தென்றல் இதழின் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்து சிறுகதைகளும் வெவ்வேறு வாசிப்பனுபவத்தைத் தருவன. அந்தக் கால மனிதர்கள், வழக்குமொழி, நம்பிக்கைகள், கலாச்சாரம், சமூக சிந்தனைகள், பயம், காதல், துரோகம், சோகம் அனைத்தையும் இக்கதைகள் நமக்குத் தெரிவிக்கின்றன. கடந்துபோனதொரு நூற்றாண்டை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
பொதுவாகவே, எல்லாக் கதைகளிலும் இயற்கை விவரணை உண்டு. ஸுப்பையர் கதையில் சென்னையில் உள்ள பூங்காவனத்தையும், மரங்கள், பூக்கள், மேடைகள், நீர்க்கால், கூண்டுக்குள் மிருகங்கள் என கதை தொடங்குமுன் மூன்று பக்கங்களுக்கு விவரணைகள்! பாரதியார், 'தோட்டம், கிணற்றடி' என்றும், அ. மாதவையா செங்கோட்டை-கொல்லம் வழியில் குறிஞ்சி நிலத்தையும் விரிவாக விவரிக்கின்றனர்.
இக்கதைகளில் வரும் பல சொற்பிரயோகங்கள் இப்போது இல்லை. உதாரணமாக, "துர்லபம், சிரஸ்ததார், கூத்தாடி ஸந்தோஷிப்பது, திமில குமிலமாக இருக்கும் இடம், பரிஷ்காரமாய், நிர்ஜீவனானார், ஒரு ஶ்ரீமுகம் எழுதக்கூடாதா, ஜலமிறைத்து ஸ்நானம்" போன்றவை.
'திராவிட மத்தியகாலக் கதைகள்' தொகுப்பின் முதல் சிறுகதை 'பரம்பரை ஆண்டியோ பஞ்சத்துக்கு ஆண்டியோ' (1897). எழுதியவர் எஸ்.எம். நடேச சாஸ்திரி. மைசூர் சமஸ்தான அரசன் சாமுண்டன் தனது வைதீகன் குண்டப்பன்மீது கொண்ட நம்பிக்கையால் அவன் கேட்டபடியே நஞ்சங்கோடு தாசில் வேலையைத் தருகிறான். குண்டப்பனுக்கு, வைதீகம் செய்யும் ஒருவன் அரசு அலுவல்களை எப்படிச் செய்யலாம் எனச் சில அறிவுரைகளைத் தருகிறான். அவற்றை வார்த்தைக்கு வார்த்தை ஏதோ அர்த்தம் கொண்டு, அவன் அலுவலகத்தில் செய்யும் குளறுபடிகளை நகைச்சுவையுடன் சொல்லிச் செல்கிறது கதை. முடிவில் சாமுண்டன் "ஐயோ! அற்பனான இவனுக்கு நாம் அரைநாழிகை அதிகாரங்களைக் கொடுக்கப்போய், அநியாயமாக இவ்வளவு கிரஹஸ்தர்கள் தங்கள் குடுமிகளை இழந்தார்களே. நிரபராதியான சிரஸ்ததாரின் காது அப்பம்போல வீங்கித் தொங்குகிறதே" என வருந்துகிறான். குண்டப்பனுக்கு தாசில் வேலையுடன், வைதீக வேலையும் போய்விடுகிறது. அந்தக்கால நிர்வாகம், மரியாதை, உடைகள், பழக்கவழக்கங்கள், உரையாடல்கள், படிக்கும்போது வியக்க வைக்கின்றன.
மகாகவி பாரதியாரின் 'காந்தாமணி' (1919): நாயகி காந்தாமணி ஓர் இளம்பெண். அவள் சிறுவயதில் தன்னுடன் ஸ்நேகமாயிருந்த ஒரு மலையாள இளைஞனுடன் ஓடிப்போவதையும், ஒரு விதவைப் பாட்டி காதலனுடன் ஓடிப்போய் ரங்கூனில் புருஷனும், பெண்ஜாதியுமாய் வாழ்கிறார்கள் என்றும், அய்யங்கார், நாட்டுக்கோட்டை செட்டியிடம் வேலை பார்ப்பதாயும், பின்னிட்டு கிழவி தலை வளர்த்துக் கொள்கிறாள் என்றும் கதை சொல்கிறார். கலப்புத் திருமணம், விதவைமணம் இவற்றை ஆதரித்து எழுதினாலும், ஒரு எள்ளலும், நகைச்சுவையும் கலந்து, தான் ஒரு நல்ல கதை சொல்லியும்கூட என்பதை மகாகவி இக்கதையில் காண்பிக்கிறார்.
