கிருஷ்ணாஸிங் அல்லது துப்பறியும் சீடன்
(ஆரணி குப்புசாமி முதலியார் எழுதிய 'கிருஷ்ணாஸிங் அல்லது துப்பறியும் சீடன்' நாவலிலிருந்து சில பகுதிகள்)

முதல் அத்தியாயம்
(இக்கதையானது ஆனந்தஸிங் தன் தந்தையாகிய பிரக்யாதி பெற்ற துப்பறியும் கிருஷ்ணாஸிங்கிடம் துப்பறியும் தொழிலைக் கற்றுக்கொண்டு முதல் முதல் பிரவேசித்த குற்றத்தைப் பற்றியதாகும்.)

போலீஸ் இன்ஸ்பெக்டர் இராஜம் பிள்ளை தன் அறையில் உட்கார்ந்திருக்கும் போது ஒரு போலீஸ் சேவகன் வந்து "அய்யா! யாரோ ஒரு பெரிய மனிதர் தங்களைக் காணவேண்டுமென்று வந்து காத்துக்கொண்டிருக்கிறார்" என்று ஒரு பெயர் எழுதிய சீட்டை அவரிடம் அளித்தான்.

இன்ஸ்பெக்டர் அதைக்கண்டதும் "ஓ! உலகநாதம் பிள்ளை; அவருக்கு நம்மிடம் என்ன வேலையிருக்கிறது? அவரை யுள்ளே யழைத்து வா" என்றார்.

சற்று நேரத்திற்குள் மெலிந்த ஒரு மனிதன் அறைக்குள் வந்ததும் "தாங்கள் தானே துப்பறியும் இலாகாவிற்குத் தலைமை வகித்திருக்கும் இராஜம் பிள்ளை? எனக்கு உம்முடைய உதவி வேண்டும். நான் செல்வந்தன். தாராளமாகத் தங்களுக்கு நல்ல பரிசளிப்பேன்" என்றான்.

இன்ஸ்பெக்டர் அந்த ஆளை நோக்கி "உம்மைப்பற்றி எனக்குப் பூரணமாய்த் தெரியுமாதலால் தாங்கள் ஒன்றும் விவரம் கூறவேண்டாம்" என்று கையால் சமிக்கை செய்தார்.

உலகநாதம் பிள்ளை:- "நான் தங்களுக்குக் கூறப்போவது அந்தரங்கமான சமாசாரம்" என்றார்.

இன்ஸ்பெக்டர்: "ஆம் ஆம்; என்னுடைய உத்தியோக முறைமையான தொழிலில் சம்பந்தப்பட்டவரையில்" என்றார்.

உலகநாதம் பிள்ளை: "ஆம் ஆம், நான் கேட்பதும் அவ்வளவே" என்று கூறிவிட்டு அறையில் இரண்டொருதரம் உலவிவிட்டு "நான் யாரென்று நீ தெரிந்து கொண்டாயோ?" என்று கேட்டார்.

இன்ஸ்: "ஆம். மேட்டு வீதியில் வசிக்கும் பிரபலமான பாங்கிக்காரர் தாங்கள்" என்றார்.

உலக: "ஆம் ஆம். நானும் என் மனைவி, என் ஏகபுத்திரியுமே என் குடும்பம். அந்தோ! என் புத்திரி போய்விட்டாள். என் ஏகபுத்திரியாகிய மனோன்மணி எங்கோ போய்விட்டாள். அய்யோ கடவுளே! என் மகளை மட்டும் கண்டுபிடித்து என்னிடம் கொண்டுவந்து விட்டுவிடு. பிறகு உனக்கு வேண்டிய பரிசை நீயே யிவ்வளவென்று கூறிவிடு. நான் அதற்கு எள்ளளவு ஆட்சேபணையும் கூறமாட்டேன்."

