BATM ஹேக்கத்தான்
டிசம்பர் 15, 2018 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் BATM Hacks என்ற ஹேக்கத்தான் (Hackathon) நிகழ்ச்சியைக் கலிஃபோர்னியாவின் சான் ஹோசே பகுதியில் ஏற்பாடு செய்திருந்தது. ஹேக்கிங் தொழில்நுட்ப அறிவுத்திறனை வளர்ப்பதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் எழுபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் How to Pitch, இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), தரவு அறிவியல் (Data Science), Web Development (HTML), App Development (Xcode) போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்த சிறப்புரைகள் வழங்கப்பட்டன. சமூகம், போக்குவரத்து, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய நான்கு தலைப்புகளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி அமைந்திருந்தது. மாணவர்கள் இந்தத் துறைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாகச் செயல் திட்டங்களை உருவாக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியை, BATM இளைஞரணி பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்தியது. சிஸ்கோ அலுவலக வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் பிரதான ஸ்பான்சரான சிஸ்கோ, நிகழ்ச்சிக்கான அரங்கு, உபகரணங்கள், உணவு, மற்றும் ஆறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளித்தது குறிப்பிடத் தக்கது.

உதவி திரு. கந்தசாமி பாண்டியன் (மென்பொருள் கட்டமைப்பாளர்) அவர்களுக்கும், வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் அஷ்வின்கார்த்திக் ரமேஷ்பாபு, வியோம் சிங், பிரனித் பாண்டா, மற்றும் ஃப்ரிமான்ட்டைச் சேர்ந்த அஷ்வின் நடம்பள்ளி ஆகியோர் இந்த 12 மணிநேர நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உதவினர். வரும் வருடங்களில், சிலிக்கான் வேலியின் பல நிறுவனங்களுடன் இணைந்து ஹேக்கத்தான் நிகழ்ச்சிகளை நடத்த BATM திட்டமிட்டுள்ளது. மன்றச் செயற்குழு சார்பாக சிஸ்கோ குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவிக்கப்பட்டது.

© TamilOnline.com