மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 11)
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள். என்ரிக்கே இயற்கையிலும், மனிதர்களின் தேர்ச்சி இனப்பெருக்கத்தாலும் (selective breeding) எப்படி மரபணு மாற்றங்கள் பரவுகின்றன என்றும் விவரித்தார். பிறகு க்ரிஸ்பர் முறை, அத்துடன் பல்திறன் மூல உயிரணு நுட்பத்தைச் சேர்த்துப் பயன் படுத்தி மிருகங்களின் உடலில் மனித அங்கங்களை வளர்க்க முடியும் என்பவற்றையும், சமீபத்தில் முழுச் செயற்கை மரபணு எழுத்துக்களே உருவாக்கப் பட்டுள்ளன என்றும் கூறினார். மேலே பார்க்கலாம்...

*****


மரபணுத் தொடர்களில் க்ரிஸ்பர் முறையால் நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுத்துவதுடன், புதிதாகச் செயற்கையாக உருவாக்கப் பட்டுள்ள X மற்றும் Y என்னும் மரபணு எழுத்துக்களையும் சேர்க்கமுடியும், அதனால் புதிய மரபணுத் தொடர்களையே உருவாக்க முடியும் என்று என்ரிக்கே போட்ட அணுகுண்டால் அதிர்ந்து போன ஷாலினியும் சூர்யாவும் இது எங்கு போய் எந்த அசம்பாவிதத்தில் முடியுமோ என்று கவலை தெரிவிக்கவே என்ரிக்கே அதுபற்றிய தன் கருத்தை விளக்க முற்பட்டார்.

அதற்குள் கிரண் முந்திக்கொண்டான். "அ...அ... ஐஸலக்கா! இது நல்லா இருக்கே! அப்படின்னா, நமக்கு வேண்டிய அழகையும் குணத்தையும் வச்சு நான் ஏற்கனவே ஜொள்ளு விட்டா மாதிரி ஒரு பொண்ணையே செயற்கையா உருவாக்கலாமே? எப்பப் பாத்தாலும் ஏன் நாசமாயிடும்னு கவலைப் படறீங்க!"

என்ரிக்கே கைதட்டினார். "சரியா சொன்னே கிரண். நல்ல பலன்கள் பலவற்றை இந்தச் செயற்கை மரபணுக்கள் மூலமாப் பெறமுடியும். ஆனா சூர்யா, ஷாலினி சொன்னபடி தீய விளைவுகளும் ஏற்படலாம். எந்த ஒரு விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கும் நல்ல பயன்களும் இருக்கும், தீய பயன்களும் இருக்கும். மருத்துவத்துக்கு உதவற அதே கண்டுபிடிப்புக்கள் தீவிர பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை ஆயிரக் கணக்குல கொல்றத்துக்கும் பயன்படுது. அதே மாதிரிதான் இதுவும். கூடியவரைக்கும் நல்லதுக்கு மட்டும் பயன்படற மாதிரி கட்டுப்பாடுகள் இருக்கு. ஆனா பேராசையினாலயோ அல்லது தவறான கொள்கையினாலயோ ஒரு விஞ்ஞானி தவறான வழிக்குச் செலுத்தவே முடியாதுன்னு எப்படி உத்தரவாதம் தர முடியும்? மற்ற விஞ்ஞான முன்னேற்றங்கள் மாதிரிதான் இதுவும்!"

சூர்யா, ஷாலினி இருவரும் அதிக நம்பிக்கை இல்லாமல் ஏற்றுக்கொண்டனர்.

சூர்யா மேற்கொண்டு கேட்டார். "சரி அப்படியே வச்சுக்குவோம். இப்படிப்பட்ட புதிய மரபணு எழுத்துக்களைப் பயன்படுத்தறதுல என்ன பலன்?"

"அப்படி வாங்க வழிக்கு, சொல்றேன்! இப்படிப்பட்ட புது மரபணு எழுத்துக்களைப் பயன்படுத்தி, இயற்கையில் பெற இயலாத சில புரதங்களை (proteins) உருவாக்க இயலும்" என்றார் என்ரிக்கே.