இன்ஸ்பெக்டர் இராஜாராம் இத்தகைய வியாகூலமான விஷயங்களில் எத்தனையோ கண்டிருக்கிறார். அப்படியிருந்தும் இந்தச் சங்கதியைக் கேட்டதும் அவர் மிக்க பரிதாபமடைந்து மிக்க சாந்தத்தோடும் அன்போடும் பின்கண்டபடி கேட்டார். "தங்கள் புத்திரி எங்கோ போய்விட்டா ளென்கிறீர்களே, அவள் இன்ன விடத்திற்குச் செல்கிறேனென்று சற்றும் உளவுவைத்து விட்டுச் செல்லவில்லையோ?'" என்று வினவினார்.

உலக: "இல்லை; ஒரு சங்கதியுமில்லை. இன்று பிற்பகல் ஆரம்பத்திலேயே யெங்கோ சென்றாள். இன்னும் திரும்பி வரவேயில்லை. அவள் தன் சினேகர் யாரிடமாவது சென்றிருப்பாளென்று நாங்கள் நினைத்துக் கொண்டு மூடத்தனமாய் மாலைப் போசன வரையில் வருவாளென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு அவள் வழக்கமாய் எங்கெங்கு செல்வதோ அங்கெல்லாம் தேடிப்பார்த்தோம்; ஒருவரேனும் அவளைக் கண்டதாய்க் கூறவில்லை."

இன்ஸ்: "அவள் வீட்டை விட்டுச் செல்வதற்கு ஏதாவது காரணமிருக்கிறதென்று தங்களுக்குத் தெரியுமோ?"

உலக: "இல்லை. ஒரு காரணமுமில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பிராணனைப்போல் நேசித்திருப்பவர்கள்."

இன்ஸ்: "இருக்கட்டும், இன்னொரு கேள்வி; அதற்காகத் தாங்கள் கோபிக்கலாகாது. அப்பெண் யார்மேலாவது காதல் கொண்டிருக்குமோ? ஏதேனும் காதற் சம்பந்தமான விவகாரம் இருக்குமோ?"

உலக: "நீர் கேட்டது எனக்குத் தெரிகிறது. அதாவது அவள் யார் மேலாவது காதல் கொண்டிருந்து அதற்கு நாங்கள் அவளைக் கண்டித்தோமா அல்லது அவன்மேல் காதல் கொள்ளலாகாதென்று கட்டளை யிட்டோமாவென்று கேட்கிறீர்கள். அப்படியொன்றுமே நடக்கவில்லை. அவள் பிரியப்பட்ட ஒரு வாலிபனுக்கே அவளை மணம் செய்து கொடுப்பதாய் வாக்களித்திருக்கிறோம். நாங்கள் அவனைப் பாலியத்திலிருந்தே யெங்கள் புத்திரன்போல் நேசித்து வருகிறோம். அவன் ஏழையே யெனினும் நல்ல யோக்கியன். விர்த்திக்கு வரக்கூடியவன். என் புத்திரியும் அவனும் பரஸ்பரம் பூரண அன்புடையவர்களாகவே யிருக்கிறார்கள். அவர்களுக்குள் எப்போதும் எள்ளளவு மனஸ்தாபங்கூட நேர்ந்தது கிடையாது."

இன்ஸ்: "அப்படியாயின் அவள் வீட்டைவிட்டுச் சென்ற விஷயமாய்க் கொஞ்சம் உளவுகூட உங்களுக்குப் புலப்படவில்லையா?"

உலக: "ஒன்றுமே கிடையாது."

அச்சமயம் உலகநாதர் திடீரென்று திடுக்கிட்டதை இன்ஸ்பெக்டர் கவனிக்காமலே "ஏதேனும் கெடுதியாவது ஆபத்தாவது நேர்ந்திருக்கலாமென்று கருதுகிறீரா?" என்றார்.

உலகநாதர்: "கெடுதியா? ஆபத்தா? நீர் கூறுவது எனக்கு விளங்கவில்லை."

இன்ஸ்பெக்டர்: "நான் கேட்டதாவது, 'யாராவது அவளைப் பலாத்காரமாய்க் களவாடிக் கொண்டு போயிருப்பார்களா? யாருக்காவது அப்படிச்செய்ய ஏதேனும் காரணமிருக்குமா?' என்று கேட்கிறேன்."

