ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 2)
பாபா செய்த மற்றோர் அற்புதம் மிகவும் அரிதானது. மசூதிக்குச் சற்றுத் தொலைவில் ஓர் ஆலமரம் இருந்தது. அதனருகே வற்றாத கிணறு ஒன்று இருந்தது. அருகில் ஒரு சிறு நதி இருந்தது. பாபா அதில்தான் குளிப்பார். ஒவ்வொரு சமயம் குளிக்கும்போது அப்படியே தன் விரலை உள்ளேவிட்டு, தன் குடலை வெளியே இழுப்பார். உடலின் புற உறுப்புகளைத் தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்வதுபோல குடலை அப்படியே தண்ணீரில் அலசி மரத்தில் காயப்போடுவார். நீராடி முடித்ததும் திரும்ப அதனை வாய் வழியே உள்ளே செலுத்தி விடுவார். இந்த அற்புதத்தைப் பலர் கண்டு வியந்துள்ளனர். ஆனால், இதைப் ஒரு பெரிய விஷயமாகவோ, அற்புதமாகவோ என்றுமே பாபா காட்டிக் கொண்டதில்லை.

*****


மசூதியில் எப்போதும் நெருப்பு மூட்டிக் குளிர்காய்வது பாபாவின் வழக்கம். அந்த நெருப்பு குளிர் காய்வதற்காக மட்டுமல்ல; தம்மை நாடி வருவோர்களின் கர்ம வினைகளை அதில் போட்டுப் பொசுக்குவதற்காகவும் தான் என்பதைச் சில பக்தர்கள் உணர்ந்திருந்தனர்.

ஒரு சமயம் அவ்வாறு நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார் பாபா. அவ்வப்போது சிறு சிறு விறகுக் கட்டைகளை அந்த நெருப்பிற்குக் கொடுத்து வந்தார். திடீரென விறகுக் கட்டைக்குப் பதிலாகத் தனது கையைக் கொடுத்து விட்டார். கை கருகிப் போய்விட்டது. பாபா நினைவற்று விழுந்துவிட்டார்.

அதைப் பார்த்த பக்தர்கள் பதறிப்போயினர். உடனே ஓடிப் போய் பாபாவுக்கு மயக்கம் தெளிவித்தனர். பாபா ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டனர்.

பாபா அதற்கு, "எனது பக்தர் ஒரு கொல்லர். அவரது மனைவி துருத்தி ஊதிக் கொண்டிருந்தாள். அவள் முழுக்க முழுக்க என்னையே நினைத்துக் கொண்டிருந்தாள், அதனால் அந்த நெருப்பின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையை அவள் கவனிக்கவில்லை. அது தவறிப்போய் நெருப்பில் விழுந்துவிட்டது. எனது பக்தருக்கு ஒன்று என்றால் நான் சும்மா இருக்க முடியுமா? அந்தக் குழந்தையைக் காப்பாற்ற நெருப்பில் கைவிட்டேன். குழந்தையைக் காப்பாற்றிவிட்டேன். எனது கைதானே கருகியது. அது சிலநாட்களில் தானாகச் சரியாகிவிடும் என்று சொன்னார்.

பக்தர்களுக்கு பாபாமீது இருந்த நம்பிக்கையையும், அந்தப் பக்தர்கள்மீது பாபா கொண்டிருந்த அன்பையும் அனைவரும் உணர்ந்து கொண்டனர். பாபாவைப் பணிந்து வணங்கினர். சில நாட்களில் பாபா சொன்னது மாதிரியே அந்தக் கை சரியாகிவிட்டது.

இவ்வாறாக பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. காணாமல் போன குதிரையைக் கண்டுபிடித்தது தொடங்கி, இறந்தவரை உயிர்ப்பித்தது, அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கியது, பக்தரின் நோய் தீர்த்தது, தம்மை நாடி வந்த பக்தரைத் திருடர்களிடமிருந்து காத்தது, ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி கொடுத்தது என்று அவர் செய்த அற்புதங்கள் கணக்கற்றவை. இன்றைக்கும் அவர் ஆற்றிவரும் அற்புதங்களுக்கும் குறைவே இல்லை.

