நேர்கோடல்ல, மலைப்பாதை
அம்மாவுக்கு வணக்கம். எனக்குத் தமிழ் அவ்வளவு வராது. நண்பரை வைத்து எழுதுகிறேன்.

எனக்கு வாழ்க்கை சோகமாக இருக்கிறது. சிறுவயதிலிருந்து சுய கட்டுப்பாட்டில் வளர்ந்தவன் நான். எனக்கு என் பேனா, புத்தகம் யார் எடுத்தாலும் பிடிக்காது. பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன். அன்றன்றைக்கு ஹோம் வொர்க் முடித்துவிடுவேன். அந்தந்த நேரத்திற்குச் சரியாகச் சாப்பிடுவேன். என் அம்மா ஃபோனில் பேசிக்கொண்டிருந்து நேரம் ஆகிவிட்டால் சாப்பிடாமல் எழுந்து விடுவேன். என் வேலையை நானே பார்த்துக்கொள்வேன். நன்றாகப் படித்தேன். அமெரிக்கா வந்து 21 வருடம் ஆகிறது. கல்யாணம் ஆகிப் பத்து வருடங்கள் ஆகிவிட்டன. பத்தாவது கல்யாண நாளைக் கொண்டாடாமல், விவாகரத்துக்குத் தயார் செய்துகொண்டிருக்கிறேன். இரண்டு குழந்தைகள். 6 வயதில் பெண்; 4 வயதில் ஆண். தன்னையும் பெயர்த்துக் கொண்டு என் குழந்தைகளையும் பிரித்துக்கொண்டு தனியாக இருக்கிறாள் என் மனைவி. Liberated Woman. நான் பார்க்கப்போனால் குழந்தைகள் இரண்டும் என் பக்கம் திரும்புவதில்லை. அந்த அளவிற்குத் திசை திருப்பிவிட்டிருக்கிறாள். என்கூட இருக்கும் இந்த நண்பன், இந்தியாவிலிருந்து வந்திருக்கிறான். என்னுடன்தான் இரண்டு மாதமாகத் தங்கிக் கொண்டிருக்கிறான். எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறான், சமையல் செய்வதில் இருந்து வீடு சுத்தம் செய்வதுவரை. எனக்குச் சுத்தம் மிகவும் முக்கியம். இவன் அடுத்த மாதம் அசைன்மென்ட் முடிந்து போய்விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறேன். இவன் ஒரு தமிழ்ப் பைத்தியம். தென்றல் வாங்கிவந்து படித்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஆன்லைனில் பழைய இதழ்களைப் படித்திருக்கிறான். நான் மனச்சோர்வில் இருப்பதைப் பார்த்து உங்களுக்கு அவன்தான் எழுதச்சொல்லி வற்புறுத்தினான்.

விஷயத்துக்கு வருவோம். எனக்கு ஏன் இத்தனை சோகம்? நான் எல்லா விதத்திலேயும் perfect ஆக இருந்தேன். இருக்கிறேன். ஏன் எனக்கு நண்பர்கள் இல்லை? ஏன் என் மனைவி என்னிடம் விவாகரத்து கேட்கிறாள்? அவள் ரொம்பவே கவனமில்லாதவள். குழந்தைகளைச் சரியாக வளர்ப்பதில்லை, ஒழுங்காகச் சமைப்பதில்லை. நான் ஏன் என்று கேட்கக்கூடாது. Right. Liberated Woman! என் அம்மா அப்படி இருந்ததில்லை. எனக்குச் சகோதரிகள் கிடையாது. ஒரே ஒரு தம்பிதான். அவனும் இங்கே சிலநாள் இருந்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பப் போய்விட்டான். M.S. படிக்கும்போது விடுமுறையில் வீட்டுக்கு வருவான். நான் பணத்தாலும் நிறைய உதவி செய்திருக்கிறேன். ஆனால் இப்போது தொடர்பில் இல்லை. பெரிய மனிதன்! நான் கூப்பிட்டால்தான் இரண்டு வார்த்தை பேசுவான். இப்போது கல்யாணம் வேறு ஆகிவிட்டது. என்னிலும் பத்து வயது சின்னவன். ஆனால் மரியாதை கிடையாது. நண்பர்கள் என்று வருகிறார்கள். ஆனால் யாருமே நெருக்கமில்லை. எத்தனையோ பேருக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் யாருமே அவ்வளவு அக்கறையாக, நட்பாக என்னிடம் பழகியதில்லை. சிலருக்கு நன்றிகூட இருப்பதில்லை. என் மனைவிக்கே எவ்வளவு நகைகள் வாங்கிக்கொடுத்து, ஊர் சுற்றக் கூட்டிக்கொண்டு போயிருப்பேன்! வேலை கிடைக்காமல் ஐந்து வருடம் இருந்தாள். ஐந்து வருடமாக வேலையில் இருக்கிறாள். அதுவும் எப்படி இன்டர்வியூ செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தேன். வேலை இருக்கும் தைரியத்தில், "பிரின்சிபிள், பிரின்சிபிள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே! அதுவே உன்னை அழிக்கப்போகிறது. நானும் என் குழந்தைகளும் தப்பித்துக் கொள்கிறோம்" என்று சாபமிட்டுவிட்டுப் போய்விட்டாள். நான் யாருக்கு என்ன தவறு செய்தேன்? வாழ்க்கையில் perfect ஆக இருந்து கொண்டு பிறருக்கு அதைச் சொல்லிக்கொடுக்க நினைப்பது தவறா? பிரின்சிபிள் என்று சொல்வதில் என்ன குற்றம்? நான் நேர்கோட்டில் போகும்போது எல்லாரும் வளைவாகப் போய்க் கொண்டு என்னை ஏன் குறை சொல்கிறார்கள்? நான் டிப்ரெஷனில் போய்க்கொண்டிருக்கிறேன். Do you have any smart ideas to offer me?

