ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தவுடன் விரிகுடாப் பகுதிவாழ் மக்கள் ஆவலோடு பங்கேற்கும் தைப்பூசப் பாதயாத்திரை இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று சிறப்பாக நடேந்தேறியது. சான் ரமோன் மத்திய பூங்காவில் காலை 7:45 மணியளவில் துவங்கி கான்கார்டு சிவமுருகன் கோவில் வரை அன்பர்கள் பாதயாத்திரை சென்றனர்.
காலை ஐந்து மணிக்கெல்லாம் பலர் நடக்க ஆரம்பித்துவிட்டனர். சான் ரமோனில் தொடங்கி டேன்வில் வந்தவர்களுக்கு ஜான் பால்டுவின் பள்ளியில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை முடித்து, அலமோ வழியாக பதினோரு மைல் நடந்து, வால்நட் க்ரீக் லாஸ் லோமஸ் உயர்நிலைப் பள்ளியை அடைந்தனர். மதியம் 11:30 மணியளவில் அங்கே மத்திய உணவு. இங்கே 2500 பேர் வரிசையில் நின்று உணவருந்திச் சென்றனர். சற்று நேரம் இளைப்பாறி மீண்டும் நடக்கத் துவங்கினர். அதே நேரத்தில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வால்டேன் பூங்காவிலிருந்து நடையைத் துவங்கினர். சுமார் எட்டு மைல் தூரம் நடந்து, கான்கார்டு சிவமுருகன் ஆலயத்தை அடைந்தனர். வழி நெடுகிலும் குளிர்பானம், சுடுபானம், சுண்டல் எல்லாம் யாத்ரீகர்களுக்கு வழங்கப்பட்டது.
கான்கார்டு ஆலயத்தில் முடிந்த யாத்திரையை மேற்கொண்ட பக்தர்கள் நடந்து வந்த களைப்பினை மறந்து, வேல் முருகனைக் கண்டு, நெஞ்சுருகி வேண்டிச் சென்றனர். தரிசனம் செய்து வந்த கிட்டத்தட்ட 6000 பேர் உணவருந்தி வீடு திரும்பினர். வாஷிங்டன் DC, டெக்சஸ், ஜார்ஜியா என்று பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையில் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி என்று அனைத்து மொழியினரும், மத வேறுபாடின்றிக் கலந்துகொண்டது பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம்.
நடந்து செல்லும் பக்தர்களின் தேவைகளைக் கவனிக்க, மிதிவண்டியில் முன்னும் பின்னும் தன்னார்வத் தொண்டர்கள் போய்க் கொண்டிருந்தனர். வழி காட்டுதல், உணவு ஏற்பாடு மற்றும் பரிமாறுதல், குப்பை அள்ளிச் சுத்தம் செய்தல் என்று எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டன. இதில் பெரும் பணியாற்றிய தன்னார்வத் தொண்டர் குழுவினருக்குப் பாராட்டுக்கள். நடந்து வந்தவர்கள் திரும்பிச் செல்ல பேருந்து வசதி செய்துகொடுத்த கோவில் நிர்வாகத்திற்கு நன்றிகள். உணவளிப்பதில் உதவிய அஞ்சப்பர் உணவகம், சாஸ்தா புட்ஸ், ஆப்பக்கடை, வசந்த பவன் மற்றும் தனிநபர்களுக்கு நன்றிகள்.
இதனைச் சிறப்பாக நடத்திவரும் pathayathirai.org அமைப்பின் தலைவர் சோலை அழகப்பன் இந்தப் பாதயாத்திரை விரிகுடாப்பகுதியின் இந்தியத் துணைக்கண்டம் சார் அடையாள நிகழ்வுகளில் ஒன்று என்றால் அது மிகையாகாது எனத் தெரிவித்தார். இந்தத் தொண்டினைச் சிறப்பாக நடத்த உதவ விருப்பம் உள்ளவர்கள் pathayathirai.org என்ற இணையதளத்தை அணுகவும்.
கணேஷ் பாபு, சான் ரமோன், கலிஃபோர்னியா |