உலக: "எனக்குப் புலப்படவில்லை, புலப்படவில்லை. யாருக்குத்தான் அப்படிச் செய்ய என்ன காரணமிருக்கும்? என்னத்திற்காக அப்படிச் செய்யவேண்டும்?"

இன்ஸ்: "உமக்கு யாரேனும் விரோதிகளுளரோ?"

உலக: "நானறிந்தமட்டில் ஒருவருமில்லை."

இன்ஸ்: "தங்கள் புத்திரிக்கும் யாரும் விரோதியில்லையே? அதாவது யாராவது தன்னை மணம் புரியும்படிக் கேட்டு அவள் மறுத்துவிட்டது உண்டோ?"

உலக: "இல்லவேயில்லையென்று நான் உண்மையாய்க் கூறுவேன்."

இன்ஸ்: "அவளுக்குச் சொந்தமாய்ப் பிரத்தியேக ஆஸ்தியேதேனுமுண்டோ? யாராவது பந்துவால் அவள் பேருக்கென்று எழுதிவைக்கப்பட்டது?"

இதைக்கேட்டதும் உலகநாதர் மறுபடி திடுக்கிட்டார். அவர் முகம் வெளுத்து விட்டது. "இல்லை. அவளுக்குச் சொந்தத்தில் ஒரு ஆஸ்தியுமில்லை. ஆனால் அவள் என் ஏக புத்திரியாதலால் என் ஆஸ்தி முழுமையும் எனக்குப் பின் அவளுக்கே சொந்தமாகும். ஆயினும் அவள் இல்லாவிட்டால் அந்த ஆஸ்தியெனக்கென்ன பிரயோசனம். ஓ மனோன்மணி! ஓ மனோன்மணி! நீ யெப்படித்தான் மனம் துணிந்து இவ்வாறு செய்தாயோ!" என்று மிக்க துயரத்தோடு கூறினார்.

இன்ஸ்பெக்டருக்கு இன்னது கூறுவதென்று புலப்படவில்லை. அவள் சிறுபிள்ளை விளையாட்டுத்தனமாய் இப்படிச் செய்திருப்பாள் என்றே அவர் மனதிற்பட்டது. அதை வாய்விட்டே கூறிவிட்டார்.

உலக: "இல்லையில்லை. அவள் அப்படிப்பட்டவளல்ல. நீர் அவளை யறிந்திருந்தால் ஒருபோதும் இப்படிக் கூறியிருக்கமாட்டீர். அப்படியில்லை. இதில் ஏதோ மிகவும் ஆழ்ந்த மர்மம் இருக்கிறது. அவள் அப்படிப்பட்ட முட்டாளல்ல. அவள் நல்ல அறிவுள்ளவள். ஆயினும் நீர் அவளைக் கண்டுபிடித்துத் தருவீரல்லவா?"

இன்ஸ்பெக்டர் சற்று நேரம் சிந்தித்து "நீர் வெகுமதியளிப்பீரல்லவா? ஒரு ஆயிரம் டாலர் (சுமார் மூவாயிரம் ரூபாய்*) கொடுப்பீரல்லவா?" என்றார்.

உலக: "ஒரு ஆயிரமா, ஐயாயிரம் பத்தாயிரம் வேண்டுமாயினும் சரி; என் புத்திரி மட்டும் மறுபடி வீட்டிற்குள் வந்து சேரவேண்டும்."

இன்ஸ்: "அவளுடைய புகைப்படம் இருக்கிறதா?"

உலக: "இதோ அதைக் கேட்பீரென்று கருதிக் கையில் கொண்டு வந்தேயிருக்கிறேன்."

இன்ஸ்: "சரி; மிக்க நலம்; இதிலிருந்து அனேகம் பிரதிகளை யெடுத்து இப்பெண்ணைக் கண்டுபிடித்துக் கொடுப்போர்க்கு இவ்வளவு பரிசளிப்பேனென்று நாடெங்கும் பிரசுரம் செய்யவேண்டும்."

