மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 13)
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள். என்ரிக்கே இயற்கையிலும், மனிதர்களின் தேர்ச்சி இனப்பெருக்கத்தாலும் (selective breeding) எப்படி மரபணு மாற்றங்கள் பரவுகின்றன என்றும் விவரித்தார். பிறகு க்ரிஸ்பர் முறை, அத்துடன் பல்திறன் மூல உயிரணு நுட்பத்தைச் சேர்த்துப் பயன்படுத்தி மிருகங்களின் உடலில் மனித அங்கங்களை வளர்க்கமுடியும் என்பவற்றையும், சமீபத்தில் முழுச் செயற்கை மரபணு எழுத்துக்களே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களை விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலே பார்க்கலாம்.

*****


மிகுந்த நிபுணத்துவம் வாய்ந்த தன் குழுவே அலசி ஆராய்ந்தும் கண்டுபிடிக்க முடியாத நுட்பப் பிரச்சனையை, தன் துறையில் திறன் பெறாத சூர்யா எப்படிக் கண்டறிய முடியும் என்று நம்பிக்கையில்லாத நிலையிலும், பொதுவாக இத்தகைய ஆழ்நுட்பங்களில், சம்பந்தப்பட்ட மனிதர்களால்தான் பிரச்சனை உருவாகிறது என்ற சூர்யாவின் கருத்திலும்கூட நம்பிக்கையில்லா விட்டாலும், வேறு வழி தெரியாத என்ரிக்கே, குழுவைச் சந்திக்க சூர்யா, ஷாலினி மற்றும் கிரணை அழைத்துச் சென்றார்.

நுட்பப் பிரச்சனையை விவரிக்குமாறு சூர்யா கேட்டுக் கொள்ளவே, முன்னறையிலிருந்து ஆராய்ச்சிக் கூடத்தின் உட்புறத்துக்கு நடந்து கொண்டே என்ரிக்கே விவரிக்கலானார். "எங்க ஆராய்ச்சியின் சிறப்பு நுட்பம் க்ரிஸ்பர் வழிமுறையில் செய்யப்படும், தக்க மாற்றங்கள் தவறாகாதபடி மற்ற சில பலனற்ற மாற்றங்களையும் சேர்த்துப் பிழை நிவர்த்திக்கும் குறியீடு (error correcting code) ஆகச் செய்திருக்கிறோம் என்று சொன்னேன். ஆனால் திடீர்னு பிழை நிவர்த்திபதற்கு பதிலாக எங்கள் குறியீட்டினால் பிழை அதிகரிக்க ஆரம்பிச்சுடுச்சு!"

சூர்யா சிந்தனையுடன் மேற்கொண்டு விவரிக்குமாறு சைகை செய்தார். என்ரிக்கே தொடர்ந்தார். "வெறும் க்ரிஸ்பர் காஸ்9 வழிமுறையில் மரபணுத் தொடரின் சில எழுத்துக்களை மட்டும் வேண்டியபடி மாற்றினால் வேண்டிய பலன் கிடைக்கும், ஆனா சிலமுறை அந்த சரியான மாற்றங்கள் ஏற்படலைன்னு சொன்னேன் இல்லையா? அத்தகைய பிழைகள் ஏற்படாம இருக்கறதுதான் நாங்க உருவாக்கிய நுட்பத்தின் குறிக்கோள். முதல்ல அது அப்படித்தான் பலனளிச்சது. ஆனா திடீர்னு சமீப காலமா குறிக்கோளுக்கு நேர் எதிர்மறையா, ஒவ்வொரு முறையும் பல பிழைகள் ஏற்பட ஆரம்பிச்சுடுச்சு. அப்படின்னா அடிப்படையான க்ரிஸ்பர் காஸ்9 வழிமுறையைவிட இது இன்னும் அதிகக் குறைபாடுள்ளதுன்னு ஆயிடுச்சு! அதுதான் பிரச்சனை."

ஷாலினி அதிர்ச்சியடைந்தாள். "என்ன? அடிப்படை நுட்பத்தைவிட மோசமாயிடுச்சா? அப்பப்போ சில சமயம் வேலை செய்யலைன்னா பரவாயில்லை, இந்த மாதிரி முதலுக்கே மோசம்னா... ஹூம் உங்க கவலை நியாயம்தான் என்ரிக்கே. என்ன சூர்யா?"

கிரண் இடைபுகுந்தான். "என்னோட பங்கு வியாபரத்துல முதலுக்கு மோசம் வரது ரொம்ப சகஜந்தான் ஸிஸ்! அந்த மாதிரி வச்சுக்க வேண்டியதுதான்!"

என்ரிக்கேயும் ஆமோதித்தார். "ஷாலினி நாங்க முதல்ல இந்த ஆராய்ச்சி தொடங்கறப்போ பலதரப்பட்ட வழிமுறைகளையும் நுட்பங்களையும் பரிசோதிச்சோம். அதுல சிலவற்றை நீ சொல்றா மாதிரி அப்பப்போ பழுதாகறதுனாலதான் நிராகரிச்சோம். ஆனா வேற சில இப்ப நடக்கறா மாதிரி அடிப்படை க்ரிஸ்பரை விட மோசமாவேதான் வந்துச்சு. இந்த மாதிரி ஆழ்நுட்ப ஆராய்ச்சில, கிரண் சொன்னா மாதிரி முதலுக்கே மோசமாகறது சகஜந்தான்."