கிரண் துள்ளிக் குதித்தான். "ஆஹா புது ப்ரோட்டீன்! கொத்தவரங்காய் மாதிரி ஒல்லியா இருக்கற எனக்கும் தசைகள் வலுக்கும். ஜாம்பா ஜூஸுக்குப் போய் நல்ல சுவையான ஸ்மூதியில கலந்து சாப்பிடலாமா?"

என்ரிக்கே கலகலவெனச் சிரித்தார். "வாவ்! இப்படி நான் தொடர்ந்து சிரிச்சு ரொம்ப நாளாயிடுச்சு, நன்றி கிரண். நீ சொல்றமாதிரி கூட இருக்கலாம். ஆனா, முக்கியமா இந்தப் புது மரபணு எழுத்துக்களின் முதல் குறிக்கோள் புதுவிதமான மருந்துகளை உருவாக்குவது. உதாரணமாக ஆன்டிபயாடிக் மருந்துகளால் அழியாத கிருமிகள் மருவலால் உருவாகியிருக்கு. அந்த மாதிரிக் கிருமிகளை நாசம் செய்ய அவற்றின் மரபணுக்களைக் கலைச்சு அழிக்கிற மாதிரியான புரதங்களை உயிரெதிர்ப்பு மருந்துகளாகப் பயன் படுத்தலாம்."

ஷாலினி சிலாகித்தாள். "ஓ! சபாஷ்! அப்படிப்பட்ட புதுக் கிருமிநாசினி மருந்துகள் வேணும்னு மருத்துவர்களான நாங்க அலையாத அலைச்சலில்லை. இந்த விதத்துல நமக்குக் கிடைக்கும்னா நல்லதுதானே!"

என்ரிக்கே ஆமோதித்தார். "கரெக்ட்! மிகவும் நல்லது ஷாலினி. அது மட்டுமில்லை, இந்தப் புது மரபணு எழுத்து முறை, மருந்துகளால் ஒருபோதும் குணப்படுத்தவோ, அல்லது தடுக்கவோ முடிந்திராத பல நோய்களுக்கும் மருந்துகள் உருவாக்க உதவக்கூடும். ஓ! சூர்யா, உங்க கவலையை ஓரளவு நிவர்த்திக்கும்படி இந்த ரெண்டு புது எழுத்துக்களும் பழைய எழுத்துக்களோட சேராதபடி உருவாக்கியிருக்காங்க. அதுனால எதாவது விபத்தின் மூலம் அத்தகைய புது மரபணு எழுத்துக்கள் கொண்ட உயிரணுக்கள் ஆராய்ச்சிக் கூடத்துக்கு வெளியில் வந்துவிட்டாலும் அவை பரவ இயலாது, குறுகிய காலத்தில் மடிந்துவிடும்."

ஓரளவு நிம்மதியடைந்த சூர்யா மற்றொரு வினா எழுப்பினார். "சரி அந்தப் பாதுகாப்பு பலமானது என்றே நம்புவோம். ஆனால் நீங்க புதுவகை மருந்து உற்பத்தியை முதல்பலன் என்றல்லவா சொன்னீங்க? அப்ப மற்ற பலன்கள்?"

"மீண்டும் கச்சிதமான கேள்வி! நல்லது. முக்கியமான மற்றொரு பலனை மட்டும் பார்ப்போம். இது கிரணுக்குப் பிடிக்கும்னு நினைக்கறேன். அதுதான், புதியவித உயிரினங்களை உருவாக்குவது. நாள் போகப்போக, இயற்கையால் மட்டுமே உருவாக்க முடிந்த குணங்களும் தோற்றங்களும் உள்ள உயிரினங்கள் தவிர செயற்கையாக நமக்குத் தோன்றியபடி உயிரினங்களையும் உருவாக்க இயலும் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்கள்! மனித இனத்தையும் மிகவும் முன்னேறிய சூப்பர் மனிதர்களாக மாற்றமுடியும் என்றும் ஓர் எண்ணம் உள்ளது!"

கிரண் கைதட்டினான். "ஆஹா என் ஜொள்ளுக்கும் எதிர்காலம் இருக்கு பாத்தியா, ஷாலு!"

