ஹூஸ்டன்: குழந்தைகள் தினம்
நவம்பர் 17, 2018 அன்று தமிழ் நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன், டெக்சஸ் கிளை (houston.tnfusa.org) குழந்தைகள் தினத்தை அனைத்து இந்தியர்களுடன் கொண்டாடியது. விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாகத் தமிழ்நாட்டிலிருந்து இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகரான திரு சத்தியன் மகாலிங்கம், 'கலக்கப்போவது யாரு' புகழ் திரு வடிவேல் பாலாஜி ஆகியோர் வந்திருந்து நடத்திக் கொடுத்தனர். துவக்கப்பாடலை சத்தியன் மகாலிங்கம் பாடினார்.

ஆடை அணிவகுப்பில் சிறு பிள்ளைகள் வலம்வர, அவர்களுடன் கலகலப்பாக உரையாடினார் வடிவேல் பாலாஜி. 'மாத்தி யோசி' என்ற நிகழ்ச்சியை இவர் பிள்ளைகளுடன் விளையாடினார். தமக்கே உரிய பாணியில் சிறாரைத் தமிழில் பேசவைத்து நிகழ்ச்சிக்கு அழகு சேர்த்தார்.

பெரிய பிள்ளைகள் 'நான் ஒருநாள் முதல்வர் ஆனால்' என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் வெளுத்து வாங்கினர். சத்தியம் மகாலிங்கத்துடன் சேர்ந்து பல பிள்ளைகள் தங்கள் குரல்வளத்தை மேடையேற்றினர்.

இறுதியில் பேசிய கிளைத் தலைவி திருமதி மாலா கோபால் அறக்கட்டளையின் தொண்டினைத் தொடர அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்பதை நினைவுபடுத்தினார்.

நந்து ராதாகிருஷ்ணன்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com