செல்வி வெளிநாட்டவர்களிடையே வெகு பிரபலம். காரணம், எலிசா பலோஷியின் டாகுமெண்டரி. எலிஸா கனடாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர். இந்தியா வந்திருந்தவர், செல்வியைப் பார்க்கிறார், அதிசயிக்கிறார். அவரது வாழ்க்கையை டாகுமென்டரி ஆக்குகிறார். அட்லாண்டா திரைப்பட விழா, டொராண்டோ ரீல் ஆசியன் திரைப்பட விழா, ரெயின் டான்ஸ் திரைப்பட விழா, விக்டோரியா திரைப்பட விழா எனப் பல விழாக்களில் இந்த டாகுமெண்டரி சிறந்த இயக்குநர், சிறந்த படம் என்பது உள்படப் பல்வேறு விருதுகளைக் குவிக்கிறது.
அப்படி என்ன செல்வியின் வாழ்க்கையில் இருக்கிறது? மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிற்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் செல்வி. சிறுமியாக இருக்கும்போதே திருமணம் நிகழ்ந்து விடுகிறது. கணவன் மதுவுக்கு அடிமை. பணத்துக்காகவும், மதுவிற்காகவும் பிற ஆண்களுடன் உறவு கொள்ளச் சொல்லி அவளை அடித்து உதைக்கிறான். கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் செல்வி. பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்ய நினைத்தவள், மனம் மாறி அந்தப் பேருந்தில் ஏறுகிறாள். அது மைசூரில் அவளை இறக்கி விடுகிறது. புதிய நகரம். எங்கு செல்வது எனப் புரியாமல் ஒரு சர்ச்சின் வாசலில் அழுது கொண்டிருந்தவளை, கருணை உள்ளம் கொண்ட ஒருவர் காண்கிறார். அவளை அங்குள்ள கைவிடப்பட்டோர் இல்லம் ஒன்றில் சேர்க்கிறார். அதுதான் செல்வியின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை.
அதன் பிறகு மெள்ள, மெள்ளத் தன்னை மீட்டு, டிரைவிங் கற்றுக்கொண்டு, வாடகைக் கார் ஓட்டி... இன்று செல்வி, மைசூரில் ஒரு டாக்ஸி நிறுவனத்தின் அதிபர். பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் குரலாக ஒலிப்பதும் அவருடையதுதான். கைவிடப்பட்ட பெண்களுக்குப் புகலிடமாகவும் இருக்கிறார்.
எலிஸா பலோஷி எடுத்த டாகுமெண்டரி சமீபத்திய கனடா திரைப்பட விழாவில் 2019ம் ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான விருது, டொனால்ட் பிரிட்டன் விருது (Canadian Screen Awards) என விருதுகளையும் குவித்திருக்கிறது. அதன் டிரெய்லரை இலவசமாகப் பார்க்கலாம். இங்கே:
இந்தியாவில் Selvi'S bus Tour என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு பலரும் அவருடன் கலந்துரையாடினர். தொடர்ந்து நியூயார்க் சென்று அங்குள்ள பெண்கள் அமைப்பினருடனும், தன்னார்வ நிறுவங்களுடனும் உரையாடி வந்திருக்கிறார் செல்வி. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சாதனைப் பெண் விருது வழங்கி அவரைச் சிறப்பித்தது.
ஸ்ரீவித்யா ரமணன் |