நன்றி

இப்படிக்கு,
...........


அன்புள்ள சினேகிதரே,

எனக்கு smart ideas கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முதலிலேயே ஒரு ஆலோசனை மாத்திரம் கொடுத்துவிடுகிறேன். தயவுசெய்து டிப்ரெஷனுக்கு அருகில் போய்விடாதீர்கள். Your primary principle now should be not to get into depression. நீங்கள் கொள்கைப் பிடிப்போடு இருப்பதால், எப்படி டிப்ரெஷனைத் தவிர்ப்பது என்பது உங்கள் சுய கட்டுப்பாட்டிற்குள்ளேயே தெரியவரும்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். நீங்கள் ஒரு அருமையான ஸ்போர்ட்ஸ் கார் வாங்கி இருக்கிறீர்கள். Top of the line. உங்கள் சொல்படி கேட்டு ஜில்லென்று 100-150 மைல் வேகத்தில் பறக்கும். உங்கள் கனவெல்லாம் அந்தக் காரை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றவேண்டும் என்பது. நீங்கள் அருமையான டிரைவர். காரோட்டப் பிடிக்கும். Here you go. 30, 40, 50, 60, 70, 80, 90...100.... பறக்கிறது. உடல், மனம் எல்லாம்தான். திடீரென்று பூம் பூம்.. சை. சை. சை. Flash lights. Oh my God. 90, 80, 70, 60, 50... நல்லவேளை, அந்தப் போலீஸ் ஏதோ விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் பின்தொடரப் போய்க் கொண்டிருக்கிறது. தப்பித்தோம். மறுபடியும் 60... 70... 80... திடீரென்று ஒரு தாகம். ஒரு பானம் குடிக்கவேண்டும். எக்ஸிட் எடுக்க வேண்டும். 75... 60... 50... 40... 25. அதுதான் ஸ்பீடு லிமிட். மறுபடியும் ஹைவே. 25... 35... 50... 70... 75... திடீரென்று பார்த்தால் இரண்டு லேன்களை மூடியிருக்கிறார்கள். ஒரு அறிவிப்புப் பலகை: 'Your taxes are at work! Fines doubled.' மறுபடியும் 75... 45. GPS உங்கள் இறுதி எக்ஸிட்டைக் காட்டுகிறது. மறுபடியும் solw slow slow. மீண்டும் கொஞ்சம் slow, கொஞ்சம் high. வீடு வந்தாகிவிட்டது. Remote garage. வேகம் ரொம்ப ரொம்பக் குறைவு. வந்தாயிற்று. நின்றாகிவிட்டது. நீங்கள் அருமையான டிரைவர். ரசித்து ஓட்டினீர்கள். அது உங்கள் கனவுக் கார். உங்களுக்குள் ஒரு பெருமிதம், மகிழ்ச்சி. அடுத்தமுறை பக்கத்தில் உள்ள மலையுச்சிக்கு காரைச் செலுத்த நினைக்கிறீர்கள். Good Luck.

இந்த காருக்கும் என் நிலைமைக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி விடாதீர்கள். காரோ, வாழ்க்கையோ ஓட்டுவது நீங்கள்தான். With the car you were flexible, accommodative and adjusting. That is it.

வாழ்க்கை ஒரு நேர்கோடு அல்ல. கொண்டையூசி வளைவுகள் நிறைந்த மலைப்பாதை. எப்போது வளையவேண்டும், எப்போது இறங்க வேண்டும், எப்போது ஏற வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. எப்படி நுணுக்கமாக வளைய வேண்டும், எவ்வளவு அழுத்தம் கொடுத்து ஏறவேண்டும், எவ்வளவு குறைத்து இறங்க வேண்டும் - இதெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். At times we have to 'bend to mend'. இதெல்லாம் உங்களுக்கும் தெரியும். You are a smart man. உங்களைப்போல் 'principled' ஆக இருப்பது மிகவும் கஷ்டம். உங்கள் கடிதத்தின்மூலம் நான் கண்டுகொண்டது (I may be wrong) - கொஞ்சம் கோபம், கொஞ்சம் பொறுமையின்மை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் சுயநினைப்பு எல்லாம் சேர்ந்து சோர்வடைய வைத்திருக்கிறது. கண்டிப்பாக மாறிவிடுவீர்கள்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com