அந்தத் தயாரிப்பாளருக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துப் போய்விட்டது. இனிய குரலில் பாடவும் வேறு செய்கிறார் என்றால் அக்காலத்தில் கேட்க வேண்டுமா? உடனே தனது அடுத்த படத்துக்கு 'நீதான் கதாநாயகி' என்று கூறிவிட்டார். அதுமட்டுமா? அவரையும், மற்ற சில நடிகர்களையும் தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்துவிட்டு படப்பிடிப்பை நடத்த, பெங்களூரு அழைத்துச் சென்றுவிட்டார். நடிகர், நடிகைகள் ஒரு ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் வருவதாக அறிவித்துச் சென்றார் தயாரிப்பாளர். காலை போய், மதியம் வந்து மாலையும் ஆகி விட்டது. தயாரிப்பாளரைக் காணோம். மறுநாளும் வந்தது. தயாரிப்பாளர் வரவில்லை. போனவர், போனவர்தான். அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அறைச் செலவையும் ஈடுகட்ட முடியாமல் அந்தப் பெண் தனது கை வளையல்களையும், நகைகளையும் கழற்றிக் கொடுத்தார். மற்றவர்கள் தங்கள் கையில் உள்ள பணத்தைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு தான் அவர்களால் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடிந்தது. முதல் படத்தின் நிலையே இப்படியா என்று அந்தப் பெண்ணுக்கு திரைப்படங்களின் மீதே வெறுப்பு ஏற்பட்டது. பிற்காலத்தில் திரைப்படங்களில் அவர் அதிகம் நடிக்காததற்கும் அதுவே காரணமானது. திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் கர்நாடக இசைப் பாடகியாகவும் சாதனைகள் நிகழ்த்திய அந்தப் பெண் என்.ஸி. வஸந்தகோகிலம்.
கேரளாவின் இரிஞ்ஞாலக்குடாவில் உள்ள வெள்ளங்கள்ளூரில் 1919ம் ஆண்டில் பிறந்தவர் வஸந்தகோகிலம். இயற்பெயர் காமாக்ஷி. தந்தை சந்திரசேகர ஐயர். இளவயதிலேயே தாயை இழந்தார். தந்தை பிழைப்புக்காக உறவினர்கள் இருக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார். அங்குதான் வஸந்தகோகிலத்தின் இளமைப்பருவம் கழிந்தது. இளவயதிலே ஒருமுறை கேட்டதைப் பிழையின்றித் திருப்பிக் கூறும் ஞாபகசக்தியும், இனிய குரல்வளமும் அவருக்கு இருந்தது. நாகப்பட்டினத்தில் ஜால்ரா கோபாலய்யர் என்பவர் ஓர் இசைப்பள்ளியை நடத்தி வந்தார். ஹரிகதா நிகழ்ச்சிகளில் ஜால்ரா வாசிப்பார். அவர் தேர்ந்த இசைஞானம் கொண்டவர். அவருடைய இசைப்பள்ளியில் வஸந்தகோகிலம் சேர்க்கப்பட்டார். சில ஆண்டுகள் குருகுல முறையில் இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் கச்சேரி வாய்ப்புகளுக்காகவும், இசைத் தட்டுக்களில் பாட வேண்டுமென்ற எண்ணத்துடனும் குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து வந்தார் தந்தை சந்திரசேகர்.
நண்பர் ஒருவர் மூலம் 'நவீன சதாரம்' படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த 'மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன்' குழுவினரின் அறிமுகம் ஏற்பட்டது. அவர்களது நிகழ்ச்சி ஒன்றில் வஸந்தகோகிலம் பாடினார். அதுதான் அவரது முதல் கச்சேரி. அப்போது அவருக்கு வயது 17. தொடர்ந்து சென்னையிலேயே சிறு சிறு கச்சேரிகள் செய்தார். இந்நிலையில் 1938ல் சென்னை சங்கீத வித்வத் சபையினர் மைசூர் இளவரசர் நரசிம்மராஜ உடையார் மற்றும் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தலைமையில் ஒரு இசைப்போட்டி நடத்தினர். அதில் பங்கேற்ற வஸந்தகோகிலத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. (இரண்டாவது பரிசு பெற்றவர் வஸுந்தரா தேவி. பின்னாளில் இவரும் நடிகையாகப் புகழ்பெற்றார்).
