நவம்பர் 18, 2018 ஞாயிறன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை ஆகிய மூன்றும் இணைந்து 'தமிழர் நன்றி கூறும் நாள்' கொண்டாடும் வகையாக 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை அரோராவின் (சிகாகோவின் புறநகர்) உள்ள ஹெஸடு இல்லம் இல்லத்தில் நடத்தின. இதில் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் (செல்வியர் சாமா, சினேகா; செல்வர்கள் இரக்சன், இரித்திக்கு, சச்சின், சாய்கிருசு, சுபாசு) மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் (திருவாட்டியர் இரேவதி, சிந்துசா, கார்த்திகா, சுசாதா; திருவாளர்கள் கணேசன், கந்தகுமார், கார்த்திகேயன், சந்திரசேகர், சாக்கரடீசு, விசய் மற்றும் பாபு) பங்கேற்று 150க்கு மேற்பட்ட வறியோர்க்கு உணவு வழங்கினர்.
உணவு வழங்குமுன்னர் வறியோர்க்கு மருந்துகளும் அன்றாடப் பொருள்களும் வழங்கினர். இது 2018ம் ஆண்டின் ஆறாவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வாகும். பின்னர் அங்கிருந்தோர்க்கு, தமிழர்பற்றிய விவரக்குறிப்பும், தமிழ் மண்ணின் விடுதலைக்கு உயிர் ஈந்தோர்பற்றிய குறிப்பும், திருவள்ளுவரின் சில குறளதிகாரக் குறிப்புகளும், பிற நாட்டுப் பேரறிஞர் கண்ணோட்டத்தில் தமிழர்பற்றிய குறிப்புகளும் அடங்கிய சிற்றிதழ் ஒன்று வழங்கப்பட்டது. அடுத்து வரும் காலைக்கான உணவு உதவிகளையும் வழங்கினர்.
இல்லத்து உதவியாளர் திருவாட்டி. சிண்டி நன்றி தெரிவித்தார். சிண்டி அவர்களுக்கு அமைப்புகள் மூன்றின் சார்பிலும் திரு. பாபு நன்றியைத் தெரிவித்தார்.
வ.ச. பாபு, சிகாகோ, இல்லினாய் |