சூர்யாவும் ஆமோதித்தார். "தாமஸ் ஆல்வா எடிஸன்கூட சரியா வேலை செய்யற மின்விளக்கு இழையைக் கண்டுபிடிக்கறத்துக்கு முன்னால பல நூற்றுக்கணக்கான இழைகளைப் பரிசோதிச்சாராம். ஆனா அவையெல்லாம் தோல்வியில்லைன்னுதான் எடிஸன் கருதினார். ஒவ்வொரு பழுதிலிருந்தும் எதாவது ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டதாகவும், அந்தப் பாடங்க்ளின் பலன்தான் பிறகு வெற்றிகண்ட மின்விளக்குன்னு எடிஸன் சொல்லியிருக்கார்."

என்ரிக்கே பாராட்டினார். "சரியாச் சொன்னீங்க சூர்யா. இந்த விஷயமும் அப்படித்தான். பழுதான ஒவ்வொரு வழிமுறையில் இருந்தும் கிடைச்ச பாடங்களாலதான் சரியான மரபணு மாற்ற நுட்பத்தை உருவாக்க முடிஞ்சது. ஆனா திடீர்னு ஒவ்வொரு முறையும் பிழைகளை ஏற்படுத்தறா மாதிரி அது ஏன் மாறிச்சுன்னுதான் புரியவே இல்லை."

சூர்யா ஆழ்ந்த சிந்தனையுடன் தலையசைத்தபடி, "சரி பிரச்சனை என்னனு ஓரளவுக்கு விளங்கிடுச்சு. அது ஏன் அப்படி ஆச்சுங்கறதைக் கவனிப்போம். உங்கக் குழுவுல முதல்ல யாரைச் சந்திக்கப் போறோம்?"

என்ரிக்கேயின் முகம் வாடியது. "நீங்க என் குழுவையே சந்தேகப் படறீங்கன்னு புரியுது. ஆனா நான் முதல்லயே சொன்னேன். அப்படி இருக்க வாய்ப்பில்லை சூர்யா. தங்கமான மனுஷங்க. இந்த நுட்பம் சரியா வேலைசெய்ய ஆரம்பிச்சப்போ எவ்வளவு ஆனந்தப்பட்டாங்க தெரியுமா?" என்று கூறியவர் ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தார். "ஹூம்... என்னவோ சரி, உங்கமேல பாரத்தைப் போட்டாச்சு, உங்க வழிலதான் பயணிக்கணும். என்ன நடக்குதோ நடக்கட்டும்! நாம முதல்ல சந்திக்கப் போறது என்னோட இந்த நிறுவனத்தையே முதல்ல தொடங்க உதவிய விக்ரம் மேத்தா என்கிற ஒரு மேதையைத்தான்."

கிரண் சிலாகித்தான். "அட, நம்மாளு! தேசியா? மேத்தா என்கிற மேதைன்னு வேற சொல்றீங்க? கேக்கறத்துக்கே நல்லா இருக்கு. ஆள் எப்படின்னு பார்ப்போம்!"

என்ரிக்கே சோகப் புன்னகை பூத்தார். "மேதைதான். இளைஞர்தான்! ஆனா பெரிய விஞ்ஞானி! வாங்க இதோ இந்த அறைதான்!" என்று ஒரு அறையின் கதவைத் தட்டினார். "கம் இன், திறந்துதான் இருக்கு" என்று குரல் வரவும் என்ரிக்கே கதவைத் திறந்து மற்ற மூவரையும் உட்புகுமாறு வரவேற்றார்.

என்ரிக்கே கூறியிருந்தாலும் விக்ரம் மேத்தாவின் தோற்றம் ஆச்சரியமளித்தது! மிகவும் இளைஞராகத் தோன்றினார். மேஜையிலிருந்து எழுந்து ஓடிவந்து மூவரையும் உற்சாகமாக வரவேற்றார். "ஓ! நீங்கதான் சூர்யாவா? வாங்க வாங்க. என்ரிக்கே உங்களைப்பத்தி நிறையச் சொல்லியிருக்கார். புகழ்பாடாத குறைதான்! ஆனாலும் இந்தப் பிரச்சனை ரொம்பவே நுண்ணிய சிக்கல். மரபணுத் துறையில நிபுணத்துவம் இல்லாம எப்படிக் கண்டுபிடிப்பீங்கன்னு எனக்கும் சந்தேகந்தான். இருந்தாலும் பரவாயில்லை, எங்க முயற்சிகள் எல்லாம் தோல்வியாயிடுச்சே, வேற எதாவது முயன்றுதானே ஆகணும். உங்களுக்கு என்ன உதவி வேணும்னு சொல்லுங்க, என்னால ஆன அளவு செய்யறேன்!"