அந்தக் கச்சேரிக்குப் பின்னர் நிகழ்ந்ததுதான் நாம் முதலில் பார்த்த சம்பவம். அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்கும் நாட்டமில்லாமல் கச்சேரிகளில் தனது கவனத்தைச் செலுத்தினார் வஸந்தகோகிலம். இசைத்தட்டுகளில் பாடும் கனவும் அந்த ஆண்டே நிறைவேறியது. "எனக்குன்னிருபதம்" என்ற பாடல் அடங்கிய அவருடைய முதல் இசைத்தட்டை அக்காலத்தின் பிரபல 'ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' கம்பெனி வெளியிட்டது. அந்தப் பாடலும் அதை அவர் பாடிய விதமும் பலரைக் கவர்ந்தது. 'வஸந்தகோகிலம்' என்ற பெயர் பிரபலமானது. தொடர்ந்து பாட வாய்ப்புகள் வந்தன.
கோவையைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் சி.கே. சதாசிவம். இங்கிலாந்து சென்று திரைப்பட நுணுக்கங்கள் கற்றுத் திரும்பியிருந்த அவர், 'சதி லீலாவதி' படத்தில் எல்லிஸ் ஆர். டங்கனுடன் பணியாற்றியவர். அவர், 'சந்திரகுப்த சாணக்யா' என்ற படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தனது படத்திற்காக நல்ல நடிகர், நடிகைகளைத் தேடிக் கொண்டிருந்தார். ஒருசமயம் சென்னையில் நடந்த கச்சேரி ஒன்றில் வஸந்தகோகிலம் பாடக் கேட்டவர். குரலின் இனிமையில் சொக்கிப் போனார். அவரே தனது படத்தின் இளவரசி வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று கருதினார். தயங்கிய வஸந்தகோகிலத்திடம் பேசிச் சம்மதிக்க வைத்தார். 1940ல் வெளியான 'சந்திரகுப்த சாணக்யா'வில் 'சாயா' என்ற இளவரசியாக நடித்துத் திரைவாழ்வைத் துவக்கினார் வஸந்தகோகிலம். தொடர்ந்து 1941ல் வெளியான 'வேணுகானம்' படத்தில் வி.வி. சடகோபனுடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "எப்ப வருவாரோ எந்தன் கலிதீர" என்ற பிரபல கீர்த்தனையை இவர் பாடிப் பிரபலமானது.
இந்நிலையில் இவருக்குத் திருமணமானது. கணவர், இவர் திரைப்படத்தில் நடிப்பதை விரும்பவில்லை. பாடுவதையும் ஊக்குவிக்கவில்லை. நாளடைவில் இருவருக்குமிடையே மனவேற்றுமை அதிகமானதால் கணவர் இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருந்தது. தனது துயரத்தை மறக்க இசையில் கரைந்தார்.
தன்னைத் தேடிவந்த திரைப்பட வாய்ப்புக்களைத் தயக்கத்துடனேயே ஒப்புக்கொண்டார். சி.கே. சதாசிவம் இயக்கிய 'கங்காவதார்' படத்தில் கங்கையாக நடித்தார். அப்படம் வெற்றி பெற்றது. அப்படத்தின் வெற்றி தியாகராஜ பாகவதருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. ஹரிதாஸ் படத்தில் பாகவதரின் மனைவியாக நடித்தார். படத்தின் அனைத்துப் புகழையும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் டி.ஆர். ராஜகுமாரி தட்டிக் கொண்டு சென்றுவிட்டார் என்றாலும் வஸந்தகோகிலத்தின் நடிப்பும், அவர் பாடிய "கதிரவன் உதயம் கண்டே", "எனது மனம் துள்ளி விளையாடுதே", "எனது உயிர் நாதன்" போன்ற பாடல்களும் பாராட்டப்பட்டன. அப்படத்தில் அவர் பாடிய "கண்ணா வா மணிவண்ணா வா" இன்றும் ரசிக்கப்படும் பாடலாகும்.
வஸந்தகோகிலத்திற்குப் பாட மட்டுமல்ல மிருதங்கம் உட்படப் பல வாத்தியங்களை வாசிக்கவும் தெரியும். நடிப்பவதைவிடப் பாடுவதுதான் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் ஆண்களுடன் நெருங்கி இணைந்து நடிக்கவும் அவர் தயங்கினார். கவர்ச்சி வேடங்களை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நாளடைவில் தன்மீது அக்கறையும் அன்பும் காட்டிய இயக்குநர் சி.கே. சதாசிவத்துடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தார். ஆகவே அவர் இயக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவுசெய்தார். 1946ல் சதாசிவம் தயாரித்த 'வால்மீகி' படத்தில் நாரதராக நடித்தார். அதே ஆண்டு 'குண்டலகேசி' என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து இவர் நாரதராக நடித்த 'கிருஷ்ண விஜயம்' படமும் பேசப்பட்டது. அடுத்து 'ஆண்டாள்' என்ற படத்தில் இவர் நடிக்க இருப்பதாகவும், அதில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாட இருப்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், அப்படம் வெளியாகவில்லை. அதுபோல 'பக்த சபரி' என்ற படத்திலும் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதுவும் தயாரிக்கப்படவில்லை.
