டிசம்பர் 23, 2018 அன்று தமிழறிஞரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையின் மேனாள் துணைவேந்தருமான க.ப. அறவாணன் (77) காலமானார். இவர், 1941ல் திருநெல்வேலியில் உள்ள கடலங்குடி கிராமத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பு உள்ளூரிலும் அருகிலுள்ள விஷ்ணுபுரத்திலும் கழிந்தது. விஷ்ணுபுரம் பள்ளியில் தமிழாசிரியர் கந்தசாமி குருக்களின் ஊக்குவிப்பால் தமிழின்மீது ஆர்வம் ஏற்பட்டது. உள்ளூர் விவேகானந்தர் நூலகத்தில் வாசித்த நூல்கள் அறிவு சுடர்விடக் காரணமாயின. அப்துற் றஹீம், டாக்டர் மு.வ.வின் நூல்கள் இவரது உள்ளத்துள் தன்னம்பிக்கையையும், சாதிக்கும் உணர்வையும் தோற்றுவித்தன. அண்ணாமலை பல்கலையில் முதுகலைப் படிப்பை முடித்ததும் நெல்லை தூய சவேரியார் கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. இளவயது முதலே தமிழார்வலராக இருந்த இவர், ஆய்வாளராகத் தன்னை வளர்த்துக்கொண்டார். தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலகட்டத்தில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். செனகால் நாட்டின் டக்கார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உண்டு. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினராக இருந்துள்ளார். இவர் எழுதிய 'தமிழ்ச் சமுதாய வரலாறு', 'தமிழ் மக்கள் வரலாறு', 'தொல்காப்பியக் களஞ்சியம்', 'சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை', 'சோழர்காலத் தமிழ் மக்கள் வரலாறு', 'இஸ்லாமியர் காலத் தமிழ் மக்கள் வரலாறு' போன்றவை முக்கியமானவை. 'எழுத்துப் பயணம்' என்ற தலைப்பில் 78 நூல்களுக்கு வழங்கிய ஆய்வு முன்னுரைகளை நூலாக்கியுள்ளார். கவிதையிலும் இவருக்கு ஆர்வமுண்டு. 'ஒளி பரவட்டும்' என்பது இவர் எழுதிய முதல் கவிதை நூல். சிறுகதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். 'கண்ணீரில் எழுதிய கதைகள்', 'அவள் அவன் அது', 'தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்', 'செதுக்காத சிற்பங்கள்', 'சொல்ல முடிந்த சோகங்கள்', 'நல்லவங்க இன்னும் இருக்காங்க' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். தன் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து இவர் எழுதியிருக்கும், 'பொறு, புறக்கணி, புறப்படு', 'அனுபவங்கள் பேசுகின்றன' என்ற இரு நூல்களும் முக்கியமானவை. சமூகவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
சிறந்த நூல்களுக்கான தமிழக அரசு விருதை மூன்று முறை பெற்றவர். பேண்ட், ஷர்ட், கோட், தொப்பி, கண்ணாடி என்று வித்தியாசமான தோற்றத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். தமிழர் வரலாறு, சமூகவியல், மானுடவியல், தமிழ் இலக்கியம் எனப் பல்வேறு தளங்களில் மேதைமை உள்ளவர். கொங்கு, தேடல், அறிவியல் தமிழியம் போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் செயலாளர், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவர் தமிழ்ச் சான்றோர்களுக்கு ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி வந்தார். |