BATM: தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தினவிழா
நவம்பர் 10, 2018 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பாக சான் ரமோன் பகுதியில், தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை, மன்றச் செயலாளர் திரு ரமேஷ் குப்புசாமி துவக்கி வைத்தார். கலைநிகழ்ச்சிகள் செயலர் திரு குமார் நல்லுசாமி வரவேற்புரை ஆற்றினார். தலைவர் திரு தயானந்தன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் மன்றத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த குழந்தைகளின் இன்னிசை நிகழ்ச்சியில் செந்தமிழ்ப் பாடல்களைப் பாடி அவையோரை வசப்படுத்தினர். தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெரியோர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளில் பரதநாட்டியம், கிராமிய நடனம், திரையிசை நடனம் போன்றவை இடம்பெற்றன. அவிநயக்கூத்து (mime show) நிகழ்ச்சி, நகைச்சுவை நாடகம் மற்றும் மேடைச் சிரிப்புரை (Stand-up comedy) போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாய்க் கவர்ந்தன. விரிகுடாப் பகுதிப் பாடகர்கள் திரையிசைப் பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தனர்.

நிகழ்ச்சியின் மிகப்பெரும் சிறப்பாக, முதன்முறையாக இப்பகுதிப் பேச்சாளர்கள் மட்டுமே பங்கேற்ற, 'இணையத்தைப் பொழுதுபோக்கிற்காக அதிகம் பயன்படுத்துவது ஆண்களா? பெண்களா?' என்ற தலைப்பில் திரு அபு கான் தலைமையில் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி இரண்டும் இதில் மோதின. இணையத்தைப் பொழுதுபோக்கிற்காக அதிகம் பயன்படுத்துவது ஆண்களே என்று தீர்ப்பு வழங்கினார்.

மன்றத் துணைத் தலைவர் திரு ரமேஷ் சத்தியம் புரவலர்கள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் திரு சங்கர் நடராஜன் புதிய உறுப்பினர்கள் சேர்வது பற்றிப் பேசினார். தொடர்ந்து, 2019ம் ஆண்டுக்கான புதிய செயற்குழு அறிமுகப்படுத்தப் பட்டது.

விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கும், சிறப்பாகச் செயல்படும் தன்னார்வலர்களுக்கும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. திரு புகழேந்தி, திரு யோகானந்த், திருமதி இந்து ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

ரமேஷ் குப்புசாமி,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com