கச்சேரிகளிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார் வஸந்தகோகிலம். அதுவே அவருக்கு ஆத்மார்த்தமான பணியாக இருந்தது. தமிழ்நாடு முழுவதும் சென்று கச்சேரி செய்தார். இலங்கைக்கும் சென்று சில நாட்கள் தங்கித் தொடர்கச்சேரிகள் செய்திருக்கிறார். இந்தியன் ஃபைன் ஆர்ட் சொசைட்டி, நெல்லை சங்கீத சபா, தமிழிசைச் சங்கம் போன்றவற்றில் தொடர்ந்து பாடி வந்தார். திருவையாற்றில் நிகழ்ந்து வந்த சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில் பங்கேற்றுப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கச்சேரியில் அதிகம் தமிழ்ப் பாடல்களைப் பாடுவது இவர் வழக்கம். அருணாசலக் கவிராயரின் "ஏன் பள்ளி கொண்டீரய்யா" பாடலைக் கர்நாடக இசை மேடைகளில் பாடிப் பிரபலப்படுத்தியது இவர்தான். யோகி சுத்தானந்த பாரதியாரின் மீது பக்தியும் மதிப்பும் கொண்டவர். அவரது பாடல்கள் பலவற்றைக் கச்சேரிகளில் பாடிப் பிரபலமாக்கியதும் இவரே. பாரதியின் "பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்" பாடலை மேடைதோறும் பாடிப் பரப்பியிருக்கிறார். "தந்தை தாய் இருந்தால்", "நித்திரையில் வந்து நெஞ்சில்", "ஆனந்த நடனம்", "நீ தயராதா", "எப்போ வருவாரோ", "அந்த நாள் இனி வருமோ" போன்ற பாடல்கள் இவரது மேதைமைக்குச் சான்று. சங்கீதமேதை எஸ்.ராஜம், பாபநாசம் சிவன் போன்றோர் வஸந்தகோகிலத்தின் பாடல் சிறப்பைப் பாராட்டியுள்ளனர். இவரது குரலின் இனிமையைப் பாராட்டி டைகர் வரதாச்சாரியார் 'மதுரகீதவாணி' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
வஸந்தகோகிலம் மென்மையான உள்ளம் கொண்டவர். அமைதியான சுபாவமும் இரக்க குணமும் உடையவர். தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை எப்போதும் செய்வார். இலங்கையில் தமிழர் சங்கம் ஒன்று இவரது உதவியால் அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தபோது அவரைச் சந்தித்து நிதியளித்திருக்கிறார். ஆன்மீக நாட்டமிக்க இவர் காஞ்சி மகா பெரியவர் மீதும் மிகுந்த பக்தி கொண்டவர்.
டி.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி போன்றோருக்கு இணையான புகழ் என்.ஸி. வஸந்தகோகிலத்திற்கும் அக்காலத்தில் இருந்தது. இசை மூவர் போல இவர்கள் மூவரும் இன்னிசை விதூஷிகளாக அக்காலத்தில் மதிக்கப்பட்டனர். ஆனால், வஸந்தகோகிலம் காசநோய் தாக்கி, சென்னை கோபாலபுரத்தில் தனது இல்லத்தில், 1951 நவம்பர் 7ம் நாள் தனது 32ம் வயதில் காலமானார். அவரது மறைவிற்குப் பின் அவரை நினைவுகூரும் வகையில் 'என்.சி வஸந்தகோகிலம் எண்டோமென்ட்' அமைக்கப்பட்டது. அதன்மூலம் சென்னைப் பல்கலையில் இசைத்துறையில் எம்.ஃபில்., மற்றும் பிஎச்.டி., மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2019ம் ஆண்டு மதுரகீதவாணி என்.ஸி. வஸந்தகோகிலத்தின் நூற்றாண்டு.
வஸந்தகோகிலத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்: www.youtube.com www.saregama.com
பா.சு.ரமணன் |