ஷாலினி முகம் சுளித்தாள். "அய்யே நீயேதான் உன்னை மெச்சிக்கணும்! உயிரினம்னா பிரேஸிலியன் அழகிதானா? அதுக்கு முன்னால நாம முதல்ல ஒரு புதுவித பாக்டீரியா அளவுக்காவது எப்போ உருவாக்கறாங்கன்னு பார்ப்போம்!"

என்ரிக்கே ஆமோதித்தார். "நீ சொல்றது சரிதான் ஷாலினி. நான் சொல்றதெல்லாம் நிறைவேறப் பற்பல ஆண்டுகள் ஆகலாம். நம் காலகட்டத்துக்கும் அப்பாற்படக் கூடும். ஆனால் அந்தத் திசையில்தான் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்."

சூர்யா மீண்டும் அதிகக் கவலையுடன், "சரிதான். இது முன்னேற்றமா, இல்லை பெரும் தீய மாற்றமான்னு காலந்தான் முடிவு கட்டணும். போகட்டும். இப்ப உங்க ஆராய்ச்சிக்கு வருவோம். இவ்வளவு முன்னேற்றம்னு சொல்றீங்க, அப்ப நீங்க இன்னும் பெரும் முன்னேற்றம் செஞ்சேன்னு சொன்னீங்களே அது என்ன?"

என்ரிக்கே பெருமிதத்தில் நெஞ்சு விம்ம, விளக்க ஆரம்பித்தார். "உண்மைதான் சூர்யா, இதெல்லாம் நல்ல முன்னேற்றங்கள்தான். ஆனா, இந்த க்ரிஸ்பர் முறையில ரெண்டு பலவீனங்கள் இருக்கு!"

கிரண் எக்களித்தான். "ஆஹா, என்னடா நேரா போயிட்டிருக்கேன்னு பாத்தேன். இப்பதான் கதையில ஒரு முடிச்சு விழுறது போல இருக்கு?!"

"அப்படியில்லாட்டா சுவாரஸ்யமிருக்காதே கிரண்! ஆமாம். ரெண்டு பலவீனங்கள். ஒண்ணு, க்ரிஸ்பரை எப்பவும் சரியான இடத்துக்குக் கொண்டு சேர்க்கறது கஷ்டமா இருக்கு. ரெண்டாவது, சரியான இடம் சேர்ந்தாலும் ஓவ்வொரு முறையும் சரியான மாற்றங்களைத் தவறாம செய்யறதில்லை."

கிரண் முகம் சுளித்தான். "அவ்வளவுதானா உங்கள் க்ரிஸ்பர் மகாத்மியம். சரியான மக்குதான் போலிருக்கு இந்த க்ரிஸ்பர்!"

ஷாலினி கண்டித்தாள். "கிரண் அப்படி ஓரேயடியா மட்டம் தட்டக்கூடாது. எந்த நுட்பமுமே முதல்லயே ஒட்டு மொத்தமா சரியா வேலை செஞ்சுடறதில்லை. போகப் போகத்தான் பல முன்னேற்றங்களை அடைஞ்சு மெருகேறி நாம இப்ப பாக்கறமாதிரி, பயன்படுத்தற மாதிரியான உன்னத நிலை அடையுது. விமானம், கம்ப்யூட்டர் எல்லாமே அப்படித்தானே. இந்த க்ரிஸ்பரும் அப்படித்தான்னு வச்சுக்கோ!"

"சரியா சொன்னே ஷாலினி! அப்படியேதான் கிரண். நாம இப்ப பாக்கற க்ரிஸ்பர் நுட்பம் ரொம்ப ஆரம்பநிலைன்னு தான் சொல்லணும். இன்னும் போகப்போக பிரமாதமா முன்னேறும் கவலைப் படாதே!"

சூர்யா இடைபுகுந்தார். "ஸோ, அப்படிப்பட்ட முன்னேற்றங்களைத்தான் நீங்க செஞ்சிருக்கீங்க போலிருக்கு! அதைப்பத்திக் கொஞ்சம் விவரியுங்களேன்?"

என்ரிக்கே விவரித்தது என்ன? பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com