எழுத்தாளர் பிரபஞ்சன்
இறுதிவரை இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளியான பிரபஞ்சன் (73), டிசம்பர் 21ம் நாளன்று காலமானார். ஏப்ரல் 27, 1945 அன்று புதுச்சேரியில் பிறந்த இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். பள்ளிப் பருவத்தில் வாசிக்கக் கிடைத்த நூல்கள் இவருள் இலக்கிய ஆர்வத்தை விதைத்தன. முதல் சிறுகதை 'என்ன உலகமடா?' பரணி என்ற இதழில் வெளியானபோது பிரபஞ்சனின் வயது 16. இலக்கிய ஆர்வத்தால் கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்று வித்வான் பட்டம் பெற்றார். சில காலம் புதுச்சேரிப் பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றினார். படைப்பார்வத்தால் குமுதம் இதழில் பணியில் சேர்ந்தார். பணியாற்றிக் கொண்டே படைப்பின் சிறகுகளை விரித்தார். விகடன், குங்குமம், மக்கள் தொலைக்காட்சி என பல ஊடகங்களில் இவரது பங்களிப்பு தொடர்ந்தது.

எளிய மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாகப் படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவர் பிரபஞ்சன். மனிதர்களின் குண இயல்பை மிகையின்றிச் சித்திரிப்பவை இவரது எழுத்துக்கள். சங்க இலக்கியங்களில் ஆழமான அறிவு கொண்டவர். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து இவர் எழுதியிருந்த 'வானம் வசப்படும்' புதினத்திற்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இவரது மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, கண்ணீரால் காப்போம் போன்ற புதினங்கள் முக்கியமானவை. சிறுகதைத் தொகுப்புகள், நாவல், கட்டுரை, நாடகங்கள் என நூற்றுக்கணக்கில் எழுதியுள்ளார். தனது படைப்புகளுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருது, இலக்கியச் சிந்தனை விருது, ஆதித்தனார் விருது உட்படப் பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றவர். புதுவை அரசின் சிறந்த எழுத்தாளர் விருதும் இவரைத் தேடி வந்தது. இளைய எழுத்தாளர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

பிரபஞ்சன் பற்றி தென்றலில் வாசிக்க

© TamilOnline.com