இம்மொழிகளைக் கேட்டதும் உலகநாதர் பீதியடைந்தவர் போல், "வேண்டாம் வேண்டாம். அப்படிச் செய்தால் பத்திரிகைகளிலெல்லாம் அவள் பெயரே யிருக்கும். அவளைப் பற்றியே யாவரும் பேசுவார்கள். ஆகையால் அவள் பெயர் வெளிவராமல் இவ்விஷயம் இரகசியமாகவே நடத்தப்பட்ட வேண்டும்" என்றார்.

இன்ஸ்: "தாங்கள் கூறுவது நல்லதே. ஆனால் நான் என்ன செய்யக்கூடும்? தங்கள் கன்னிகையை இரகசியமாய் என் ஆட்கள் தேட வேண்டுமென்பது தங்கள் கருத்து. நானோ அப்படிச் செய்ய முடியாது. சட்டம் எப்படி வழிகாட்டுகிறதோ அப்படியே நான் நடக்க வேண்டும்."

உலகநாதர் துயரத்தோடு, "அந்தோ! அப்படியானால் நீர் எனக்கு உதவி செய்யமாட்டீரோ?" என்றார்.

இன்ஸ்பெக்டர் திடீரென்று என்னமோ நினைத்துக்கொண்டு "அடடா! இது முன்னமே என் நினைப்பிற்கு வரவில்லை; இதனால் உதவி செய்ய என்னால் முடியாது. ஆனால் உமக்கு உதவிசெய்யத்தக்க ஆளிடம் உம்மை யனுப்புகிறேன். உம்முடைய புத்திரியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் துப்பறியும் கிருஷ்ணாஸிங் ஒருவரே இதற்குத் தகுதியானவர்" என்றார்.

உலக: "அவர் யார்?"

இன்ஸ்: "அதைக் கூறுவது கஷ்டம். ஒன்று கூறுகிறேன். என்னால் முடியாது, எப்படியும் நான் தோல்வியடைவேன் என்று எனக்கு நிச்சயமாய்ப் புலப்பட்டால் அத்தகைய விவகாரத்தில் அவரின் உதவியை நான் கோருவதுண்டு. அப்போது நான் ஜெயமடைவது நிச்சயம்."

உலக: "அப்படியானால், அவரை வரவழைக்கிறீரா?"

இன்ஸ்: "அவரை வரவழைப்பதா? ஏன் அதைவிட நமது அரசரை யிங்கு வரவழைக்கலாம். நீர் அவரிடம் செல்லவேண்டும். ஒருசமயம் அவர் இதைக் கண்டுபிடிக்க ஒப்புக்கொள்ளாமல் விட்டுவிட்டாலும் விட்டு விடுவார். ஆனால் ஒப்புக்கொண்டாலோ கட்டாயம் உமது புத்திரியைக் கண்டுபிடித்து விடுவார் என்பது நிச்சயம், இன்னொன்று, நீர் அவரைப் பூரணமாய் நம்பவேண்டும்; அவர் மரணத்தறுவாயில் இருப்பதுபோல் தோன்றினாலும், அவர் மட்டும் ஒப்புக்கொண்டால் எப்படியாயினும் உமது புத்திரியைக் கண்டுபிடித்துவிடுவார். நீர் அவரிடம் இதை யொப்பித்துவிட்டால் உமக்கு இதைப்பற்றிச் சற்றும் கவலையே வேண்டியதில்லை."

உலகநாதர்:- "உமக்கு மிக்க வந்தனம். நான் உடனே யவரிடம் செல்கிறேன்" என்றார்.

நவீனபுரியில் உயர்குலப் பிரபுக்கள் வசிக்கும் பாகத்தில் ஒரு சிறுவீதியில் உள்ள ஒரு வீட்டில் கிருஷ்ணாஸிங் வசித்துக்கொண்டிருக்கிறான். அது நான்கடுக்கு மாளிகை. பழைய மாதிரி வீடு. அது இருப்பது பத்தாவது நம்பர் வீதி. அவன் மூன்றாவது நான்காவது அடுக்குமாளிகைகளைத் தனக்கு வைத்துக்கொண்டு மீதியிடத்தைத் தகுந்தவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தான்.

