அந்தச் சிறுமிக்குப் பதினைந்து வயது இருக்கும். அன்று அவளது வீட்டில் சிறப்பு விருந்து ஒன்று ஏற்பாடாகியிருந்தது. எல்லாரும் பறந்து பறந்து வேலை செய்வதைப் பார்த்து அவளுக்கு வியப்பாக இருந்தது. அதற்கு முன்பும்கூட அந்த வீட்டில் பல விருந்து நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன என்றாலும் கூட, இந்த அளவுக்குப் பரபரப்பு இல்லை, பதட்டம் இல்லை. நகரின் பெரியமனிதர்கள், தந்தையின் நண்பர்களான ஐரோப்பியர்கள், படித்த பெரும் அறிஞர்கள் எனப் பலரும் அங்கே கூடியிருந்தனர். மெள்ள அம்மாவிடம் விசாரித்தபோது, சற்று நேரத்தில் அங்கே காந்தி வரப் போகிறார் என்று தெரிந்தது. காந்தியைப் பற்றி அவள் தந்தை மூலம் கேள்விப்பட்டிருந்தாள். அவர் பாரிஸ்டர் என்றும், தென்னாப்பிரிக்காவில் மக்கள் விடுதலைக்காகப் பாடுபட்டவர் என்றும் அறிந்திருந்தாள். அவ்வளவுதான்.
காந்தியும் வந்து சேர்ந்தார்.
பெண்களுக்கு என இருந்த உள்ளறையிலிருந்து காந்தியை எட்டி, எட்டிப் பார்க்க முயன்றாள் அவள். முடியவில்லை. மென்மையான அவரது குரலும், சிரிப்பொலியும் மட்டும் அவளுக்குக் கேட்டன. சற்று நேரத்தில் வெண்ணிற ஆடை உடுத்திய ஒரு பெண்மணி அந்த அறையை நோக்கி வந்தார். உலக அனுபவத்தால் கனிந்த, தாயன்பு சொட்டும் களையான முகம். ஏக்கம் தேங்கிய, உள்ளன்பு ஒளி விசீய கண்கள். அவரே கஸ்தூரிபா என்றும், காந்தியின் மனைவி என்றும் அம்மா மூலம் அறிந்ததும் அந்தச் சிறுமிக்கு மிகப்பெரிய வியப்பு உண்டானது. மீண்டும் அவரை நன்கு உற்றுப் பார்த்தார். நீண்ட கை வைத்த வெள்ளை அங்கி ஒன்றைப் போட்டுக் கொண்டிருந்தார் கஸ்தூரிபா. கைகளில் ஜதை இரும்புக் காப்பு. வேறு அலங்காரமோ ஆபரணமோ கிடையாது. ஏழைக் குடியானவருடைய நாகரிக மனைவி போலவே அவர் இருந்தார். சிறுமியைப் பார்த்துப் புன்னகைத்தார்.
அவள் தன் உடல் முழுவதும் சுமந்திருந்த அத்தனை வைர நகைகளையும் பார்த்து, அவர் புன்னகைசெய்தது போலவே சிறுமிக்குத் தோன்றியது. உடன் அவற்றைக் கழற்றி எறிய வேண்டும் என்ற ஆத்திரமும் தோன்றியது. ஆனாலும் அது உடனடியாக மறைந்து பழைய பெருமிதம் குடிகொண்டது. அந்தப் பெண்மணியையே, அவர் தன் அம்மாவுடன் கனிவுடன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தார். உண்மையில் அந்த எளிய தோற்றத்தின் உயர்வு அந்தச் சிறுமிக்கு அப்பொழுது விளங்கவில்லை. ஆனால், அந்தச் சந்திப்புதான், பிற்காலத்தில் அந்தச் சிறுமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட வித்திட்டது. இறுதிக் காலம்வரை எளிய கதர் ஆடையையே உடுத்தும் வைராக்கியத்தைத் தந்தது. அந்தச் சிறுமி எஸ். அம்புஜம்மாள்.
