கார்த்திக் புகழேந்தி
மண்ணின் மணத்தோடும், அனுபவங்களின் உயிர்ப்போடும் எழுதி வரும் இளம் படைப்பாளி கார்த்திக் புகழேந்தி. "நேரடியான கதைகூறுதலின் வழியே உணர்வுகளை அழுத்தமாகக் கூறுகிறார்" என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனால் புகழ்ந்துரைக்கப்படும் இவர், தமிழ்ச் சிறுகதையுலகம் அதிகம் கண்டிராத புதிய கதைக்களன்களை, மனிதர்களை, அனுபவங்களைத் தனது படைப்புகளில் அறிமுகப்படுத்தி வருகிறார். திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில் ஜனவரி 23, 1988 அன்று முருகன் - பூங்கோதை நாச்சியார் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி. பள்ளி நூலகத்தில் புத்தகக் காதல் தொடங்கியது. வாசிப்பினால் எழுத்தின்மீது காதல் பிறந்தது. பள்ளியின் சார்பாகப் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி போன்றவற்றில் பங்கேற்று பரிசுகள் பெற்றார். தந்தையின் மறைவாலும், குடும்பச் சூழலாலும் படிப்பை முடித்ததும் பணிக்குச் செல்ல நேர்ந்தது. கோவையில் ஏழாண்டுகள் விற்பனைத் துறையில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி எனப் பல இடங்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

பணிகளின்போது சந்தித்த மனிதர்களும், பெற்ற அனுபவங்களும் இவரது எழுத்துக்கு உரமாகின. நா. வானமாமலை, எஸ்.எஸ். போத்தையா ஆகியோர் தொகுத்த நாட்டுப்புறப் பாடல் நூல் மூலம் நாட்டுப்புற இலக்கியத்தின் மீது ஆர்வம் திரும்பியது. பணி நிமித்தம் சென்னைக்கு வந்தவர் ஏ.டி.எம். செக்யூரிடி உள்பட பல வேலைகளைச் செய்தார். இரவுநேரப் பணி என்பதால் பகல் நேரம் வாசிப்பிலும் எழுத்திலும் கழிந்தது. வரலாற்றாய்வின் மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து பயணம் செய்தபடி இருந்தார். மனிதர்களைச் சந்திப்பதும், உரையாடுவதும், அவர்களைப் பேச வைத்துக் கேட்பதும், வரலாற்றுச் செய்திகளை அறிந்துகொள்வதும் வழக்கமானது. தான் கற்றதையும், பெற்றதையும் இணையதளங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. நண்பர்களின் ஊக்குவிப்பால் அவற்றைத் தொகுத்து 2014ம் ஆண்டில் 'வற்றாநதி' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அகநாழிகை பதிப்பகம் Click Here Enlargeஅதனை வெளியிட்டது. வற்றாநதியான தாமிரபரணி நதியோரத்து மக்களின் வாழ்க்கையை, அவர்களின் நம்பிக்கைகளை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை அதில் காட்சிப்படுத்தியிருந்தார். அது பரவலான வாசக கவனம் பெறவே தொடர்ந்து எழுதினார். கலை, இலக்கிய ஆர்வத்தால் கி. ராஜநாராயணன் மற்றும் அமரர் கழனியூரன் ஆசிரியர் பொறுப்பில் வெளியான 'கதை சொல்லி' இலக்கிய இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். எழுத்தாளராக மட்டுமல்லாமல் பத்திரிகையாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார்.

