இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனது 'சஞ்சாரம்' நாவலுக்காக இவ்விருதைப் பெறுகிறார் எஸ். ராமகிருஷ்ணன். 1966ல் பிறந்த ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணற்றைப் பூர்வீகமாகக் கொண்டவர். இளவயதிலிருந்தே வாசிப்பில் மிகத் தீவிரமாக இருந்த எஸ்.ரா. அக உந்துதலால் எழுத ஆரம்பித்தார். 'பழைய தண்டவாளம்' என்ற முதல் சிறுகதை கணையாழியில் வெளியாகி இவரை ஒரு நல்ல படைப்பாளியாக அடையாளம் காட்டியது. அதுமுதல் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள். திரைப்பட உரையாடல் என்று தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனந்த விகடனில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி போன்ற தொடர்கள் மூலம் வெகுஜன வாசகர்களையும் இலக்கியத்தின் பக்கம் ஈர்த்தவர். 'உப பாண்டவம்', 'நெடுங்குருதி', 'உறுபசி', 'யாமம்', 'துயில்', 'இடக்கை' போன்றவை இவரது முக்கியமான நாவல்கள். 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை', 'அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது', 'நகுலன் வீட்டில் யாருமில்லை', 'புத்தனாவது சுலபம்', 'வெளியில் ஒருவன்', 'தாவரங்களின் உரையாடல்', 'பால்ய நதி', 'காந்தியோடு பேசுவேன்' போன்றவை முக்கியமான சிறுகதைத் தொகுதிகள். 'விழித்திருப்பவனின் இரவு', 'இலைகளை வியக்கும் மரம்', 'நம் காலத்து நாவல்கள்', 'காற்றில் யாரோ நடக்கிறார்கள்', 'வாசகபர்வம்', 'சிறிது வெளிச்சம்', 'கூழாங்கற்கள் பாடுகின்றன', 'எனதருமை டால்ஸ்டாய்', 'ரயிலேறிய கிராமம்', 'இலக்கற்ற பயணி', 'அயல் சினிமா', 'உலக சினிமா', 'பேசத்தெரிந்த நிழல்கள்', 'பறவைக் கோணம்' போன்றவை நல்ல வரவேற்பைப் பெற்றக் கட்டுரைத் தொகுதிகளாகும். இவரது சிறார் கதைகளைப் போலவே, சொற்பொழிவுகளுக்கும் உரைவீச்சுகளுக்கும் மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
சாகித்ய அகாதமி விருது ஒரு லட்சம் பரிசுத்தொகையும் நினைவுக் கேடயமும் கொண்டது.
தென்றலில் இவரது நேர்காணல் |