ஜனவரி 8, 1899ல், எஸ். சீனிவாச ஐயங்கார், ரங்கநாயகி அம்மாளுக்கு மகளாகப் பிறந்தார் அம்புஜம். தந்தை சீனிவாச ஐயங்கார் சென்னையின் புகழ்பெற்ற வழக்குரைஞர்களுள் ஒருவர். தாய்வழித் தாத்தா பாஷ்யம் ஐயங்கார் உயர்நீதிமன்ற நீதிபதி. ஆங்கிலேயர் அல்லாத முதல் அட்வகேட் ஜெனரலும் அவர்தான். செல்வச் செழிப்புள்ள குடும்பம், மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார் அம்புஜம். இவருக்கு அடுத்துப் பிறந்த சகோதரன் பள்ளியில் சேர்க்கப்பட்டும் கூட, அக்கால வழக்கப்படி இவருக்குக் கல்வி மறுக்கப்பட்டது. தான் படிக்கவேண்டும் என்று பெற்றோரைத் தொடர்ந்து வலியுறுத்தவே, பள்ளிக்கு அனுப்புவற்குப் பதிலாக இந்திய கிறிஸ்துவ சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையைக் கொண்டு வீட்டிலேயே கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் கல்வியைவிட மத போதனையே அதிகம் இருந்தது. ஐரோப்பியர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களும் போதிக்கப்பட்டன. தனித்தனி ஆசிரியர்கள் மூலம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றார். நல்ல குரல்வளம் இருந்ததால் இசையும் பயின்றார். வீணை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றார்.
1910ல், இவருக்கு 11 வயது நடக்கும்போது தேசிகாச்சாரியுடன் திருமணம் நிகழ்ந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கணவர் தேசிகாச்சாரி படிப்பை முடித்ததும் சீனிவாச ஐயங்காரிடமே பணியாற்ற ஆரம்பித்தார். சீனிவாச ஐயங்கார் காங்கிரஸ் அபிமானி. ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களிடம் நெருங்கிப் பழகியவர். அவரது திறமையையும், பல துறைகளில் அவருக்கிருந்த தேர்ச்சியையும் கண்டு வியந்த பிரிட்டிஷ் அரசு, அவருக்கு அட்வகேட் ஜெனரல் பதவி அளித்தது. இந்நிலையில்தான் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பியிருந்தார். அவருக்கு தனது இல்லத்தில் சிறந்த வரவேற்பு ஒன்றை அளித்தார் ஐயங்கார். காந்தியையும், கஸ்தூரிபாவையும் நேரில் சந்தித்த அம்புஜம்மாள் அவர்களது எளிமை குறித்து வியந்தார். அவர்களது சேவைகளைக் கண்டு தாமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டது. அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களுடன் இணைந்து உலகப்போரில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு, மருந்துகள், துணிகள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டார். ஒரு குழந்தைக்கும் தாயானார். நாளடைவில் கணவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவும், மனநலப் பிரச்சனையும் இவரைப் பெரிதும் பாதித்தன. தாயாரின் உடல்நலமும் குன்றியது. தாத்தாவும் மறைந்தார். தம்பிக்கும் காலில் பாதிப்பு ஏற்பட்டது. இல்லற வாழ்க்கையில் இவ்வாறு அடுக்கி வந்த பிரச்சனைகளை, தந்தையின் உறுதுணையுடன், திடமான மனதுடன் இவர் எதிர்கொண்டார்.
