கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ்: பத்தாண்டு நிறைவு விழா
ஜனவரி 20, 2019 அன்று கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் அமைப்பு (CCC) தனது பத்தாண்டு நிறைவு விழாவை விரிகுடாப் பகுதியில் சிறப்பாகக் கொண்டாடியது. இது 'தக்ஷ தரங்கிணி' என்ற கருத்தை மையமாகக் கொண்டிருந்தது. கர்நாடக சங்கீத மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. 204 குழந்தைகளை பத்து குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும், 1 முதல் 10 வரை எண்களைக் குறிப்பாகக் கொண்டு, உன்னதமான பாட்டுக்களை வழங்கினார்கள். வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், கஞ்சிரா, கடம், சாக்ஸபோன் என்று எல்லாம் ஒன்றாக இசைத்தது கண்கொள்ளாக் காட்சி.

இந்த நிகழ்ச்சியை மேடையேற்ற 16 குருநாதர்கள் ஒரு வருட காலத்துக்கு மேல் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்திருக்கின்றனர். அகிலா ஐயர், அரவிந்த் லட்சுமிகாந்தன், கோபி லட்சுமிநாராயணன், ஹரி தேவநாத், கஸ்தூரி சிவகுமார், நடராஜன் ஸ்ரீனிவாசன், ரமா தியாகராஜன், ரவீந்திர பாரதி ஸ்ரீதரன், சரவணப்பிரிய ஸ்ரீராமன், சவிதா ராவ், ஸந்தியா ஸ்ரீநாத், ஸ்ரீநாத் பாலா, ஸ்நிக்தா வெங்கடரமணி, ஸ்ரீகாந்த் சாரி, சிவகுமார் பட், விவேக் சுந்தரராமன் ஆகியோரின் கடும் உழைப்பை நிச்சயம் பாராட்டவேண்டும்.

2009ம் ஆண்டில் பத்மா மோகன், சேம்பர் கான்செர்ட் முறையில் ஒவ்வொரு மாதமும் கர்நாடக சங்கீதம் பயிலும் குழந்தைகளை ஊக்குவிக்க எண்ணி ஆரம்பித்த ஒரு சிறிய அமைப்பாகத் தொடங்கியது CCC. விரைவில் இது வளர்ந்து, மில்பிடாஸ் ஷீரடி பாபா கோவிலில் மாதந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20, 30 நிமிடத்துக்குள் தமது வயதுக்கும் திறனுக்கும் ஏற்றவாறு குழந்தைகள் பாடியும், வாத்தியம் இசைத்தும் கச்சேரி நடத்தி வருகிறார்கள். இதில் உறுப்பினராக இருக்கும் குழந்தைகள் 70க்கும் மேற்பட்ட குருநாதர்களிடம் இசை பயின்று வருகிறார்கள்.

முதல் குழுவின் குழந்தைகள் அலங்காரங்களைப் பாடினார்கள். கடைசியான பத்தாவது குழுவில் இருந்த மாணவர்கள் கடினமான பல்லவியைப் பாடினார்கள். 16 குருநாதர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 204 குழந்தைகள் மற்றும் பத்மா மோஹன் இவர்களை பலமாகப் போற்றும் வகையில் அரங்கில் கரகோஷம் ஒலித்தது.

நிருபமா வைத்தியநாதன்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com