'மழை இருட்டு' (ரா.ஶ்ரீ. தேசிகன்): மழை வெள்ளம் சுழித்துக்கொண்டு ஓடும் ஆறு, உயிர்களைப் பலி வாங்கும் கதை. ஏதும் செய்யமுடியாத நிலை. கிட்டு பெருஞ்சுழலில் சிக்கி மறைந்துவிட, உடன் வந்த பாலு, அழக்கூட சக்தியற்று நிற்கிறான். அம்மாவும், அக்காவும் செய்திகேட்டு இடிந்து போகிறார்கள். இவை ஏதும் அறியாமல், ஊர் பெரிய உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது என்று முடிக்கிறார்.
'பெண் மனம்' சிறுகதையில், (கு.ப.ரா.) மனைவியின் சிநேகிதியை வெறித்துப் பார்த்து, அவளைப் பற்றியே சிந்தித்து, பேசிக் கொண்டிருக்கும் கணவன், இதனை உணர்ந்துகொண்ட மனைவி வெறுப்படைந்து, அவன் தவறினைப் புரிந்துகொள்ளும்படிப் பேசிவிடுகிறாள். மனதில் நிம்மதி வந்தாலும், அவமானத்துடன் படுத்துக்கிடக்கும் கணவனை அதற்குமேல் வருத்தப்பட வைக்க அவள் மனம் ஒப்பவில்லை. உளவியல் ரீதியாகப் பெண் மனத்தின் ஆழத்தை உணர்வது சிரமம் என்பதுபோல் முடிகிறது கதை.
கி. சாவித்திரி அம்மாள் எழுதிய 'பழைய ஞாபகங்கள்': இருபத்தேழு வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து சென்னைக்குத் திரும்பி வரும் ஶ்ரீனிவாசன் தன்னுடன் ஒரே வீட்டில் குடியிருந்த, இளமைக்காலக் காதலியை, அவளது வளர்ந்த மகளுடன், சந்திக்கிறார். (அவளுக்கும் விருப்பம் இருந்தது என்பதை ஒரு சிறு 'தலையாட்டல்' மூலம் போகிறபோக்கில் சொல்லியிருப்பார் ஆசிரியர்!) இவர் மனைவியை இழந்தவர், குழந்தைகள் இல்லாதவர். தன் இளமைக்கால நினைவுகளுடன் அவளுடன் பேசிச் செல்கிறார் என்று முடிகிறது கதை. சமீபத்தில் வந்த தமிழ்த் திரைப்படத்தின் கதையும் இதுதானே. நூறு ஆண்டுகள் ஆனாலும், காதலும், உணர்வுகளும், அவை விட்டுச் செல்லும் தாக்கமும் ஒன்றேதான் போலும்!
தி. செல்வகேசவராய முதலியார், வ.வே.சு. ஐயர் (கடிதம் மூலம் கதை), அ. மாதவையா, கா.சி. வேங்கடரமணி, ந. பிச்சமூர்த்தி ஆகியோரது சுவையான கதைகளும் இடம்பெற்றுள்ளன. காலக் கண்ணாடியாக நிற்கின்ற இந்தத் தொகுப்பு ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய நூல்.
டாக்டர் ஜெ.பாஸ்கரன், சென்னை
*****
விருட்சம் வெளியீடு, பக்கம் 106; விலை ரூபாய் 90. முகவரி: விருட்சம், சீதாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், எண் 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600033. செல்பேசி: 91 9444113205, 91 9176613205 மின்னஞ்சல்: navina.virutcham@gmail.com
(டாக்டர் ஜெ. பாஸ்கரன் தோல் மற்றும் நரம்பியல் மருத்துவர். எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர். பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது 'வலிப்பு நோய்கள்' நூல், தமிழ்நாடு அரசின் 'சிறந்த மருத்துவ நூல் மற்றும் ஆசிரியர்' வகையில், 2010ம் ஆண்டின் விருது பெற்றது. இவரது சிறுகதைகளும் கட்டுரைகளும் பல நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. சிறுகதைகளுக்காகப் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். 'குவிகம்' என்ற அமைப்பின் மூலம் இலக்கியப் பணியாற்றி வரும் இவர், சென்னையில் வசிக்கிறார்.)
புத்தகக் கண்காட்சி விருட்சம் அரங்கில் (இடவலமாக) எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், அரவிந்த் சுவாமிநாதன், அழகியசிங்கர், டாக்டர் ஜெ.பாஸ்கரன், மந்திரமூர்த்தி அழகு, தாமரைச்செல்வன் கிருஷ்ணசாமி, கிருபானந்தன் சீனிவாசன் |