*****


மகா புனிதர் பாபா
பாபா ஆரம்பத்தில் பிக்ஷை ஏற்று வாழ்க்கை நடத்தி வந்தார். பின் அவர் இருக்குமிடம் தேடி உணவு வந்தது. அவர் உணவைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. தினந்தோறும் அவர் தங்கியிருந்த மசூதியிலிருந்து, தான் உருவாக்கிய தோட்டத்துக்குச் செல்லும்போது குருஸ்தானத்தில் சிறிது நேரம் நின்று, தன் குருவை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். குருஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள சலவைக் கற்களால் ஆன இரு பாதங்களும், பாபாவின் படமும் அவரது வாழ்நாளிலேயே அவரது ஆசியுடன் வைத்து பூஜிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேகா என்ற ஷீரடி பக்தருக்கு பாபா வழங்கிய சிவலிங்கம்தான் குருஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

உதி
துவாரகா மாயியில் பாபா ஏற்றிவைத்த அக்கினி குண்டம் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரிப்பார் பாபா. தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து 'உதி' என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த 'உதி' மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ்வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது. அது இருக்கும் இடத்தில் தீயசக்திகள் நெருங்க முடியாது என்பது நம்பிக்கை.

பாபாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம் அதிகம். குழந்தைகள் முன்பு தானும் ஒரு குழந்தைபோலப் பழகுவார். பஜனை, பக்திப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பார். பக்தர்களைப் பாடச்சொல்லிக் கேட்கும் இவர், சில நேரங்களில் அதற்கேற்ப ஆடவும் செய்வார்.

*****


பாபாவின் சத்திய வாக்கு

தமது பக்தர்களுக்கு பாபா அருள்வாக்கு அளித்துள்ளார். அது 'பாபாவின் சத்திய வாக்கு' என்று போற்றப்படுகிறது.

ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து நலத்தை அடைகிறான்.
துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பம் உள்ளவர்களும் மிகுதியான மகிழ்ச்சியை அடைவார்கள்.
நான் இவ்வுலகை விட்ட பிறகும் சர்வசக்தியுடன் வேலை செய்வேன்.
என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.
என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இயங்குவேன்.
என்னிடம் வருபவர்களுக்கும், என்னைத் தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும், நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
நீ என்னைச் சரணடைந்தால் நான் உனக்கு அருள்புரிகிறேன்.
நீ என்பேரில் உன் பளுவைச் சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.
என்னுடைய, பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

*****


அவர் தன்னை நாடிவந்த பக்தர்களிடம், "எவன் என்னுடைய திருவடிகளைச் சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்; என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்; எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்; எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னைத் தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தைத் தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்” என்று உபதேசம் செய்திருக்கிறார்.