போலீஸ் இன்ஸ்பெக்டரும் உலகநாதரும் சம்பாஷித்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், கிருஷ்ணாஸிங் தன் அறையில் நிம்மதியாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

அவன் வயது முதிர்ந்தவனாயினும் தீட்சணியமான பார்வையுடையவன். அவன் பார்வை முழுதும் மிக்க ஆவலோடும் அக்கறையோடும் அடுத்த அறையிலிருந்த ஒரு வாலிபனுடைய செய்கைமேல் இருந்தது. அவன் அடிக்கடி அந்த வாசற்படியினருகில் சென்று ஆவலுடன் அங்கு நடக்கும் விஷயத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவன் பார்க்கும் அழகிய உருவத்தைக்காண எவனாயிருந்தாலும் பிரியப்படுவான். அந்த அறையில் இருக்கும் வாலிபனுடைய தேக அமைப்பு மிக்க அபூர்வமானதே. அவனுடைய கட்டுவிடாத தேக அவயவங்கள் அளவுமீறிப் பருத்திருக்கவில்லை. ஆனால் ஒரு இராக்ஷதன்கூட அவனுடைய கையிற் சிக்கினால் இரும்பு இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட மாதிரியே. அவன், கிருஷ்ணாஸிங்கின் புதல்வனாகிய ஆனந்தஸிங்கே. கிருஷ்ணாஸிங் தன் ஏகபுத்திரனாகிய ஆனந்த ஸிங்கின் தேகவல்லமையைப்பற்றி மிக்க அக்கறையும் சிரத்தையுமெடுத்துக் கொண்டான்.

துப்பறிவதில் பிரக்கியாதியடைந்த கிருஷ்ணாஸிங் தன் புத்திரனுடைய மனதில் துப்பறியும் அறிவையும் தந்திர சாமர்த்தியங்களையும் பூரணமாய் நிரப்பியிருந்தான். தன் புத்திரனை அற்புதமான துப்பறிபவனாய்ப் பயிற்சி செய்துவிட்டான். ஆனந்தஸிங்குக்கு அப்போது இருபத்து நான்கு வயதாகி யிருந்தது. அவன் அந்த அறையின் ஒரு பக்கத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் மணற்பைமேல் (குத்துச்சண்டைக்காக அணியும் கையுறைகள் அணியப்பட்ட) முஷ்டிபிடித்த கரங்களால் குத்திக்கொண்டிருக்கிறான்.

பத்து நிமிடங்கள் கழித்துத் திடீரென்று அறையிலிருக்கும் டெலிபோன் மணியடித்தது. கிருஷ்ணாஸிங் உடனே சென்று தன்னைக் கூப்பிடுகிறவர்களோடு பேசிவிட்டுத் திரும்பினான்.

ஆனந்தஸிங், "தந்தையே! என்ன சங்கதி?" என்று வினவினான்.


தந்தை:- "நமது இன்ஸ்பெக்டர் ஒரு கேஸை யனுப்புகிறார். முதலில் இதை யுனக்கு முதல் கேஸாகக் கொடுக்கலாமென்று நினைத்தேன். ஆனால் மிகச் சாதாரணமும் சுலபமுமான கேஸ். மிக்க செல்வவந்தரான பாங்கிக்காரராகிய உலகநாதம் பிள்ளையின் புத்திரி காணாமற் போய்விட்டாளாம்" என்றான்.

பத்து நிமிடங்களுக்குப்பின் ஒரு வண்டிவந்து வீதியில் நின்றதும் கதவு தட்டப்பட்டது. கிருஷ்ணாஸிங் உடனே எழுந்து தன் புத்திரனிருக்கும் அறையை மூடிவிட்டுத் தன் அறையின் கதவைத்திறந்தான்.

