இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. 2019ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ விருதை 94 பேர் பெறுகின்றனர். 4 பேர் பத்மவிபூஷணுக்கும், 14 பேர் பத்மபூஷணுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் பெண்கள், 11 பேர் வெளிநாட்டினர். மூன்று பேருக்கு இறப்புக்குப் பின் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுபெறுவர்களில் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம்.
பத்மஸ்ரீ: ஆன்மீகவாதி பங்காரு அடிகளார், சுவாமி விஷுதானந்தா, நடிகர் பிரபுதேவா, சுனில் ஷெட்டி, ராஜேஷ்வர் ஆச்சார்யா, மனோஜ் பாஜ்பாய், ஒமேஷ் குமார் பாரதி, திலீப் சக்கரவர்த்தி, கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், கே.ஜி. ஜெயன், டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல், ஓவியர் அப்துல் காபர் கத்ரி, தொல்லியல் துறையின் கே.கே. முகமத், பாடகர் சங்கர் மகாதேவன், அமெரிக்காவின் சந்தனு நாராயணன் (தொழில் முனைவோர்) மற்றும் கணபதிபாய் பட்டேல் (கல்வி மற்றும் இலக்கியம்), பிரபல நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் (மாற்றுப் பாலினத்தவர்), மதுரை சின்னப்பிள்ளை, சங்கரா கண் அறக்கட்டளை (SEF) நிறுவனரும் பிரபல கண் அறுவை சிகிச்சை மருத்துவருமான ஆர்.வி. ரமணி, டிரம்ஸ் கலைஞர் சிவமணி, பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, இசைக் கலைஞர் ஹீராலால் யாதவ் உள்ளிட்ட 94 பேர் இவ்விருது பெறுகின்றனர்.
பத்மபூஷண்: விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகர் மோகன்லால், குல்தீப் நய்யார் (மறைவுக்குப் பின்), அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் சேம்பர்ஸ் (தொழில்நுட்ப முயற்சிகளை முன்னெடுத்ததற்காக), தென்னாப்பிரிகாவின் பிரவீன் கோர்தன் (பொது விவகாரம்), ஹரியானாவின் சமூகசேவகர் தர்ஷன் லால், ஜார்க்கண்டின் கரியா முண்டா (பொது விவகாரம்), இசைக்கலைஞர் புதாத்தியா முகர்ஜி (மேற்கு வங்கம்), பச்சேந்திரி பால் (உத்தராகண்ட்) உள்பட 14 பேர் இவ்விருது பெறுகின்றனர்.
பத்மவிபூஷண்: அனில்குமார் பணிபை (மகாராஷ்டிரா), பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே (மகாராஷ்டிரம்), டீஜான் பை (சத்தீஸ்கர்) இஸ்மாயில் ஓமர் குல்லா (ஜிபௌட்டி) ஆகியோர் பெறுகின்றனர்.
விருதும் கேடயமும் கொண்ட இப்பரிசுகள் வரும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்படும்.
விருது பெற்றவர்களுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்! |