லட்சிய புருஷராக வாழ்ந்த பொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் கார்த்திக்கை மிகவும் கவர்ந்தார். அவரை நினைவுகூரும் வகையில், 'ஜீவா படைப்பகம்' என்றதோர் பதிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன்மூலம் நெல்லை கண்ணன், ஜோ டி குரூஸ், கழனியூரன் உள்ளிட்ட பல படைப்பாளிகளின் எழுத்தை வெளியிட்டார். இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான, 'ஆரஞ்சு முட்டாய் கதைகள்' நூலும் 2015ல் ஜீவா படைப்பகம் மூலமே வெளியானது. அந்நூலுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. கார்த்திக்கிற்கு சிறு தெய்வங்கள் பற்றிய வரலாற்றாய்வில் மிகுந்த ஈடுபாடுண்டு. கல்வெட்டு வாசிப்பிலும் பழங்கோயில்கள் ஆய்வுகளிலும் விருப்பமுடையவர். அதுகுறித்து, "வேலை நிமித்தமாகச் செல்கையில் ஒருநாள் முழுக்க சில ஊர்களில் தங்கி வியாபாரம் பார்க்க வேண்டி இருக்கும், அங்குதான் வியாபாரிகள், ஊர்ப் பெரியவர்கள் எனப் பல கதைசொல்லிகள் எனக்கு அறிமுகமானார்கள். அவர்களுடன் பேசும்போது அந்த ஊர்களின் பழமையான பழக்கவழக்கங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்வார்கள். உதாரணத்துக்கு இன்று நாம் உச்சரிக்கும் பல ஊர்களின் பழைய பெயர்களையும், அதற்கான வரலாற்றையும் அவர்கள் கூறும்போது தெரிந்துகொள்ளச் சுவாரசியமாக இருந்தது" என்கிறார். கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், நாட்டுப்ப்புறப் பாடல்கள் எனத் தனது பயணத்தின்போது கிடைத்த செய்திகளைத் தொகுத்து 'ஊருக்குச் செல்லும் வழி', 'அங்காளம்' என்ற தலைப்புகளில் கட்டுரை நூல்களாகக் கொண்டு வந்தார். அரிய பல தகவல்கள் இக்கட்டுரைகளில் உள்ளன. 'காற்றில் வரும் ஒரு சிறு இசை' என்ற கட்டுரையில் சங்கை எப்படிச் சுடுவார்கள், சுடுவதற்கு முன் அது எப்படி இருக்கும், சுட்டபின்பு அது கொள்ளும் வடிவம் பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதியிருக்கிறார். இப்படிப் பல அரிய தகவல்கள் இந்நூல்களில் உள்ளன. 'அவளும் நானும் அலையும் கடலும்' என்பது கடந்த ஆண்டு வெளியான சிறுகதைத் தொகுப்பாகும்.

கார்த்திக் புகழேந்தியின் படைப்புகளைப் பற்றி, "வாழையடி வாழையாகச் செழித்துக் கொண்டிருக்கிற கரிசல் பூமியின் இலக்கியப் பரம்பரையிலிருந்து இன்றைய தளிராக வந்திருக்கிறார் கார்த்திக் புகழேந்தி. தான் கண்டதை, காண விரும்புவதை தனதேயான சொந்த மொழியில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே போகிறார். மரபும் நவீனமும் இணையாக அமைந்த தண்டவாளங்களின் மீது ஓடுகின்ற கதை ரயில் இவருடையது" என்று பாராட்டுகிறார் எழுத்தாளர் கமலாலயன். "இளம் தலைமுறைச் சிறுகதையின் புதியமுகம்" என்பது இவரைப் பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கருத்து. எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தொகுத்து, ஒன்பது இந்திய மொழிகளில் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட, 'நவலோகன் புதிய தமிழ்ச் சிறுகதைகள்-2016' நூலில் இவரது 'வெட்டும்பெருமாள்' சிறுகதை இடம்பெற்றுள்ளது. புதிய தலைமுறை வார இதழ் இவரை '2017ம் ஆண்டின் இளம் படைப்பாளி' என்று பாராட்டிச் சிறப்பித்துள்ளது. மணிப்பூர் மாநிலம் சிங்மெராங்கில் அமைந்துள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில், சாகித்ய அகாதமி இவ்வாண்டு ஒருங்கிணைத்த 'அனைத்திந்திய இளம் எழுத்தாளர்கள் கருத்தரங்'கில் தமிழகத்தின் சார்பாக உரையாற்றியிருக்கிறார். தமிழகத்தின் சார்பாகச் சென்ற ஒரே எழுத்தாளர் இவர்தான்.

