கடவுள் எதைப் பார்க்கிறார்?
மெக்கா நகரிலிருக்கும் மசூதி ஒன்றின் மூலையில் அப்துல்லா உறங்கிக் கொண்டிருந்தார். அவரது தலைக்குமேல் இரண்டு தேவதைகள் பேசிக்கொள்வதைக் கேட்டு அவர் கண்விழித்தார். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை அவர்கள் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்கள். மெக்கா நகருக்குப் புனிதயாத்திரை வராவிட்டாலும் கூட, சிக்கந்தர் நகரத்தில் வசிக்கும் மஹபூப் என்பவர் அந்தப் பட்டியலில் முதலிடம் பெறத்தக்கவர் என்று ஒரு தேவதை மற்றவரிடம் கூறியது. இதைக் கேட்டுவிட்டு அப்துல்லா, சிக்கந்தர் நகரத்துக்குப் போய்ப் பார்த்தார்.

அங்கே இருந்த மஹபூப் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவர் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். உடலில் உயிரை வைத்திருக்க மட்டுமே அவரது வருமானம் போதுமானதாக இருந்தது. பல வருடங்களாகச் சிக்கனம் பிடித்து அவர் சில செப்புக்காசுகளைச் சேர்த்து வைத்திருந்தார். ஒருநாள் அவர் அதைச் செலவிட்டு விசேடமான உணவுப்பொருள் ஒன்றைத் தயாரித்தார். அதைத் தனது கருவுற்றிருந்த மனைவிக்கு எதிர்பாராமல் கொடுத்து ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென்று எண்ணியிருந்தார்.

கையில் அதை எடுத்துக்கொண்டு போனபோது வழியில் கடும்பசியில் அழுதுகொண்டிருந்த பிச்சைக்காரர் ஒருவரைப் பார்த்தார். மஹபூபால் அதற்கு மேலே நடக்க இயலவில்லை. தன் கையிலிருந்த விலையுயர்ந்த உணவை அவனிடம் கொடுத்தார். அருகே உட்கார்ந்துகொண்டு, பிச்சைக்காரனின் சோர்ந்த முகம் திருப்தியால் மலர்வதை மனமகிழ்ச்சியோடு பார்த்தார். அவருடைய இந்தச் செயல்தான் அவருக்குக் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்தது.

கடவுள் பார்ப்பது செயலின் பின்னே இருக்கும் உணர்வைத்தான், ஆடம்பரத்தை அல்ல.

நன்றி: சனாதன சாரதி, ஜனவரி 2018

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com