பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது. ஓரளவு நிலையாக இருக்கிற பணவீக்க விகிதத்தை அது பாதிக்கும். அதுமட்டுமல்ல, நடைமுறையில் பார்த்தால் மக்களின் அன்றாட உபயோகப் பொருள்களின் விலையையும் அது ஏகத்துக்கு உயர்த்திவிடும். வளர்ச்சிப் பாதையில் விரைந்துகொண்டு இருக்கும் பாரதத்துக்கு அது நல்லதல்ல. இதற்கு இன்னொரு அரசியல் பக்க விளைவும் உண்டு. இதுவரையில் குறைந்தபட்சப் பொதுத் திட்டத்தின் கீழ் மன்மோஹன்சிங் அரசுடன் ஒத்துழைத்து வந்த இடதுசாரிக் கட்சிகள் 'பெட்ரோல் விலை உயர்வை ஒப்புக்கொள்ளமுடியாது. அதைக் குறைக்கும் வரை ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு வரமுடியாது' என்று கூறிவிட்டனர். 'குறைந்தபட்சப் பொதுத் திட்டத்தைக் கட்டாயமாக அனுசரிக்க வேண்டும்' என்று கருணாநிதியும் ஒரு எச்சரிக்கை அனுப்பியிருக்கிறார்.
ஆளும் கூட்டணியைப் பெட்ரோல் விலை பிளக்காமல் இருக்கவேண்டும். கும்பகோணத்தில் பள்ளி செல்லும் மழலைகளைக் காவு வாங்கிய தீவிபத்து நடந்து ஓராண்டு ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில் அங்கே மாவட்டக் கலெக்டராக இருந்து தன் உடனடி நடவடிக்கைகளால் நல்ல பெயர் வாங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் அண்மையில் அமெரிக்காவுக்குப் போனபோது அவரைத் தென்றல் ஆசிரியர்களில் ஒருவரான மணிவண்ணன் பேட்டி கண்டதும் மிகப் பொருத்தமே.
ஜூலை 16-ம் தேதியை 'பாதுகாப்பு தினமாக' இந்திய அரசு அறிவிக்குமானால் அந்த வெற்றியில் தென்றலுக்கும் ஒரு பங்கு உண்டு. பரிசீலிக்கப்படுவதாக ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அமெரிக்காவில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) சகோதர சங்கங்களுடன் நடத்தும் தமிழர் மாநாடும் அதுதவிரப் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு ஜூலை மாதத்தில் நடக்கவிருக்கின்றன. கடல் கடந்து தமிழ்மணம் பரப்பும் இவற்றின் பெருவெற்றிக்கு நமது வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்
தென்றல் ஆசிரியர் குழு ஜூலை 2005 |