இரண்டாவது முறையாக மகாத்மா காந்தி சென்னை வந்தபோதும் சீனிவாச ஐயங்கார் வீட்டில்தான் தங்கினார். அப்போதுதான், "இந்தியப் பெண்களில் படித்தவர்கள் வெகு சிலரே. அவர்களும் குடும்பக் கடமைகளில் மூழ்கி விடுகிறார்கள். அந்தக் குறையைத் தீர்ப்பது உன்னைப் போன்ற படித்த பெண்களின் கடமை" என்று மகாத்மா அறிவுறுத்தினார். அது அம்புஜம்மாளின் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக சேவை செய்யும் எண்ணம் தீவிரப்பட்டது. பொதுச் சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தெருவெங்கும் கதர்த் துணிகளைச் சுமந்து சென்று விற்பனை செய்தார். ருக்மணி லட்சுமிபதி, துர்காபாய் தேஷ்முக் போன்றோரின் நட்புக் கிடைத்தது. எழுத்தாளரும், பத்திரிகையாசிரியருமான வை.மு. கோதைநாயகியின் நட்பு இவரது தேச சேவையும் சிந்தனையும் மேலும் சுடர்விடக் காரணமானது. முழுக்க முழுக்க சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்தார். இவர்கள் ஒன்றிணைந்து காந்திஜியின் அறிவிப்பின்படி வெள்ளையர்களுக்கு எதிராக அகிம்சா வழியில் பல போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். தடை செய்யப்பட்டிருந்த பாரதியின் பாடல்களைப் பொதுவெளியில் உரக்கப் பாடியபடி ஊர்வலம் செல்வது, அந்நியத் துணி எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல் எனப் பல போராட்டங்களில் இவர்கள் ஈடுபட்டனர்.
தன்னைப் போலவே ஆற்றலும் திறனும் சுயராஜ்ஜிய வேட்கையும் கொண்ட மகளிரைப் போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று எண்ணினார் அம்புஜம்மாள். பெண்களின் திறனும், சிந்தனைகளும் ஏதாவது ஒரு விதத்தில் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என நினைத்தார். அதற்கான முயற்சிகளைக் கைக்கொள்ளத் தொடங்கினார். 1929ல் திருவல்லிக்கேணியில் 'சுதேசி லீக்' சங்கம் அமைத்தார். வீதி வீதியாகச் சென்று கதராடை விற்பனையை மேற்கொண்டார். பெண்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். பல தொடர் போராட்டங்களை நடத்தினார். உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் போராட்டங்களைத் தொடர்ந்தார். தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு என யாவற்றையும் தைரியமாக எதிர்கொண்டார்.
ஒருசமயம் தோழிகளுடன் இணைந்து சென்னையில் அந்நியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவருடன் போராட்டம் செய்தவர்களைக் கைது செய்த காவல்துறை இவரைக் கைது செய்யவில்லை. காரணம், அட்வகேட் ஜெனரலின் மகள் என்பதுதான். போராட்டத்தை மேலும் தீவிரமாகத் தொடர்ந்து நடத்த ஒரு வாய்ப்பாகக் கருதிய அம்புஜம்மாள், பத்து நாட்கள் தொடர்ந்து சைனா பஜாரில் அந்நியத் துணிகள் விற்கும் கடைகள் முன்பு போராட்டம் செய்தார். உடன் இவரது சித்தியான ஜானாம்மாளும் கலந்து கொண்டார். இதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது ரப்பர் குழாய் மூலம் சாக்கடைநீர் வீசியடிக்கப்பட்டது. ஆனாலும் அச்சமில்லாமல், அருவருப்பில்லாமல் தொடர்ந்து இவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இறுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே தேச சேவை, சமூக சேவை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அம்புஜம்மாள், சிறைச்சாலையை கல்விச்சாலை ஆக்கினார். கல்வி அறிவில்லாத பெண்களுக்குத் தமிழும், தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளையும் சிறையில் சொல்லிக் கொடுத்தார். கூடவே பெண்கள் தங்கள் சுயகாலில் நிற்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் தையல், பூவேலை போன்ற கைத் தொழில்களையும் கற்றுக்கொடுத்தார். சிறையிலிருந்து விடுதலை ஆனதும் தனது சமூக, தேச சேவைப் பணிகளைத் தொடர்ந்தார்.
