ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரத்தில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் உள்ளது பூரி ஜகந்நாதர் ஆலயம். இந்த ஊர், கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
தலப்பெருமை மத்ஸ்ய புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இக்கோவில் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் இது. பொதுசகாப்தம் பத்தாம் நூற்றாண்டில் கிழக்கு கங்க வம்சத்து அரசர் அனந்தவர்மன் சோடகங்கா தேவா என்பவர் இந்தக் கோயிலைக் கட்ட ஆரம்பித்தார். 1178ல் அனங்க பீம தேவா கட்டி முடித்தார். பின்னர் பரதன் மகனான இந்திரத்யும்னன் என்னும் அரசனால் மேலும் எடுத்து விரிவாகக் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கோவிலுக்கு வைணவ ஆச்சாரியர்கள் ராமானந்தர், ராமானுஜர் விஜயம் செய்து மடம் ஸ்தாபித்துள்ளனர். ஆதிசங்கரர் கோவர்த்தன மடம் ஸ்தாபித்துள்ளார். கௌடியா மடத் தலைவர் சைதன்ய மகாப்பிரபு, பூரியில் சில காலம் வாழ்ந்துள்ளார். கபீர்தாசர், துளசிதாசர், குருநானக் ஆகியோரும் இங்கு விஜயம் செய்துள்ளனர். ஸ்ரீமத் வல்லபாச்சாரியார் பூரியில் வந்து தங்கி ஏழுநாள் பாகவத பாராயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் இங்கு பகவான் கிருஷ்ணர், அவர் சகோதரன் பலராமன், சகோதரி சுபத்ரா ஆகிய மூவரும் கருவறையில் காட்சி அளிக்கின்றனர். சகோதர, சகோதரிகளிடையே பாசம், அன்பு ஆகியவற்றின் மகிமையை எடுத்துக்காட்டுவதாக இவ்வாலயம் அமைந்துள்ளது.
கோவிலின் சில அதிசயங்கள் கோயிலின் மேல் சுதர்சன சக்கரம் எங்கிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்ப்பது போல் தோன்றும். 2000 ஆண்டுகளாகியும் சுதர்சன சக்கரம் கோயிலில் அமைந்த விதம் எவ்வாறு எனத் தெரியவில்லை. கோவிலுக்குள்ளே பறவைகள் எதுவும் பறப்பதில்லை. எந்த நேரத்திலும் கோவிலின் நிழலைப் பார்க்க இயலாது. கோவிலின் உள்ளே சிம்மதுவாரம் வழியாக நுழைந்தால் கடலின் ஓசையை உள்ளே கேட்க இயலாது. வெளியில் வந்தால்தான் கேட்க முடியும்.
கோயில் அமைப்பு பூரி ஜகந்நாதர் ஆலயம் 400 ஆயிரம் ச.அடி பரப்பளவில் அமைந்துள்ளது. பிரதான கோவில் உயரம் 214 அடி. கோவிலைச் சுற்றி இரண்டு மதில் சுவர்கள் உள்ளன. வெளிப்புறம் 'மேகநாத ப்ரசீரா' என்றும், உள்பிரகாரம் 'கர்ம ப்ரசீரா' என்றும் கூறப்படுகின்றது. இக்கோயில் சார்தாம் கோவில்கள் நான்கில் ஒன்றாகும். மற்ற மூன்று கோவில்கள் ராமேஸ்வரம், துவாரகை, பத்ரிநாத் ஆகும். சார்தாம் யாத்திரை பூரி தலத்தில் தொடங்கி பத்ரிநாத்தில் முடிவடைகிறது.
ஆலயம் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கட்டப்பட்டுள்ளது. வெளிப்புறம் 'போக் மந்திர்' எனவும், அடுத்த பகுதி 'நட மந்திர்' எனவும் அழைக்கப்படுகிறது. அதில் தூண்களுடன் பாடல் நடனம் நிகழ்ச்சிக்காகவும், பக்தர்கள் வணங்கித் துதிக்கவும் ஒரு மண்டபம் உள்ளது. கடைசியில் உள்ள மண்டபத்தில் மூலவர்கள் கருவறையில் அருள்பாலிக்கின்றனர்.
ஆவணி மாதம் பௌர்ணமியில் 108 கலசம் வைத்து 'தேவஸ்நான யாத்திரை' கொண்டாடப்படுகிறது. அதன்பின் 15 நாளைக்குக் கோவிலை மூடி விடுகின்றனர். அதனால் பக்தர்கள் அங்கு செல்ல இயலாது. தேவஸ்நான யாத்திரைக்குப் பின் பழங்களும், வேர் கொண்ட கறிகாய்களும் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன. பிரசாதம் மண்பானையில் தயாரிக்கப்படுகிறது.
