தென்றல் பேசுகிறது...
நடந்து முடிந்த இடைத்தேர்தல் இரண்டுவகைப் போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒன்று, சர்ச்சைக்குரிய கொள்கைகளுக்கும், அரசியல் நடத்தைக்கும் பிறப்பிடமான டோனல்டு ட்ரம்ப்பின் கட்சியில் இருப்பவர்களே அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள் என்பது. இரண்டாவதாக, அமெரிக்க-இந்தியர், இஸ்லாமியர் எனப் பல்லினம் சார்ந்தவர்களையும், மகளிரையும் பிரதிநிகள் சபைக்கு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள் என்பது. இவை இரண்டுமே அமெரிக்காவின் இருநூறு ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அமெரிக்காவின் இன, மத, கலாச்சாரப் பன்மை அதன் குடிகளால் காக்கப்படும் என்பதனை இது உறுதிப்படுத்தியுள்ளது. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால், ஏமி பெரா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

*****


கஜா புயல் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியையும் அதனையடுத்துள்ள மாவட்டங்களையும் சூறையாடிச் சென்றிருக்கிறது. விளை பயிர்களையும் வீடுகளையும் தரைமட்டம் ஆக்கியிருக்கிறது. தென்னை மரங்கள் தீக்குச்சிகள் போலச் சரிந்து கிடக்கின்றன. கால்நடைகளுக்கும் பல மனித உயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. வெளி மாவட்டங்களிலிருந்து மின்சார ஊழியர் விரைந்து சென்று கடுமையாக உழைத்த போதிலும், இந்த இதழ் அச்சுக்குப் போகுவரை பல இடங்களில் மின்சாரப் பகிர்வு மீளவில்லை. ஆனால், தமிழக அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகளாலும், பிற தன்னார்வ நிறுவனங்களின் விறுவிறுப்பான உதவிகளாலும் மீட்புப் பணிகள் முன்னெப்போதையும் விடச் சிறப்பாக நடந்து வருவதாகச் செய்திகள் கிடைக்கின்றன. அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வரும் தமிழ் நாடு அறக்கட்டளை (ஜிழிதி) மற்றும் பிற எண்ணற்ற தமிழ் அமைப்புகளோடு சேர்ந்து நிவாரணப் பணிகளில் முன்னணியில் நிற்பதை அறிய மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழுணர்வை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதே இன்றைய கட்டாயம். அது நடக்கிறது. தொடரட்டும்.

*****


சிற்பவல்லுனர் குடும்பப் பாரம்பரியத்தில் பிறந்த, அற்புதமான ஓவியத் திறமை கொண்ட இளைஞர் எஸ்.ஏ.வி. இளையராஜா. அவரது நீர்வண்ண ஓவியங்களை விட்டுக் கண்களை எடுக்க இயலாது. மிக விவரமாகச் சித்திரிக்கப்படும் நுண்ணிய, துல்லியமான தகவல்களும் அதனை எடுப்பாகக் காட்டுவதற்கு விடப்படும் விரிந்த வெண்வெளியும் (ஷிஜீணீநீமீ) இவருடைய சிறப்பு அம்சங்கள். இளையராஜாவின் நேர்காணலும் படங்களும் இந்த இதழுக்கு எழில் சேர்க்கின்றன. வீடுகளை விட்டு விரட்டப்பட்ட அகதிகள் வாழும் சிரியாவிலும், சூடானிலும் பாலும் ரொட்டியும் கொண்டு சென்று தரும். சாயி ப்ரசாத், மென்பொருள் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளச் சிரமப்படும் இளையோருக்கு உதவ 'டெக்டாகுலர்' என்ற அமைப்பை முன்னெடுத்திருக்கும் ஷிவனா ஆனந்த் ஆகியோரைப்பற்றிய குறிப்புகள் இதழின் ரத்தினங்கள். இறைவனின் படைப்புகள் அனைத்தையும் உடன்பிறப்புகளாகக் கருதிய அஸிஸியின் புனிதர் ஃபிரான்சிஸ் குறித்த சிறுகதையும் இவ்விதழுக்கு அணி சேர்க்கிறது.

19வது ஆண்டின் முதல் இதழான இதனை எம்மைத் தொடர்ந்து ஆதரிக்கும் விளம்பரதாரர்கள், படைப்பாளிகள், வாசகர்கள், ஆங்காங்கே தென்றலை வினியோகித்து உதவுகிறவர்கள் என்று அனைவருக்கும் காணிக்கை ஆக்குகிறோம். வாருங்கள் நமது பெருமிதமான பயணத்தைக் கை கோத்துத் தொடரலாம்.

வாசகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ் நாள் வாழ்த்துகள்.

தென்றல் குழு

டிசம்பர் 2018

© TamilOnline.com