கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டம், 2018ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்குகிறது.
இமையம் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது விருத்தாசலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும், வெ. அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டு கிராமங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களே இவர் கதைகளின் பாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கை, கலாசாரம், சாதி, வகுப்பு, பால் பேதங்களால் அவர்கள் படும் அவலம் போன்றவற்றை அவர்களின் மொழியிலேயே கதைகளாக வடித்திருக்கிறார்.
"தமிழில் இதற்கு இணையாக நாவல் இல்லை" என்று அவரது முதல் நாவலான 'கோவேறு கழுதைகள்' நூலைத் தமிழின் முன்னோடி எழுத்தாளர் சுந்தர ராமசாமி விமர்சித்திருக்கிறார். இந்நாவல் Beasts of Burden என ஆங்கிலத்தில் வெளியானது.
மனித மனங்களின் பல்வேறுபட்ட மனநிலைகளை தன் ஒவ்வொரு புனைவிலும் காத்திரமாகப் பதிவுசெய்துவரும் இமையம் தமிழ்பொ படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும், சாதி ஆதிக்க மனோபாவத்தைத் தொடர்ந்து விமர்சிப்பவராகவும் விளங்குகிறார். "இலக்கியப் படைப்பு என்பது சமூக விமர்சனம். சமூக இழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை. சமூக இழிவுகளைச் சுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன். நான் சரியாகவும், முழுமையாகவும் சமூக இழிவுகளைப் பதிவு செய்திருக்கிறேனா என்பதில்தான் என்னுடைய கதைகளுக்கான உயிர் இருக்கிறது. எழுத்தின் அடிப்படையே அதுதான்" என்கிறார் இமையம்.
இமையத்தின் கதைகள் "இப்படிப்பட்ட சமூகத்திலா நாம் வாழ்கிறோம்?" என வாசகர்களைக் கண்ணீர் விடவும், கூசவும் வைப்பவை. இவருடைய சிறுகதைகள் நம்மை ஒரு புதிய உலகத்துக்குள் அழைத்துச் செல்கின்றன. சாதி ஆணவக் கொலையைப் பற்றிய 'பெத்தவன்' என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இக்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு, திருப்பதி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ளது.
கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் ஆகிய இவருடைய நாவல்களும், நாலு சிறுகதை தொகுப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன. அக்னி விருது, பெரியார் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்படப் பல விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறார்.
இவருடைய மனைவி புஷ்பவல்லி, மகன்கள் கதிரவன், தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் விருத்தாசலத்தில் இவர் வசித்து வருகிறார். விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2019 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.
அ. முத்துலிங்கம்
(தென்றலில் இவரைப்பற்றி வாசிக்க) |