அந்தப் பானையை ஒருமுறைதான் உபயோகப்படுத்துகின்றனர். பக்கத்து கிராமத்தில் உள்ள கும்மாரி என்னும் மக்களால் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. தினம் 64 விதமான பிரசாதங்களை இறைவனுக்கு நிவேதனமாகப் படைக்கின்றனர். கோவில் சமையலறையில் ஏழு பானைகள் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, விறகடுப்பில் பிரசாதம் சமைக்கின்றனர். அப்பொழுது மேலே உள்ள முதல் பானையில் உணவு முதலில் தயாராகிறது. தினம் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும்போது எத்தனை பேர் வந்தாலும் போதாமலும் போனதில்லை. மீதமும் இருப்பதில்லை. இது ஓர் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
ஜூன், ஜூலை மாதங்களில் இருமுறை பௌர்ணமி வரும்போது நவகளேபரத் திருவிழா நடக்கிறது. 2015ம் வருடம் நடைபெற்றது. அதாவது 7, 9, 11, 19 வருடங்களுக்கு ஒரு முறையே இந்தத் திருவிழா நடக்கும். 2015ம் வருடத் திருவிழாவில் மூன்று மில்லியன் பக்தர்கள் கலந்துகொண்டனர். வேப்பமரத்திலிருந்து பூரி ஜகந்நாதர், பலராமன், சுபத்ரா, சுதர்சன் ஆகிய நான்கு உருவங்கள் செய்யப்படுகின்றன. கோவிலின் தலைமை அர்ச்சகர் கனவில் வேப்பமரங்கள் எங்கே இருக்கின்றன என்று உணர்த்தப்படுகிறது. முதலில் வேப்பமரங்கள் வணங்கப்பட்டு பொன், வெள்ளி, இரும்புக் கோடாரிகளால் வெட்டப்பட்டு, இருட்டில் புது உருவங்களை பழைய உருவங்களுக்கு எதிரே வைத்து மந்திரம் ஓதப்படுகிறது. மந்திரம் ஓதியதும் தெய்வசக்தி புது உருவங்களுக்கு மாறிவிடுகிறது. இவை அனைத்தும் வயதுமுதிர்ந்த அர்ச்சகரால் அவருடைய கண்கள், கைகள் துணியால் சுற்றப்பட்ட பின் செய்யப்படுகின்றது. இதன் பின் அர்ச்சகர் வெகு நாட்கள் உயிருடன் இருப்பதில்லையாம்.
பழைய உருவங்கள் கோவிலில் 'வைகுந்தா' என்னும் இடத்தில் எரிக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. அதன் பின் பத்து நாட்கள் கிரியைகள், கோவில் மூடியதும் இரவில் செய்யப்படுகின்றன.
இக்கோயில் ரதயாத்திரை உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. வருடா வருடம் ஜூன், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
1) ஜகந்நாதர் ரதம் நந்தி கோஷா என்ற பெயர், 14 சக்கரங்கள் 44 அடி உயரத்தில் சிவப்பு, பச்சை, கலர் வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு 250 அடி நீளம், 8 அங்குலம் அகலத்துடன் 'ஷங்க நடநாகா' என்னும் கயிறுகளால் இழுக்கப்படுகிறது. ஒரிஸ்ஸாவின் அரச குடும்பத்தினர் தங்கத்தினாலான துடைப்பத்தினால் ரதத்தைப் பெருக்கி, தரையில் சந்தனம் கலந்த தண்ணீரால் துடைக்கின்றனர்.
2) பலராமரின் ரதம் இது 'தாளத்வஜம்' என அழைக்கப்படுகிறது. 43 அடி உயரம் 14 சக்கரங்களுடன் சிவப்பு, மஞ்சள் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு 'வாசுகி நாகா' என அழைக்கப்படும் தேர் வடத்தினால் இழுக்கப்படுகிறது.
3) சுபத்ரா தேவி ரதம் தர்பதாளம் என இது அழைக்கப்படுகிறது. 42 அடி உயரம் 12 சக்கரங்களுடன் சிவப்பு, கறுப்புத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு 'சுவர்ண சூட நாகா' என்னும் தேர் வடத்தினால் இழுக்கப்படுகிறது.
ரத யாத்திரை முதலில் பலராமர் ரதம், பின் சுபத்திரா ரதம், அதைத் தொடர்ந்து ஜகந்நாதர் ரதம் என்ற வரிசையில் 3 கி.மீ. தூரம் சென்று 'கண்டீசா' என்னும் கோவிலை அடைகின்றது. ஒன்பது நாட்கள் தங்கிவிட்டு, பின்னர் பிரதான கோவிலுக்கு திரும்புகின்றது. வழியில் சிறிது நேரம் மௌசம்மா கோயிலில் தங்குகின்றது.
பூரி கடற்கரையை ஒட்டிய யாத்திரைத் தலம். ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் லிங்கராஜா கோவில், முக்தீஸ்வரர் கோவில், ராஜா ராணி கோவில் மூன்றும் வருடாவருடம் யாத்ரீகர்களைக் கவர்கின்றன. கொனார்க் கடற்கரைச் சாலையில் வழி முழுவதும் நதி, கடற்கரையைக் காணலாம். கொனார்க், பூரி நகரத்தில் இருந்து சிறிது தூரத்தில் பூரி மெயின் டிரைவ் பக்கத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சூரியன் கோவில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
பூரி கோவிலில் டோலி யாத்ரா, ஜூலன் யாத்ரா, பவித்ரோத்சவம், அட்சய திருதியை, நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. விஷூ சங்கராந்தி, மேஷ சங்கராந்தி ரத யாத்திரை தொடங்குவதற்கு முன் அட்சய திருதியை, சந்தன் யாத்ரா விழா போன்றவையும் சிறப்பாக நடைபெறுகின்றன.
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிஃபோர்னியா |