தம்மை நாடி வந்தோரின் வாழ்வில் ஏற்றமும் உயர்வும் அளித்த பாபா, தீராத வரப்ரசாதியாய் இருந்து பலரது நோய்களை நீக்கியிருக்கிறார். பலரது பாவங்களைப் போக்கி, துன்பங்களைக் களைந்திருக்கிறார். இவ்வாறு தன்னலம் எதுவுமில்லாது மக்கள் நலனுக்காகவே இறுதிவரை வாழ்ந்த ஸ்ரீ ஷீரடி சாயிபாபா, 1918ம் ஆண்டு, அக்டோபர் 15, விஜயதசமி நன்னாளன்று, பகல் 2.30 மணிக்கு மகாசமாதி அடைந்தார். பாபா தனது மகாசமாதிக்கு விஜயதசமி புனித நாளைத் தேர்ந்தெடுத்தலிருந்தே அந்நாளின் பெருமையையும், சிறப்பையும் நாம் அறிந்து கொள்ளலாம். இதே விஜயதசமி நன்னாளில்தான் ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகளும் மகாசமாதி ஆனார். அந்த அளவுக்கு சிறப்புப் பொருந்திய நன்னாள் விஜயதசமி. பகவான் ஸ்ரீ பாபா மகாசமாதி அடைந்த இந்த நன்னாளில் வருடந்தோறும் ஷீரடியில் மிகச் சிறப்பாக குரு பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஷீரடி ஆலயம்
மஹாராஷ்டிர மாநிலத்தின் அஹமத்நகர் மாவட்டத்தில், கோபர்காங் தாலுகாவில் ஷீரடி திருத்தலம் அமைந்துள்ளது. பாபாவின் சமாதி ஆலயம் இன்று கோடிக்கணக்கில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் மகத்தான சக்திமிக்க ஆலயமாகத் திகழ்கிறது. ஷீரடியில் பாபாவின் ஆளுயரத் திருவுருவம் அவரது சமாதியின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பாபாவின் பக்தர்கள் உலகெங்கிலும் பரந்து பரவியுள்ளனர். உலகெங்கிலும் ஷீரடி பாபாவுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஷீரடி ஆலயத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும் மைலாப்பூர் ஷீரடி பாபா ஆலயம் இவற்றில் முக்கியமானது. இதனை அமைத்தவர் பி.வி. நரசிம்ம சுவாமிகள்தான். வடநாட்டவர்கள் மட்டுமே அறிந்திருந்த பாபாவின் புகழைத் தென்னகத்திலும் பரவச்செய்தவர் இவர்தான். இவர் பகவான் ரமணரின் பக்தர். ரமணரது வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியவரும் இவரே! பகவான் ரமணராலேயே ஆசிர்வதிக்கப்பட்டு, பாபாதான் உனக்கு குரு என்று அடையாளம் காட்டப்பட்டு ஷீரடிக்கு அனுப்பப்பட்டவர். முதன்முதலில் தமிழில் ஷீரடி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் பி.வி. நரசிம்ம சுவாமிகள்தான். (இன்றும் மயிலை சாயிபாபா ஆலயத்தின் பின்புறத்தில் இருக்கும் நரசிம்ம சுவாமிகளின் சமாதியில் பகவான் ரமணரது படத்தையும் நாம் காணலாம்)

ஷீரடியில் தரிசிக்க வேண்டிய இடங்கள்:
சமாதி மந்திர், குருஸ்தான் வேப்பமரம் (பாபா அநேக ஆண்டுகள் இருந்த இடம். இங்குதான் ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி வழிபடுகின்றனர்), துவாரகா மாயி (பாபா வாழ்ந்த மசூதி), சிவன், சனீஸ்வரன், விநாயகர் கோயில்கள், லெண்டி பார்க் எனும் நீரோடைக்கு அருகில் உள்ள இடம், நந்தா விளக்கு, மாருதி கோவில், பாபா சீடர்களின் சமாதிகள், லக்ஷ்மி கோவில், கண்டோபா கோவில், மியூசியம் என அனைத்தும் அவசியம் காண வேண்டியவையாகும்.

ஷீரடி பாபா அருள் பெற
பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே அவதாரம் செய்தவர் ஷீரடி சாயிபாபா. இவரது அருளை பூரணமாகப் பெற பகவானின் வரலாறைக் கூறும் ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தொடர்ந்து வாசிக்கவேண்டும். அவ்வாறு பக்தியோடு வாசிக்க வாசிக்க நமது பிரச்சனைகள் அகலும்; தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. அதேபோல சாயி பகவானுக்கு வியாழக்கிழமை விரதம் இருப்பதும் பூரண பலன் தரும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் விரதமிருக்க நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். விரதத்தை வியாழக்கிழமையில் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கவேண்டும். எந்தக் காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதைத் தூயமனத்துடன் சாயிபாபாவை எண்ணிப் பிரார்தித்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை பாபா படத்தை அலங்கரித்துப் பூஜிக்க வேண்டும். பால், சர்க்கரைப் பொங்கல், பழம் நிவேதனம் செய்யவேண்டும். பகலில் ஒருவேளையாவது உபவாசம் இருந்து செய்யவேண்டும்.

2018ம் ஆண்டு பாபாவின் சமாதி நூற்றாண்டாகும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பகவான் பாபாவை இருந்த இடத்தில் இருந்து இணையத்தின் மூலம் நேரடியாகத் தரிசிக்க: www.sai.org.in

பா.சு. ரமணன்

© TamilOnline.com