அரங்கேற்றம்: சுஜனா அருள்
அக்டோபர் 14, 2018 அன்று, திருமதி சிவகாமி வெங்காவின் சிஷ்யை செல்வி சுஜனா அருள் சௌம்யநாத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் கலாபாரதி நாட்டியப்பள்ளி சார்பில் நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழுவூர், கலாக்ஷேத்திரா பாணிகளைப் பின்பற்றி பரதநாட்டியத்திற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளவர் குரு சிவகாமி என்பது குறிப்பிடத் தக்கது. நிகழ்ச்சியில் பாடல்கள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன என்பதும் சிறப்பு புஷ்பாஞ்சலியில் ஆடலரசன் நடராஜனை மலர்தூவி வணங்கி, குருவையும் பக்கவாத்தியக்காரர்களையும் வணங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினார் சுஜனா. பாரதியாரின் "கற்பக விநாயகக் கடவுளே போற்றி" என்ற பாடலுக்கு அவரது அபிநயம் மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து மைசூர் சதாசிவராம் இயற்றிய ஜதீஸ்வரத்திற்கு ஜதிகள், நிருத்தம், முத்திரைகளுடன் ஆடியது சிறப்பாக இருந்தது. மதுரை என். கிருஷ்ணன் இயற்றிய பாடலில் விஷ்ணுவின் சகோதரியாகவும், மாயாதேவியாகவும் விளங்கும் அன்னையாக நடனம் ஆடியது அருமை. அடுத்து "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்" திருநாவுக்கரசர் பாடலில் சிவபிரானின் பிறைசூடிச் சடைமுடி தவழும், திருநீறு பூசிய தோற்றத்தை அழகாகக் காட்சிப்படுத்தினார்.

நீலகண்ட சிவன் இயற்றிய "ஆனந்த நடனமாடுவார்" என்ற பாடலுக்குத் தில்லை நடராஜனின் தாண்டவத்தைக் கண்முன் நிறுத்தினார். "ஆடினாயே கண்ணா" என்ற அம்புஜம் கிருஷ்ணா பாடலுக்கு பிருந்தாவனக் கண்ணனாகவே மாறிவிட்டார் சுஜனா. அடுத்து மதுரை என். கிருஷ்ணனின் தில்லானாவுக்கு ஆடியது மிகவும் சிறப்பாக இருந்தது. இறுதியில் தந்தை சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை உபதேசித்த முருகனின் புகழைப் பாடி நிகழ்ச்சி நிறைவுற்றது. மங்களம் நிகழ்ச்சியில் உலக அமைதிக்கும் நன்மைக்கும் பிரார்த்தனையோடு, இறைவன், குரு, இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி கூறி அவர்களது ஆசிகளை வேண்டினார் சுஜனா.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு குரு சிவகாமி வெங்காவின் நட்டுவாங்கமும் நடன அமைப்பும் முக்கியப் பங்கு வகித்தன. ஸ்ரீவத்ஸ டேபுரின் (வாய்ப்பாட்டு), ஸ்ரீஹரி ரங்கஸ்வாமி (மிருதங்கம்), நரசிம்மமூர்த்தி ராம மிஸ்ரா (புல்லாங்குழல்) ஆகியோரின் பின்னணி மிகச் சிறப்பு.

தந்தையும் தாயுமாக இருந்து 15 வயது சுஜனாவைக் கலைகளில் சிறக்கச் செய்துள்ள திருமதி அமலா பாராட்டுக்குரியவர்.

கிருஷ்ணவேணி அருணாசலம்,
போர்ட்லாண்ட்.

© TamilOnline.com