தெரியுமா?:TNF ஆண்டுவிழாவில் தமிழக ஆளுநர் பாராட்டு
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழிக்கேற்ப, அமெரிக்காவில் தேடிய செல்வத்தைத் தமிழகத்திற்கு வாரி வழங்கும் அமெரிக்கத் தமிழர்களையும், அவர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அறக்கட்டளையையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் மனம் திறந்து பாராட்டினார். சென்னை மியூசிக் அகாடமியில் பிப்ரவரி 20, 2019 அன்று நடைபெற்ற மாநாட்டில் சிறப்புரையாற்றிய ஆளுநர் அறக்கட்டளையின் 8 மில்லியன் டாலர் திட்டமான 'மண்வாசனை' திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசுகையில், பலமுறை தயாரிக்கப்பட்டிருந்த உரையிலிருந்து விலகி, மனந்திறந்து பேசி அவையோரை மகிழ்வித்தார்.

"தேர்தல் வரப்போகிறது. அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள், அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுக்காமல், TNF போன்ற தரமான அறக்கட்டளைகளுக்குக் கொடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். தமிழக ஆளுநராகப் பணியேற்கும்வரை தான் பிறந்த மகாராஷ்டிரம் தமிழகத்தைவிட உயர்ந்த மாநிலம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தமிழகத்தின் 31 மாவட்டங்களில் பயணம் செய்தபிறகு, தமிழகம், மகாராஷ்டிரத்தைவிட உயர்ந்த மாநிலம் என்று கற்றுக்கொண்டேன் என பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார்.

TNF அரசுப் பள்ளிகளை ABC திட்டம் மூலம் தத்தெடுத்தது தன்னை மிகவும் மகிழ்வித்ததாகவும் அதற்காகவே இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்பியதாகவும் அவர் கூறினார். இந்து நாளிதழ் மற்றும் மியூசிக் அகாடமியைச் சார்ந்த திரு. என். முரளி 45 ஆண்டுகளாக TNF தமிழகத்தில் விளம்பரமின்றிச் சேவை செய்து வருவதைக் குறிப்பிட்டார். TNF நிறுவனர், டாக்டர் பழனி பெரியசாமி பேசுகையில், 1974ல் இந்தியாவின் வறுமைபற்றி அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியான செய்திகளும், நிகழ்ச்சிகளும் தன்னையும், மற்ற மூன்று தமிழ்க் குடும்பங்களையும் மாதம் ஐந்து டாலர் நன்கொடையுடன் TNF என்ற அமைப்பைத் தொடங்க வைத்தன. இன்று அது ஆலமரமாக வளர்ந்து ஆண்டுதோறும் தமிழகத்திற்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் அனுப்பி வைப்பதன் காரணம், என்னைத் தொடர்ந்து வந்த TNF தலைவர்கள்தான் என்று பெருமகிழ்ச்சியுடன் கூறினார்.

TNF தலைவர் சோமலெ. சோமசுந்தரம் சிறந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கி உரையாற்றுகையில், TNFன் ABC மண்வாசனை மற்றும் internship திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு, அறக்கட்டளை வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக உள்ளன என்றார். சென்னை TNF தலைவர் திரு ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ்., அமெரிக்கத் தமிழர்களின் கொடையுள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களின் தரம் உயர்ந்துள்ளதாகப் புகழாரம் சூட்டினார்.

TNF உதவியால் முன்னேறியுள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவியரின் உரைகள் தன்னை உற்சாகப்படுத்தியதாக, ஊக்க உரையாற்ற வந்த பேராசிரியை பர்வீன் சுல்தானா தெரிவித்தார். அறக்கட்டளையின் சென்னை அறங்காவலர்கள் சுவர்ணா பிள்ளை வரவேற்க, திரு. நாகப்பன் நன்றி கூறினார்.

மண்வாசனை பற்றிய முழு விவரங்களுக்கு: tnfusa.org/mann-vaasanai

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com