில கவிதைகளையும், சமகால இந்திக் கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி போன்ற இலக்கிய இதழ்கள் சிலவற்றில் இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார். திண்ணை இணைய இதழிலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. 2003ல், எழுத்தாளர் அம்பையின் முயற்சியால் இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு 'பூரணி கவிதைகள்' என்ற தலைப்பில் காலச்சுவடு மூலம் வெளியானது. அந்த நூலின் முன்னுரையில் அம்பை, "வாழ்வின் இடைஞ்சல் நிறைந்த பாதைகளில் போகும்போது கவிதையைத் தனக்கான ஆற்றாகவும், தன் வெளிப்பாடாகவும் அமைத்துக்கொண்டவர் பூரணி. 'பூரணி கவிதைகள்' (2003) என்ற தலைப்பில் உள்ள இத்தொகுப்பு பல சரித்திர நிகழ்வுகளை, உணர்வுகளை உள்ளடக்கியது. ஆரம்பத்தில் அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டமும் இசையும் நிறைந்த நிகழ்வுகளுக்கான பாட்டுக்களாகத் தொடங்கி அவற்றினுள் நாடு என்ற கருத்தைப் புகுத்தி எழுதும் அவர், இயற்கை, இடம், இருப்பு இவற்றையும் கவிதைப் பொருளாக்குகிறார். நாட்செல்ல நாட்செல்ல, வாழ்க்கைக்கும் தனக்கும் உள்ள உறவுக்கு ஒரு பாலமாய் கவிதையைக் கட்டுகிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார். பூரணியின் கவிதைகளை மலையாளக் கவிஞர் லலிதா அந்தர்ஜனம் கவிதைகளுடன் ஒப்பிடுகிறார் எழுத்தாளர் இரா. முருகன். அவர், தனது 'இரண்டாம் ராயர் காப்பி கிளப்' என்ற நூலில் பூரணியின் சிறுகதைகள் பற்றிக் குறிப்பிடும்போது, "சொத்தை சொள்ளையாக வந்து பக்கத்தை ரொப்பும் அத்தான் அம்மாஞ்சிக் கதை இல்லை அவை. வடநாட்டிலிருந்து காங்கிரஸ் தலைவர் தென்னகம் வரும்போது வைத்த விருந்தில் தலித் தோழர்களையும் கலந்துகொள்ளச் செய்து சாதிப் பிரஷ்டமானவனின் கதையான 'சுவர்ணம்', சிற்றன்னை என்றால் கொடுமைக்காரி என்று நம் சினிமாக்களும், தொடர்கதைகளும் சொன்னதை மீறி சிற்றன்னையை அன்பும் நேசமும் கொண்ட பெண்மணியாகக் காட்டிய 'சிற்றன்னை கோவில்' - இது சித்தி ராதிகா நித்யஸ்ரீ குரலோடு நம் வீட்டு வரவேற்பரைக்குள் ராத்திரி எட்டு மணிக்குச் சின்னத்திரையில் நுழையக் கிட்டத்தட்ட அறுபத்தைந்து வருடம் முந்தி – பூரணியம்மாள் எழுதிய எந்தக் கதையும் சோடை போகவில்லை" என்று பாராட்டுகிறார்.
தனது வாழ்க்கை நிகழ்வுகளைக் கதை, கவிதை, கட்டுரை வடிவில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் பூரணி. 93ம்வயதில் இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு (பூரணி சிறுகதைகள், செவிவழிக் கதைகள்) நூலாக வெளியானது. 2004ம் ஆண்டிற்கான திருப்பூர் சக்தி இலக்கிய விருது இவருக்குக் கிடைத்தது. 2007ல், பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்க ஆண்டுவிழாவில் தங்கப் பதக்கமும் வாழ்நாள் இலக்கிய சேவைக்கான பாராட்டும் பெற்றார். மூத்த மகனான அமரர் கே.வி. ராமசாமி, 70-80களில் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர். ஞானரதம் இதழுக்கு ஆசிரியராக இருந்தவர். கவிஞர் மற்றும் எழுத்தாளரான க்ருஷாங்கினி இவரது மகள்.
நவம்பர், 17, 2013 அன்று தனது நூறாவது வயதில் காலமானார் பூரணி. தமிழ் இலக்கிய வரலாற்றில் நூறாண்டு கண்ட தமிழின் ஒரே பெண் கவிஞர், எழுத்தாளர் பூரணிதான்.
அரவிந்த் |