தனது எழுத்து பற்றிக் கார்த்திக் புகழேந்தி, "நான் எழுதிக் குவிக்கிறது வாழ்க்கையைத்தான். நான் வாழ்ந்த, கண்ட, கேட்ட மனிதர்களின் கதையை பதிவு செய்வதுதான் என்னுடைய அறம். அதில் நான்மட்டும் இல்லை. நானும் இல்லாமலும் இல்லை" என்கிறார். தான் எழுத்தாளன் ஆனதைப் பற்றிக் குறிப்பிடும்போது, "தமிழ்நாட்டின் இண்டு இடுக்கு, மூலை முடுக்கு என்று ஒரு இடம் விடாமல் சுற்றும் மார்கெட்டிங் வேலை வரமாகவே மாறிப்போனது. எல்லா மாவட்டங்களையும் அவர்களது மொழிவழக்கையும், மனிதர்களையும் மனிதர்களின் கதைகளையும் அதுமுதல் படிக்கத் தொடங்கினேன். மாவட்ட வட்டார மொழி வழக்குகளின்மீது என் கவனம் திரும்ப இந்த அலைதல் தான் முக்கிய காரணமாக இருந்தது. அரிசனங்களின் பேச்சுத்தமிழ், கொங்கு தமிழ், குமரித்தமிழ், கரிசல் தமிழ், நெல்லைத்தமிழ், நாஞ்சில் தமிழ், தஞ்சைத்தமிழ், மதுரைத்தமிழ் என்று வட்டார வழக்காற்றியலின் மீது என் பார்வைகள் திரும்பியதற்கும் அம்மொழிகளில் வழக்குக்கு ஒரு சிறுகதை எழுதவேண்டுமென்ற எண்ணம் உருவானதற்கும் காரணமாக இருந்தது. பயணத்தின்போது மக்கள் மொழியில் எதை எல்லாம் நான் தெரிந்து கொள்கிறேனோ அதை எல்லாம் என்னுடைய கதைகளாகவும், கதாபாத்திரங்களாகவும் நான் உருவாக்கிக் கொள்வேன்" என்கிறார்.

Click Here Enlargeஎழுத்தால் கதை நிகழும் அந்தந்தக் காலகட்டத்திற்கே கூட்டிச் சென்று பாத்திரங்களுடன் நம்மையும் உலாவவிடும் தன்மை இவரது எழுத்திற்கு உள்ளது. நமது இளமைக் காலங்கள், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், நாம் சந்தித்த மனிதர்கள், நாம் கேள்விப்பட்ட மனிதர்களை எல்லாம்
தனது படைப்புகளில் காட்சிப்படுத்துகிறார். சக மானுடர்களுடனான தொடர் உரையாடலும்
பயணங்களுமே இவரது எழுத்தின் ஜீவனுக்கு, உயிர்த் துடிப்பிற்குக் காரணம் என்று சொல்லலாம். கிராமப்புற மக்களின் வாழ்க்கையை, நம்பிக்கையை, பிடிப்பை, உயிர்ப்பை, உணர்ச்சிப் பெருக்கின்றி, மிகைப்படுத்தாமல் இயல்பாகத் தனது படைப்புகளில் முன்வைக்கிறார். ஜன்னல், புதிய தலைமுறை, தினமலர், நூல்வெளி (இணைய இதழ்) போன்றவற்றில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. சமூக சேவையிலும் மிகுந்த ஆர்வமுண்டு. 2015 சென்னைப் பெருவெள்ளப் பாதிப்பின்போது இவர் ஆற்றிய சமூகப் பணிகளைப் பாராட்டி, 'கல்கி ட்ரஸ்ட்' சிறந்த தன்னார்வலர் விருது வழங்கி இவரைக் கௌரவித்துள்ளது. செவக்காட்டு கதை சொல்லியாக மட்டுமல்லாமல் திறனாய்வாளராகவும், பதிப்பாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் கார்த்திக் புகழேந்தி, தனது ஜீவா படைப்பகம் மூலம் ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகளைக் கண்டறிந்து அறிமுகம் செய்து ஊக்குவித்து வருகிறார். தற்போது நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், அயோத்திதாசர் பற்றிய ஆய்வு நூல் ஒன்றும் விரைவில் வெளியாக இருக்கிறது.

தன்னுள் இருக்கும் பால்யத்தை, சிறுவனை உயிர்ப்போடு வைத்திருக்கும் படைப்பாளிகளால் மொழியில் ரசாயன மாற்றத்தை எளிதில் கொண்டு வர முடியும். அதற்குச் சிறந்த உதாரணமாக இருக்கின்றது இவரது எழுத்து. தற்போது குடும்பத்துடன் சென்னை மறைமலை நகரில் வசித்து வருகிறார். தனது கருத்துக்களை writterpugal.blogspot.com என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறார். கி. ராஜநாராயணன், பொன்னீலன், பூமணி வரிசையில் மண்ணின் மணத்தோடும், வாழ்க்கையின் உயிர்ப்போடும் எழுதிவரும் கார்த்திக் புகழேந்தி இலக்கிய உலகின் நம்பிக்கை முகம்..

அரவிந்த்

© TamilOnline.com