அஷ்விதா ஷெட்டி: போதி மரத்தின் நிழலில்
அஷ்விதா பிறந்தது நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் கிராமத்தில். தாய், தந்தை இருவருமே பீடி சுற்றும் தொழிலாளிகள். அஷ்விதாவிற்கு இரண்டு அக்காக்கள். அஷ்விதா வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண். புத்தகம் வாசிப்பதும் உண்டு. ஒருமுறை ஹெலன் கெல்லருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்தார். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமல்லாமல், பிறருடைய வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அந்தப் புத்தகம் அளித்தது.

அதுவரை விளையாட்டுக்களில் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தவர், அக்கம் பக்கத்துக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார். இவர் நன்றாகச் சொல்லித் தருவதைப் பார்த்து, பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் வர ஆரம்பித்தனர். 'பாரதியார் டியூஷன் சென்டர்' என்று ஒன்றை ஆரம்பித்தார். அங்கே மாணவர்களின் பிற திறமைகள் வெளிப்படவும் உதவினார். பெற்றோரும் சகோதரிகளும் துணையாக இருந்தனர். பள்ளிப்படிப்பை முடித்ததும் மனோனம்ணியம் சுந்தரனார் பல்கலையில் பி.பி.ஏ. படிப்பில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றார். குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரியானார்.

இந்நிலையில் தான் 'புதிய தலைமுறை கல்வி இதழ்' Young India Fellowship பற்றி அறியத்தந்தது. அந்த நிதி நல்கையில் டெல்லி அசோகா யுனிவர்சிடியில் முதுநிலை படிக்கும் வாய்ப்பு வந்தது. அதுதான் அஷ்விதாவின் முதல் தொலைதூரப் பயணம்.

ஓரளவு ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த அஷ்விதாவிற்கு டெல்லி வாழ்க்கை பெரிய சவால்தான். வகுப்பிலிருந்த 96 மாணவர்களில் இவர் மட்டுமே கிராமத்தில் இருந்து வந்தவர். மொழிப் பயிற்சி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டார் என்றாலும், தன்னம்பிக்கையோடு அதனை எதிர்கொண்டார். ஆசிரியர்களுடன் உரையாடித் தனது திறனை உயர்த்திக் கொண்டார். பயிற்சியை நிறைவு செய்தபோது அவர் பல திறமைகளுடன், ஆங்கிலத்தில் சிறப்பாகப் பேச மட்டுமல்ல, எழுதவும் தேர்ந்திருந்தார்.



படிப்பை முடித்ததும் தஞ்சாவூரில் ஹெல்த்கேர் நிறுவனம் ஒன்றில் குழும மேலாளராகச் சிலகாலம் பணியாற்றினார். ஓய்வு நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றி ரத்தசோகை, இதயநோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மனம் நிறைவுறவில்லை. இன்னும் ஏதோ செய்யத் துடித்தது. Bodhi Tree Foundation பிறந்தது. அதன் மூலம் ஆலோசனை, உதவி தேவைப்படும் கிராமப்புற மாணவர்களுக்கும் பெண்களுக்கும் ஆலோசனை தந்து உதவ ஆரம்பித்தார்.

தன்னம்பிக்கை வளர்த்தல், சுயதிறன் மேம்பாடு போன்றவற்றிற்கான சிறப்புப் பயிற்சிகளை இந்த அறக்கட்டளை செய்து வருகிறது. குறிப்பாக, பீடி சுற்றும் பெண்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இவர் செய்தார். அது இவருக்கு நல்ல அங்கீகாரத்தைத் தந்தது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்கள் இதில் பலன் பெற்றுள்ளனர். கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம், கிராமப்புறங்களில் நேரடிப் பயிற்சி என இயங்கி வரும் இவரது அமைப்பிற்குத் தற்போது வயது ஐந்து.

அஷ்விதாவிற்கு தமிழ், ஆங்கிலம், துளு, ஹிந்தி மொழிகள் தெரியும். என்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. தமிழக அரசு சிறந்த மாநில இளைஞருக்கான விருதை 2018 சுதந்திர தினத்தின்போது அளித்தது. ஊருணி ஃபவுண்டேஷனின் பெண் சாதனையாளர் விருதைப் பெற்றிருக்கிறார்.

கடந்த நவம்பரில் கலிஃபோர்னியா வந்திருந்த இவர், கல்வி தன் வாழ்க்கை மாற்ற எவ்வாறு உதவியது என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்தப் பேச்சைக் கேட்க:



TED Talk முடிந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டினர். அந்தக் கரவொலியில் அஷ்விதா தளறாமல் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com