விக்ரமையும் அவரது அறையையும் ஆழ்ந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்த சூர்யா விக்ரம் பேசி முடித்ததுமே ஒரு அதிர்வேட்டு வீசினார்! "ரொம்ப நன்றி விக்ரம். உங்க அறையை நல்லாவே அலங்கரிச்சிருக்கீங்களே. இது நீங்க பெர்க்கலியில படிக்கறச்சவே விலை உயர்வான அலங்கரிப்புல இருந்த ஆர்வமா, இல்ல இப்போ மோனாவோட பழகறச்சே அவங்ககிட்டேந்து தொத்திக்கிச்சா? ரெண்டு பேருக்கும் அதுல ரொம்ப ஒத்துமை போலிருக்கே?"

விக்ரம் மேத்தாவின் முகம் போன போக்கைப் பார்த்துக் கிரணுக்கு சிரிப்பே வந்துவிட்டது. மிகவும் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டான்!

விக்ரமின் முகம் இருண்டு, சினம் பொங்கியது. உணர்ச்சிக் கொந்தளிப்புடன் என்ரிக்கேயிடம் சீறினார். "இது என்ன என்ரிக்கே?

நம்ம பிரச்சனையை நம்மால தீர்க்க முடியலைன்னுதான் வெளி ஆளை வச்சு விசாரிக்கச் சம்மதிச்சேன். ஆனா இந்தமாதிரி என் அந்தரங்கக் குடும்ப வாழ்வையெல்லம் இந்த அளவுக்கு குடாய்வாங்கன்னு நினைச்சு கூடப் பார்க்கலை. சே! என்ன கீழ்த்தரமா இருக்கு! நீங்களும் உங்க துப்பறிவாளனும் இப்படியெல்லாம் இறங்கிட்டீங்களே? நம்பவே முடியலை."

பொங்கிய விக்ரமுக்கு என்ரிக்கேயின் முகபாவமோ எரியும் நெருப்பில் எண்ணையைத் தெளித்தது போலாயிற்று! சூர்யா கூறியதைக் கேட்டுச் சற்று அதிர்ந்து போனாலும், என்ரிக்கேவுக்கு விக்ரமின் சீற்றம் சிரிப்பைத்தான் தந்தது. முதலில் சூர்யாவைச் சந்தித்தபோது தன்னைப் பற்றி அவர் ஒரு யூகவேட்டு வீசியது ஞாபகத்துக்கு வரவே சிரித்து விட்டார்.

விக்ரம் வெடித்தேவிட்டார். "என்ரிக்கே! நான் கோபத்துல கொந்தளிக்கறேன்? நீங்க என்னடான்னா எனக்கு விளக்கம் சொல்லாம நீங்க செஞ்சது நியாயம், நான் ஒரு முட்டாள்ங்கற மாதிரி சிரிக்கறீங்க!"

என்ரிக்கே கையைத் தூக்கிக் காட்டிச் சமாதானப் படுத்தினார். "நோ, நோ! கொஞ்சம் பொறுத்துக்குங்க விக்ரம். நான் முதல்ல சூர்யாவை சந்திக்கறச்சயும் இப்படித்தான் அவர் படால்னு சொல்ல நானும் கோவிச்சுக்கிட்டேன். ஆனா, உங்களைப் பத்தி சூர்யாவுக்கு இந்த அறைக்குள்ள நுழையறதுக்கு முன்னால ஒண்ணுமே தெரியாது. அவருக்கு புத்திக்கூர்மை ரொம்ப அதிகம். என்னப் பார்த்ததும் எதோ சில விஷயங்களை சட்டுன்னு கவனிச்சு, அதோட சில அதிசய யூகங்களையும் சேர்த்துக் கோத்து இப்படி மாலையாப் போட்டுட்டார். இப்பவும் அப்படித்தான் எதாவது இருக்கணும். என்ன சூர்யா விளக்கிடுங்க, விக்ரம் தணிவாரு."

விக்ரம் சற்றே சினம் குறைந்தாலும் நம்பிக்கையின்றிக் குமுறினார். "அது எப்படிச் சில நொடிகளில கண்டுபிடிக்க முடியும்?! நீங்க சொல்றது நம்பக்கூடிய கதையா இல்லையே?!"

சூர்யா கையைத் தூக்கிக் காட்டி சமாதானக் கொடி காட்டினார்.

"ஸாரி விக்ரம். நான் அப்படி திடீர்னு கேட்டிருக்கக் கூடாது. ஆனா என்ரிக்கே சொல்றது சரிதான். நான் இங்க கவனிச்சதையும் அதோட சேர்த்து யூகிச்சதையும் வச்சுத்தான் அப்படிக் கேட்டேன். கேட்டதுக்கும் காரணம் இருக்கு, அதை அப்புறம் பாக்கலாம். முதல்ல உங்க சந்தேகத்தைப் போக்கறத்துக்கு நான் எதை வச்சு யூகிச்சேன்னு விளக்கிடறேன்.

சூர்யா விவரிக்க விவரிக்க, விக்ரமுக்கு ஆச்சரியம் எல்லை தாண்டியது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com