இக்காலக்கட்டத்தில் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக தந்தை சீனிவாச சாஸ்திரி காங்கிரஸிலிருந்து விலகினார். அரசியல் பணிகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். மகளது போராட்ட முயற்சிகளுக்கு அவர் தடை சொல்லவில்லை என்றாலும், "போராடி சிறைக்குச் செல்வதால் சுதந்திரம் கிடைத்து விடாது. சரியான அரசியல் நடவடிக்கைகளினால் மட்டுமே சுயராஜ்யம் கிடைக்கும்" என்று அறிவுறுத்தினார். ஆனாலும் தந்தையின் பேச்சை மீறி அம்புஜம்மாள் போராட்டங்களில் கலந்துகொண்டார். அது காந்தியின் கவனத்துக்கும் சென்றது. மறுமுறை சென்னைக்கு வந்த காந்தி, நேரிலேயே அம்புஜம்மாள் வீட்டுக்கு வந்து, "தந்தையின் பேச்சை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். உன்னால் இயன்ற சமூகசேவை செய்து வா. கதர்த்தொண்டு, ஹரிஜன சேவை இவைகளை விடாமல் செய்து வந்தால் போதும்" என்று அறிவுறுத்தினார். ஆனாலும் காந்தியின் பேச்சையும் மீறி சுதந்திரப் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார் அம்புஜம்மாள். பின்னர் பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குச் சித்தி ஜானம்மாளுடன் சென்று பங்கேற்றார். காந்திஜிக்குப் பணிவிடைகள் செய்தார். "எனது சுவீகாரப் புத்திரிகளில் நீயும் ஒருத்தி" என்று காந்தியால் பாராட்டப்பட்டார்.
காந்திஜியின் வார்தா ஆசிரமத்திற்குச் சென்று பணியாற்ற அம்புஜம்மாள் விரும்பினார். தந்தை சீனிவாச ஐயங்கார், காந்தியுடன் மாற்றுக் கருத்து கொண்டிருந்தவராக இருந்தாலும் அதற்குச் சம்மதித்தார். சுமார் ஒரு வருட காலம் ஆசிரமத்தில் தங்கிப் பயிற்சி பெற்றார் அம்புஜம்மாள். காலைப் பிரார்த்தனையின் போது துளசி ராமாயணத்தை இசையுடன் பாடுவது வழக்கமாக இருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்த காந்திஜி, துளசி ராமாயணப் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி அம்புஜம்மாளிடம் கேட்டுக் கொண்டார். வடமொழி அறிந்திருந்த அம்புஜம்மாள் அவ்வாறே துளசி ராமாயணத்தின் முதல் இரண்டு காண்டங்களை வசன நடையில் மொழி பெயர்த்தார். பயிற்சிக்குப் பின்னர் தமிழகம் வந்தவர், தனது அரசியல், சமூக நடவடிக்கைகளை மேலும் தீவிரமாகத் தொடர்ந்தார். தேவதாசி ஒழிப்பு, இருதார மணத்தடை, பால்ய விவாக எதிர்ப்பு, விதவா விவாகம் போன்றவற்றில் கவனம் செலுத்தினார். தேச விடுதலை மட்டுமல்லாமல் பெண்கல்வி, பெண்களுக்கான தொழில் கல்வி, கள்ளுக்கடை ஒழிப்பு போன்ற நற்பணிகளில் ஈடுபட்டார். கணவரால் கைவிடப்பட்ட பல பெண்களைச் சந்தித்து அவர்களுக்குக் கல்வியும், கைத்தொழிலும் அமைத்துக் கொடுத்து மறுவாழ்க்கை அளித்தார்.
