ஜனவரி 21, 2019 அன்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகம் தமிழ்மரபு தினவிழாவைக் கொண்டாடியது. கனடாவிலுள்ள 96 பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் இருப்பது 192 ஆண்டுப் பழமை கொண்ட டொராண்டோ பல்கலை. இந்த விழாவில் பிரபல இசையமைப்பாளர் டி. இமான் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். கவிஞர் யுகபாரதி எழுதி, தான் இசையமைத்த டோரண்டோ பல்கலைக்கழகத் தமிழிருக்கை வாழ்த்துப் பாடலை இமான் வெளியிட்டார். சூப்பர் சிங்கர் புகழ் திவாகர் இதைப் பாடியிருந்தார். பாடலுக்கு நிரோதினி நடனப்பள்ளி மாணவிகள் நடனமாடினர். விழாவில், 'அண்ணன்மார் கதை' வில்லுப்பாட்டும் பிற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம் டெட்டி வரவேற்றுப் பேசுகையில், மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் உருவாகும் தமிழிருக்கை புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுப்பதுடன் தமிழின் மேன்மையை அனைத்துலகுக்கும் கொண்டு செல்லும் என்று கூறினார். அவர் இமானின் இசையையும் தமிழ்ச் சேவையையும் பாராட்டி விருது வழங்கினார். ஏற்புரையில் இமான் தமிழர்கள் பலதேசங்களில் மதம், சாதி, கொள்கை எனப் பிரிந்து கிடந்தாலும் தமிழ் என்னும் ஒற்றைச்சொல் அவர்களை இணைக்கிறது, தமிழின் முன்னேற்றச் செயல்திட்டங்களுக்கு அவர்கள் ஒன்றாகப் பாடுபடவேண்டும் என்றார்.
இமானை நல்லிணக்கத் தூதுவராக நியமித்துக் கனடா தமிழிருக்கை பெருமை கண்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கனடியத் தமிழர் பேரவை இமானுக்கு 'மாற்றத்திற்கான தலைவர்' விருது வழங்கிக் கௌரவித்தது. அன்று டொராண்டோவின் தட்பநிலை -30 செல்சியஸ். கனத்த பனி காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டன. அப்படியிருந்தும் விழா அரங்கம் நிறைந்திருந்தது குறிப்பிடத் தக்கது.
அ. முத்துலிங்கம், டொராண்டோ, கனடா |