கம்மிங்: ஆருத்ரா தரிசனக் கச்சேரி
டிசம்பர் 23, 2019 அன்று ஜார்ஜியாவின் கம்மிங் நகரில் உருவாகிக் கொண்டிருக்கும் சிவ துர்கா திருக்கோவிலில் ஆருத்திரா தரிசனத்தை ஒட்டிப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலையில் பஞ்சாமிருத ருத்ர அபிஷேகம் அர்ச்சனை, ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.

மாலை நிகழ்ச்சிகள் தேவார, திருவாசக திருமுறை ஓதலுடன் தொடங்கியது. பின்னர் இளைஞர் ஜெயதேவ் அனிருத் ஷர்மா கர்நாடக இசைக் கச்சேரி ஒன்றை வழங்கினார். மதுரை ஆர். சுந்தர் (மிச்சிகன்) அவர்களிடம் பயின்று வரும் இவர் "பிரணமாம்யஹம் கௌரிசுதம்" என்ற பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். அடுத்து வந்தது சுகமான சங்கராபரணத்தில் "சங்கராச்சார்யம்". ஆபோகியில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "சபாபதிக்கு வேறு தெய்வம்" பாடலை மிக விஸ்தாரமாகப் பாடினார். இந்தப் பாடலுக்கு ஆதித்யா கிருஷ்ணன் வயலினிலும், கார்த்திகேயன் கணேசன் மிருதங்கத்திலும் தனி ஆவர்த்தனம் செய்து கைதட்டல் பெற்றனர். "பெற்ற தாயினை மக மறந்தாலும்" என்பதை விருத்தமாகப் பாடியபின் நாதநாமக்ரியையில் "சிவசிவ போ" என அருமையாகப் பாடினார். "துர்காதேவி துரிதநிவாரிணி" என்ற பாடலுக்குப் பின் விறுவிறுப்பாக மந்தாரி ராகத் தில்லானா வந்தது. "அருணாசல சிவ" என்னும் சாயி பஜனுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

பாடிய ஜெயதேவ், பக்கம் வாசித்த ஆதித்யா, கணேசன் ஆகிய மூவருமே ஜார்ஜியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் அர்ச்சகர் திரு கார்த்திக் தீக்ஷிதர் நிகழ்ச்சிகளை நன்கு ஒழுங்கு செய்திருந்தார். வளர்ந்துவரும் இந்தக் கோவிலைப் பற்றி அறிய: shivadurgatempleofatlanta.org

விஜய் ஷர்மா,
கம்மிங், ஜார்ஜியா

© TamilOnline.com