அவனி சதுர்வேதி: இந்தியாவின் முதல் பெண் போர் விமானி
இந்த நேரத்தில் இந்தியா எங்கிலும் போர் விமானங்கள் பற்றியும், கமாண்டர் அபிநந்தன் பற்றியுமே பேச்சாக இருக்கிறது. போர்க்களத்தில் ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வரும் காலத்தில், விமானப்படையில் சாதிக்க வந்துவிட்டார்கள் நம் பெண்கள். அவர்களில் ஒருவர்தான் அவனி சதுர்வேதி.

இந்திய வரலாற்றில் இதுவரை எந்தப் பெண்ணிற்கும் கிடைத்திராத பெருமை இவருக்குக் கிடைத்திருக்கிறது. முதல் இந்தியப் பெண் விமானி என்ற சிறப்பு அன்று சரளா தக்ராலுக்குக் கிடைத்தது. ஆனால், அவனி சதுர்வேதியோ "இந்தியாவின் முதல் பெண் போர் விமானி" என்ற சிறப்பை 25ம் வயதில் பெற்றுள்ளார். 'மிக்-21 பைசன்' (Mig-21 Bison) என்ற போர் விமானத்தைத் தனியாக ஓட்டிச் சாதனை படைத்துள்ளார் இவர். (பாகிஸ்தான் எல்லைக்குள் அபிநந்தன் ஓட்டிச் சென்ற அதே விமானம்).



மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவனி சதுர்வேதி. பி.டெக். படித்த இவர் விமானப்படையில் சேர்வதற்கான அடிப்படைத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றார். பின் ஹைதராபாதில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெற்றார். ஜூன் 2016ல் ஃபைட்டர் பைலட் ஆனார். பின்னும் கடுமையான பயிற்சிகள் தொடர்ந்தன. எல்லாப் பயிற்சிகளும் நிறைவுற்று கடந்த 2018ல் இவர் முதல் இந்தியப் பெண் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் ஃப்ளைட் ஃலெப்டினன்ட் ஆகப் பணியாற்றி வருகிறார்.

இந்திய விமானப்படையில் பணியாற்றும் மூன்று பெண்களில் சதுர்வேதியும் ஒருவர். மற்றவர்கள், இவருடன் பயிற்சி பெற்ற பாவனா காந்த் மற்றும் மோகனா சிங்.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com