நர்த்தனா: ஆண்டுவிழா நடன நிகழ்ச்சிகள்
நவம்பர் 18, 2019 அன்று போர்ட்லாந்தின் செயின்ட் மேரிஸ் அகாடமி அரங்கில் குரு அனுராதா கணேஷ் நடத்தும் நர்த்தனா நடனப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சி குச்சிபுடியின் தேவியான பாலா திரிபுரசுந்தரியைப் போற்றி வணங்கும் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

தொடர்ந்தது "ஸ்ரீ விக்னராஜம் பஜே". ஸ்ரீராம வர்மாவின் அமர நாராயண கீர்த்தனத்திற்குத் தொடக்கநிலைக் குழந்தைகள் "ஸ்ரீராமா நீ நாமமு" என்று ஆடியது மெய்சிலிர்க்க வைத்தது. அடுத்து டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பாடிய "சிவ சிவ பவ பவ" என்ற பாடலின் நடனம். "ஸ்ரீமன் நாராயணா", "சுதாமயி சுதாநிதி" ஆகிய பாடல்களுக்கான நடனங்கள் தொடர்ந்தன. உலகப் புகழ்பெற்ற யான்னியின் இசையமைப்பில் "நோஸ்டால்ஜியா" என்ற இசைக்கு குரு அனுராதா கணேஷுடன் மூத்த மாணவியரான மினி, ஜானகி, ஷ்ராவிதா, மேகனா, ரத்னா, ஹரிணி ஆகியோர் மிக நளினமான அசைவுகளுடனும் தாள லயத்துடனும் ஆடிய நடனம் அருமையிலும் அருமை.

அடுத்து "வெடலேரா வொய்யாருலு", தீக்ஷிதரின் "ஆனந்த நடன பிரகாசம்" ஆகியவற்றுக்கான நடனங்கள் இடம்பெற்றன. முருகனைப்பற்றி கலைமாமணி நர்மதா இயற்றிய "அரோகரா" என்ற காவடிச்சிந்து வெகு சிறப்பு. மலை உச்சிக்குக் காவடி சுமந்து செல்ல அஞ்சும் ஓர் இளம் பக்தைக்கு, 'வள்ளி திருமணம்' கதையைக் கூறி உற்சாகப் படுத்துவதை மிகச்சிறப்பாக ஆடி அவையோரின் பலத்த கரவொலி பெற்றனர் அனுராதா குழுவினர். இறுதியாக 75 மாணவியரும் 'தாள மந்த்ரா' என்ற தொகுப்பிலிருந்து பண்டிட் ரவிசங்கர், ஜார்ஜ் ஹாரிஸ் ஆகியோரின் இசையமைப்பில் அமைந்த அமைதிக்கான மந்திரத்தை ஆடினர். இது நிகழ்ச்சியின் சிகரமாகும்.

குச்சிப்புடி நர்த்தனா நடனப் பள்ளியை நடத்தி வரும் குரு அனுராதா கணேஷ் 14 வருடங்கள் திருமதி சிட்டி துர்காதேவியிடம் குச்சிபுடி பயின்றுள்ளார். தன் தந்தை கோதண்டராமனிடம் பரதநாட்டியமும் பயின்றுள்ளார். இதுவரை போர்ட்லாண்டில் ஐந்து அரங்கேற்றங்களை நடத்தியுள்ளார்.

டாக்டர் கிருஷ்ணவேணி அருணாசலம்,
போர்ட்லாந்து, ஓரிகான்

© TamilOnline.com