அட்லாண்டா திருச்சபை: கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி
கிறிஸ்து பிறந்த நன்னாளை ஒட்டி அட்லாண்டா தமிழ் திருச்சபையில் சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தேறின. ஆரம்பகட்ட நிகழ்ச்சியாக சபையார் வீடு வீடாகப் போய் கிறிஸ்து பிறப்பு பாடல்களைப் பாடியும் கிறிஸ்து பிறந்த சம்பவத்தை ஒட்டிய தேவ செய்திகளை அறிவித்தனர். .

அடுத்த கட்டமாக வாலிபர் சிறுவர் கிறிஸ்து பிறந்தநாள் நிகழ்ச்சி டிசம்பர் 9ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. வாலிபர்கள் ஆரம்பத்தில் கிறிஸ்து பிறப்புப் பாடல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடினர். பின் சிறுவர்கள் அழகான‌ கிராமிய நடனத்தின் மூலம், கிறிஸ்து பிறந்த செய்தியை அறிவித்தனர். திருச்சபையின் மூப்பர், சகோ. ஆன்டனி அற்புதராஜ் அவர்கள் வாழ்க்கை நெறிமுறைகளைப் பற்றி அருட்செய்தி பகிர்ந்து கொண்டார்கள்.

டிசம்பர் 16ம் தேதி சபையின் பாடல் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி மக்களை மகிழ்த்தினர். கிறிஸ்து பிறந்தபோது எல்லோரும் எப்படி அவரைப் பாடி வழிபட்டார்கள் என்பதைக் குறித்து போதகர் பால்மர் பரமதாஸ் அவர்கள் அருட்செய்தி வழங்கினார்கள்.

டிசம்பர் 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் ஆராதனை தொடங்கியது. பாடல் குழுவினர் பாடல்களைப் பாடினர். கிறிஸ்து பிறந்தபோது அவரைப் பார்க்க வந்தவர்களைக் குறித்து போதகர் பால்மர் பரமதாஸ் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து சபை மூப்பர் சகோ. ஆன்டனி அற்புதராஜ் வருடாந்திர அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்துடன் கிறிஸ்தும‌ஸ் இனிதே நிறைவ‌டைந்த‌து.

டிசம்பர் 31ம் தேதி இர‌வு 10:30 மணிக்கு பழைய ஆண்டின் ஆராதனை, தொடங்கி புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்க ஆண்டவர் அருள் புரிந்தார். போதகர், இந்த ஆண்டில் உங்களுக்கு ஆண்டவரின் ஆசீர்வாத மழை பெய்யும் என்று ஆசீர்வதித்தார். பரிசுத்த நற்கருணையுடன் ஆராதனை நிறைவுற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com