ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-5)
பாலா அத்தை அருணின் மனதில் ஒரு புதிய எண்ணத்தை விதைத்து விட்டாள். அது அவனை முடுக்கி விட்டுவிட்டது. கடந்த இரவு நடந்த சம்பவம் அருணின் உள்ளத்தில் இருக்கும் போர்வீரனைத் தட்டி எழுப்பி விட்டது. அது மீண்டும் ஹோர்ஷியானா நிறுவனத்திற்கு எதிரானதா, இல்லை, ஏதாவது நல்லது செய்வதற்கான எண்ணமா? அவனுக்குத் தெரியவில்லை.

அத்தை சொன்னது எதுவாக இருந்தாலும் அது ஹோர்ஷியானாவின் மற்றொரு சதிதான் என்று நினைத்தான் அருண். எந்த உணவுப் பொருளோ பழமோ சரியில்லா விட்டால், அதற்குக் காரணம் ஹோர்ஷியானா ஆகத்தான் இருக்க முடியும் என்று அருண் யூகித்தான். அவனால் தூங்க முடியவில்லை.

அருணின் அறையில் விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு "பசங்களா, எல்லாம் தூங்கற நேரம் ஆச்சு. விளக்க அணையுங்க" என்று சொல்லிக்கொண்டே கீதா வந்தார்.

அருணின் அறையில் அனுவும் அரவிந்தும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அருண் மட்டும் மல்லாக்கப் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்தபடி ஏதோ யோசனையில் இருந்தான்.

"அருண் கண்ணா, விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக்கொள். அனுவிற்கும் அரவிந்திற்கும் தொந்தரவாக இருக்கப் போகிறது" என்றார் கீதா. அருண் பதில் சொல்லவில்லை.

கீதா கட்டிலருகே மெதுவாக முழங்கால் இட்டு அமர்ந்தார். அருணின் தலைமுடியைச் செல்லமாகக் கோதினார். "கண்ணா, கண்ணை மூடிக்கொள். நித்திரை தேவி உன்னை அணைத்துக் கொள்வாள்."

அருண் கண்களை மூடிக்கொண்டான். அவன் தூங்கிவிடுவான் என்று நினைத்து, மெதுவாக அவன் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தார். அவர் நகர்ந்த மறு கணமே அருண் தன் கண்களைத் திறந்துவிட்டான். அதைக் கீதா கவனித்தார்.

"அருண், ரொம்ப நேரமாச்சு. தூங்க முயற்சி செய்" என்று கீதா மெதுவாகச் சொன்னாலும், அவர் குரலில் கண்டிப்பு இருந்தது. "அம்மா, எனக்குத் தூக்கம் வரலை."

"தூங்கு,.." சற்று அதட்டலாகச் சொன்னார். "எனக்கு நாளைக்கு வேலைக்கு போகணும்." அம்மா, நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை!"

அருணைத் தவிர எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். அதனால், கீதா அருணோடு பேச்சை தொடர விரும்பவில்லை. விளக்கை அணைத்துவிட்டு கதவை நோக்கிச் சென்றார். "எனக்கு, உன்னுடைய எந்தப் புகாரையும் கேட்கத் தெம்பு இல்லை" என்று சொல்லிவிட்டு நகர்ந்து போனார். அனுவையும் அரவிந்தையும் செல்லமாக ஒரு வருடல் வருடிச் சென்றார். அந்த குழந்தைகளைப் போல நம் மகன் இல்லையே என்று கீதாவிற்கு தோன்றியது.

கீதா மாடியில் சற்றுத் தள்ளி தன் அறைக்குள் நுழைந்தபோது, வெளிப்புறம் எட்டி அருணின் அறைப் பக்கம் பார்த்தார். அவன் அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. முதலில் அவனைத் திட்ட வேண்டும் என்று நினைத்தார். பிறகு, போகட்டும் என்று விட்டுவிட்டார். அப்படியே படுக்கையில் விழுந்து தூங்கிப் போனார்.

