இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை துரோகியாகச் சிலர் சித்திரிக்க, அவர் பல ஆண்டுகள் வெகுவாகப் போராடி தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபித்தார். அதற்காக கேரள அரசு, நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டினை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரை நேரில் சந்தித்த கேரளா முதல்வா் பினராயி விஜயன் அவரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். நம்பிநாராயணனின் இந்தப் போராட்ட வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது. நடிகர் மாதவன், நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்கிறார். படத்தையும் மாதவனே இயக்குகிறார். நம்பிநாராயணனின் இளவயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்கியது, சிறைவாசம் ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இப்படத்தில் மாதவன் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை நம்பி நாராயணனுடையது.
தொகுப்பு: அரவிந்த் |