ஹூஸ்டன் தமிழ்க்கல்வி இருக்கை
ஜனவரி 12, 2019 அன்று பியர்லாந்து (டெக்சஸ்) ஸ்ரீ மீனாட்சி திருக்கோவிலுக்கு வந்திருந்த பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாருக்குப் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹூஸ்டன் தமிழ்க்கல்வி இருக்கைக்கான (Houston Tamil Studies Chair) மாநாட்டில் அவர் இந்த இருக்கையின் தேவை குறித்து விரிவாகப் பேசினார். இந்தக் கூட்டத்தை HTSC, மீனாட்சி திருக்கோவில் மற்றும் பாரதி கலை மன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் பத்மினி நாதன், பாரதி கலைமன்றத் தலைவர் பிரியா சந்துரு ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்க்கல்வி இருக்கையின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் வரவேற்புரை வழங்கினார். இருக்கையின் நிதித் துணைத்தலைவர் தூப்பில் நரசிம்மன் இருக்கை ஏற்படுத்தப்பட்டதன் விவரங்களை விளக்கினார். நிதி திரட்டல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.ஜி. அப்பன் நிதிவரத்து சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தார். பொருளாளர் டாக்டர் நா. கணேசன் பேச்சாளரை அறிமுகப்படுத்தினார். துணைத்தலைவர் டாக்டர் திருவேங்கடம் நன்றியுரை நல்கினார். இருக்கையின் செயலர் ஏ. பெருமாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மீனாட்சி திருக்கோவில் துணைத்தலைவர் தனி கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர் மாலதி சுந்தர் ஆகியோருக்கு அடிகளார் புத்தகங்களை வழங்கினார்.

ஹூஸ்டன் பகுதியில் இந்திய சமுதாயத்தினர் விரைந்து அதிகரித்து வரும் நிலையில் இந்திய மற்றும் ஆசியப் பின்புலம் கொண்ட இளைஞர்கள் பலர் ஹூஸ்டன் பல்கலையில் அதிக எண்ணிக்கையில் படித்து வருகின்றனர். தமிழ்மொழி ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்கென ஒரு தமிழிருக்கையை ஏற்படுத்த ஹூஸ்டன் பல்கலை ஏற்றுள்ளது. IRS 501(c)(3) பிரிவின்கீழ் இதற்கான அமைப்பு, நன்கொடைகளுக்கு வரிவிலக்குப் பெற்றுள்ளது. மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்க: sam.kannappan@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com