ஒரு சமயம் காந்தி சென்னைக்கு வந்தபோது தனக்குச் சொந்தமான 40,000 ரூபாய் பெறுமான தங்க, வைர நகைகளை காந்தியின் ஹரிஜன சேவா நலநிதிக்குக் கொடுத்துவிட்டார். அந்த அளவுக்கு வள்ளன்மை மிக்கவராக அம்புஜம்மாள் இருந்தார். சிறுவயதில் தான் சந்தித்த கஸ்தூரிபாவைப் போலவே எளிய கதர் ஆடைகளை உடுத்தியும், எந்த வித ஆடம்பர, அலங்காரமில்லாமலும் வாழ்க்கை நடத்தினார். காந்திஜி இவருக்கு எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அதுபோல கஸ்தூரிபாவும் இவர்மீது தன் மகளைப் போன்ற அன்பை வைத்திருந்தார். அவரும் இவருக்குக் கடிதம் எழுதி இவரது பணிகளை வாழ்த்தியிருக்கிறார். காந்தி, கஸ்தூரிபா என இருவரது அன்பையும், மதிப்பையும் பெற்றிருந்த அம்புஜம்மாள் "காந்தியடிகளின் அபிமான மகள்" என்று போற்றப்பட்டார்.
தமிழ் நாட்டின் சமூகநல வாரியத் தலைவியாகப் பொறுப்பு வகித்த அம்புஜம்மாள், சமூகப் பணிகளை மேலும் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகத் தந்தை சீனிவாசனின் பெயருடன் காந்தியின் பெயரையும் இணைத்து 1948ல் 'சீனிவாச காந்தி நிலையம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஆதரவற்ற பெண்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கும் பணியை இன்றளவும் அந்த நிறுவனம் செய்து வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராக 1957-62 வரை பணியாற்றியிருக்கிறார். அகில இந்திய மாதர் சங்கத்துடன் (Women's India Association) தன்னை இணைத்துக் கொண்ட இவர், அதன் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
அம்புஜம்மாள் சிறந்த எழுத்தாளரும் கூட. காந்தி குறித்து 'மகாத்மா காந்தி நினைவு மாலை' என்ற நூலை எழுதியிருக்கிறார். பல முன்னணி இதழ்களில் நிறையக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆன்மீக நாட்டமும் அதிகம் உண்டு. சித்த மார்க்கத்தில் விருப்பம் கொண்டிருந்தவர். தன் குருவாகக் கருதிய 'காரைச் சித்தர்' பற்றி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். கே.எம். முன்ஷி எழுதிய நூலை 'வேதவித்தகர் வியாசர்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். 'சேவாசதன்' என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார் இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. எம்.எஸ். சுப்புலட்சுமி நாயகியாக நடித்திருந்தார். தன் வாழ்க்கை அனுபவங்களை தனது எழுபதாம் வயதில் 'நான் கண்ட பாரதம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார். தினமணி வெளியிட்டு வந்த இலக்கிய நூல்களுக்கு ஆலோசனையாளராகவும் திகழ்ந்திருக்கிறார். ஹிந்தி பிரச்சார சபாவின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். பலருக்கு ஹிந்தி போதித்திருக்கிறார். இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 1964ல் 'பத்மஸ்ரீ' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
இறுதிவரை தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்புஜம்மாள், தனது எண்பத்திரண்டாவது வயதில் காலமானார். இவரது வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் வசுமதி ராமசாமி ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழக அரசும் சாலை ஒன்றிற்கு இவரது பெயரைச் சூட்டி சிறப்புச் செய்துள்ளது. செல்வச் செழிப்போடு வளர்ந்தபோதிலும் எளிமையைக் கைவிடாது, தேசநலனும் பெண்கள் நலனும்தான் முக்கியம் எனக் கொண்டு இறுதிவரை வாழ்ந்து மறைந்த அம்புஜம்மாள், தமிழர்கள் என்றும் தங்கள் நினைவில் நிறுத்த வேண்டிய முன்னோடி.
பா.சு. ரமணன் |