சில நிமிடங்கள் போயிருக்கும். ஆனால், அது ஒரு யுகம் போலத் தோன்றியது.

"அம்மா". தன்னை யாரோ அழைப்பதைக் கனவு என்று நினைத்தார். மீண்டும் "அம்மா". போர்வையை இறுகப் போர்த்திக்கொண்டு தூங்கப் பார்த்தார் கீதா. வார விடுமுறையில் கிடைக்கும் உறக்கம் மிகவும் பிடித்தமானது. அது தடைப்படுவதை விரும்பவில்லை. "அம்மா" என்று மூன்றாம் முறையாகக் குரல் வந்தது. போர்வையை விலக்கிப் பார்த்தார். அறையின் வெளியே உள்ள இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஒரு 5 அடி உயரமான நிழல் உருவம் தெரிந்தது. முதலில் பயந்தாலும், அது அருண்தான் என்று புரிந்துகொண்டார்.

"அருண். என்ன வேணும் உனக்கு?" என்று மெல்லிய குரலில் அதட்டலாகக் கேட்டார். கணவர் ரமேஷ் எழுந்தால் கலக்கிவிடுவார்.

"அம்மா, என்னால் தூங்க முடியலை" அருணின் குரலில் இருந்த குழந்தைத்தனமான ஏக்கம் அவரை கோபத்திலிருந்து தடுத்தது. "என்னாச்சுப்பா உனக்கு. ஏதாவது கெட்ட கனவு கண்டியா?"

"இல்லை… ஆனால்…."

"அப்படியானால் என்னதான் வேணும்? அம்மாவை இப்படிப் பாதி ராத்திரில தூங்கவிடாம இம்சை பண்றியே?" கீதாவின் குரலில் சலிப்பு தெரிந்தது.

"நான் இங்கே உங்ககூட படுத்துக்கவா, அம்மா?"

"இல்லை அருண், இங்க எங்களோட படுத்துக்கக் கூடாது."

"ஏனம்மா?"

கீதாவிற்குச் சக்தியெல்லாம் போய்விட்ட மாதிரி இருந்தது. அருணைச் சமாளிக்க ரமேஷை எழுப்பலாமா என்று நினைத்தார்.

"அம்மா, நான் பயந்து போயிருக்கேன் அம்மா." இது கீதாவுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. ஒருவித ஜாலம் அது என்று அவருக்குத் தெரியும். முந்தின தினம் நடந்த சம்பவத்தின் தொடர்ச்சிதான் இது, அதை உடனே நிறுத்தவேண்டும் என்று எண்ணினார். படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து, அருண் கையைப் பிடித்தபடி, "வா அருண், உன் அறைக்குப் போகலாம். பயப்பட எதுவும் இல்லை" என்று அருணை அழைத்துச் சென்றார்.

அருண் அவர் பின்னால் தயக்கமின்றி நடந்தான். அருணை அவனது படுக்கையில் படுக்கச்சொல்லி அவனது அருகில் சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு எழுந்தார் கீதா. அவனது போர்வையை சரியாகப் போர்த்திவிட்டு, "நல்லாத் தூங்கப்பா. காலைல பேசிக்கலாம். அனுவையும் அரவிந்தையும் எழுப்பிடாதே" என்றார்.

"அம்மா, எனக்கு உங்ககிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்" என்று அருண் கெஞ்சலாகக் கேட்டான். கீதாவிற்கு என்னடா இந்த தொந்தரவு திரும்பவுமா என்று இருந்தது. இந்த மாதிரி இரவு நாடகம் ரொம்பப் பார்த்துவிட்டார் அவர். கடிகாரம் இரவு 12 மணி அடித்தது.

"கண்ணா, நாளைக்கு ஞாயிறு காலை ஒடப் போகும்போது என்னோட நீயும் வா. அப்ப நிறைய பேசலாம்" என்று கொட்டாவி விட்டபடி அருணின் அறையிலிருந்து வெளியே வந்தார்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: ஷான்

© TamilOnline.com