உலகநாதம் பிள்ளை:- "நீர்தாம் கிருஷ்ணாஸிங் என்று நினைக்கிறேன்" என்று கூறிக்கொண்டே அறைக்குள் வந்தார்.

கிருஷ்ணா: "ஆம். தாங்கள் உலகநாதம் பிள்ளை."

உலகநாதம் பிள்ளை: (சற்று வியப்போடு) "ஆ! நான்றானென்று தெரியுமோ? நான் வந்த வேலைகூடத் தெரியுமோ?" என்றார்.

கிருஷ்ணா: "விவரமாய்த் தெரியாது. தாங்கள்தான் கூறவேண்டும்."

உலகநாதம் பிள்ளை நாற்புறங்களிலும் சுற்றிப்பார்த்தார்.

கிருஷ்ணாஸிங், "நாம் தனியேதானிருக்கிறோம். அக்கதவு மூடப்பட்டிருக்கிறது. அங்கு யாருமில்லை" என்றான்.

உலக: "இன்ஸ்பெக்டர் என்னை யும்மிடம் அனுப்பினார். தாங்கள் ஒரு கேஸிலும் தோல்வியடைந்ததில்லையென்று கூறினார். நீர் எனக்கு உதவி செய்கிறீரா?"

கிருஷ்ணா: "அவர் கூறியது உண்மையே. ஏனெனில் என் மனதிற்கு ஜெயிப்போம் என்று நிச்சயமாய்த் தோன்றாத கேஸை நான் எடுத்துக் கொள்வதில்லை. தாங்கள் இன்னும் தங்கள் விஷயத்தைக் கூறவில்லை. அதைக்கேட்ட பின்பு நான் விடையளிப்பேன். ஆனால் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளமாட்டேனென்றே நினைத்திரும்."

உலகநாதம் பிள்ளைக்கு ஒரு காரணமும் விளங்காமலே இன்ஸ்பெக்டர் கூறியபடியே கிருஷ்ணாஸிங் விஷயத்தில் பூரண நம்பிக்கை யுண்டாய்விட்டது. ஆகையால் 'இவன் முகங்கொடுத்து நம்பிக்கையோடு பேசாவிட்டாலும், எப்படியேனும் இவனையே நாம் அமர்த்திக்கொள்ளவேண்டும்' என்று தமக்குள் தீர்மானம் செய்துகொண்டு, இன்ஸ்பெக்டரிடம் கூறியது போலவே நடந்த விவகாரத்தைக் கூறினார்.

கிருஷ்ணாஸிங் இன்ஸ்பெக்டர் கேட்ட மாதிரி கேள்விகளையே கேட்டு முடிந்தபின் சுமார் பத்து நிமிடங்கள் வரையில் சிந்தனையிலிருந்தான். இந்தக் கேஸில் பிரவேசித்தால் நல்ல பணம் கிடைக்குமென்று தெரியும். ஆனால் அவனுக்குப் பணம் அவசியமல்ல. உலகநாதப்பிள்ளையின் துயரத்திற்காகத் தனக்கு மிக்க இரக்கம் உண்டாயிற்று. ஆயினும் கேஸ் மிக்க தந்திர சாமர்த்தியங்களைக் காட்டவேண்டிய கடினமான கேஸாயிருந்தால் ஒப்பிக்கொள்ளலாம். அப்படிக்கில்லை. மிகச் சுலபமானது. சாதாரணமாய் இதைக் கண்டுபிடிக்கக்கூடிய ஆசாமிகள் ஐம்பது பேருக்குமேல் கிடைப்பார்கள். ஆகையால் இக்கேஸ் நமக்கு வேண்டாமென்று மறுதலித்து விடுவதே சரி எனத் தனக்குள் தீர்மானித்துக்கொண்டு உலகநாதம் பிள்ளையிடம் கூறிவிடவெண்ணித் தலைநிமிர்ந்து உட்கார்ந்தான்.

* கதை நிகழும் காலம்: 1920.

ஆரணி குப்புசாமி முதலியார்

© TamilOnline.com