கஜா புயல்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
டிசம்பர் 29, 2019 அன்று, ஃபிலடெல்பியா பெருநகரத்தில் வாழும் தமிழ்மக்கள் சார்பாக, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்று, மாண்ட்கோமரி வில்லில் உள்ள பாரதீய கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சியைத் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்ஃபியா பிரிவும், டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தின. ஃபிலடெல்ஃபியா நகரைச் சுற்றி வாழும், பிறமொழி பேசும் இந்திய வம்சாவளியினர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி நடந்தது. தெற்கு ஜெர்சி தமிழ்ச்சங்கமும் இதில் கலந்துகொண்டது

அறக்கட்டளையின் சார்பில் திரு. ஞானசபையும், தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு நாராயணனும் வரவேற்றனர். அறக்கட்டளைச் செயலாளர் திருமதி அருணா நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

'மயூரா அகாடமி ஆஃப் டான்ஸ்' குழுவின் பரதநாட்டிய நடனமும், அடவு கலைக்குழுவின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியும் கண்களுக்கு விருந்தளித்தன. கஜா புயலால் உண்டான பாதிப்புகளையும் அதற்கு அறக்கட்டளை செய்துள்ள நிவாரண உதவிகளையும் தலைவர் முனைவர் சோமலெ சோமசுந்தரம் விளக்கிக் கூறினார். உள்ளகப் பயிற்சி மற்றும் மண்வாசனை திட்டவிவரங்கள் பகிரப்பட்டன. அறக்கட்டளை பொருளாளர் திரு சின்னக்கருப்பன் மண்வாசனை திட்டத்தை விளக்கியுரைத்தார். செயற்குழு உறுப்பினர் திருமதி வள்ளி மெய்யப்பன் கோடைகால விடுமுறையில் தமிழ்நாடு சென்று உள்ளகப் பயிற்சி பெற்ற ஆறு மாணவர்களை நேர்காணல் செய்தார். அவர்களின் அனுபவம், கூட்டத்திற்கு வந்திருந்த மற்ற மாணவர்களுக்கு வரும் வருடங்களில் பங்குகொள்ளும் ஊக்கத்தை அளித்தது.

டெலவர் தமிழ்ச்சங்கச் செயலாளர் திரு வெங்கட் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நிறைவுற்றது. அன்றைய தினம் நன்கொடையாக 5000 டாலர் நிதி திரட்டப்பட்டது.

எஸ்.எம். ஞானசபை,
ஃபில்டெல்ஃபியா

© TamilOnline.com