இதற்குமுன் ஒருபோதும் சென்றிருக்காத ஏதோவொரு அயல்நாட்டின்
ஒரு வெறுமையான தெருவிலிருந்து துவங்குகிறது அந்தக் கனவு.
நகரவாசிகளின் புதிரான மொழி குறித்தோ
பாஸ்போர்ட் விசா தொடர்பான ஆபத்துக்கள் குறித்தோ நீளும் என் கனவுக்குக் கவலையில்லை.
திடுதிப்பென்று இப்படி அயல்நாடு வந்தால் எங்கே தங்குவதென்பது பற்றியோ
குறைந்த பட்சம் காலை உணவு குறித்தோ கொஞ்சமும் அக்கறையில்லை.
குளிருக்குச் சற்றும் பொருத்தமில்லாத போர்வையுடனும் கால்களுக்குச் சப்பாத்துக்களுமின்றி எத்தனை தூரம்தான் இன்னும் கூட்டிச்செல்லுமோ என நடுக்கமுற்று நிற்க-
நல்லவேளை அந்தக் கனவின் அடுத்த தெருவிலேயே தென்பட்ட என் வீட்டின் படுக்கையறைக்குள் புகுந்து போர்த்திக்கொள்ள
எனைத் தேடி அயல்தேசத்தின் அடுத்த தெருவிலேயே காத்திருக்கக்கூடும் அந்தக் கனவு.
சுந்தர்ஜி ப்ரகாஷ் |