அரங்கேற்றம்: திவ்யா ஸ்ரீதர்
ஜூலை 28, 2018 அன்று குரு நவ்யா நடராஜனின் சிஷ்யை செல்வி திவ்யா ஸ்ரீதரின் நாட்டிய அரங்கேற்றம் De Anza VPAC அரங்கத்தில் நடந்தேறியது. திவ்யாவின் குரு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெங்களூருக்கு திரும்பிச்செல்ல வேண்டியதானது. ஆயினும் திவ்யா முயற்சியைக் கைவிடாமல் ஸ்கைப் வழியே நாட்டியம் கற்றார்.

அரங்கேற்றத்தை, ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இயற்றிய "ஆனந்த நர்த்தன கணபதிம்" என்ற நாட்டை ராகப் புஷ்பாஞ்சலியுடன் தொடங்கினார். அடுத்து சங்கீர்ண த்ரிபுட தாளத்தில் அலாரிப்பு. கல்யாணி ஜதீஸ்வரம் மிகச் சிறப்பாக இருந்தது. அடவுகளிலும், கால்தாளத்திலும் கைதேர்ந்தவர் திவ்யா என்பதை இது வெளிக்காட்டியது.

ராகமாலிகையில் அமைந்த மதுராஷ்டகம், கிருஷ்ணனின் அழகையும், இனிமையையும் அற்புதமாக வர்ணித்தது. நடனத்தின் மையமாக அமைந்த வர்ணம், சிதம்பரத்தில் வசிக்கும் தில்லை சிவபெருமானின் பெருமையை அழகாக விளக்கியது.

இடைவேளைக்குப் பிறகு ரீதிகௌளை ராகத்தில், மிஸ்ரசாபு தாளத்தில் "ஜனனி நின்னுவினா" என்ற தேவி பதத்துடன் ஆரம்பித்தார் திவ்யா. இங்கு தேவியின் பாதங்களில் சரணடைந்த பக்தனின் இயல்பை உருக்கமாக நடனத்தின் மூலம் விவரித்தார். இரண்டாவது பதமான சுப்ரமண்ய பாரதியின் "சொல்ல வல்லாயோ கிளியே"வில் திவ்யா தனது நவரச சிருங்காரத்தை முகபாவங்களில் திறம்பட வெளியிட்டார். இறுதியில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் கதனகுதூகலத் தில்லானா மற்றும் மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவேறியது.

பின்னணிக் குழுவினரான ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), பி.பி. ஹரிபாபு (மிருதங்கம்), மோகன்ராஜ் ஜெயராமன் (புல்லாங்குழல்) மற்றும் கிரண் ஆத்ரேயா (வயலின்) அனைவரும் சிறப்பாகத் துணை நின்றனர்.

புகழ்பெற்ற குருக்கள் மற்றும் விரிகுடாப் பகுதிக் கலைஞர்களின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நடனத்திற்குத் தலமை தாங்கிய திருமதி நிருபமா வைத்தியநாதன் "திவ்யாவின் நடனம் அவளது திறமை, கடின உழைப்பு, கலையின்மேல் உள்ள உண்மையான ஆர்வம் ஆகியவற்றை வெளிப்படுத்தியது" என்று பாராட்டிப் பேசினார்.

புவனா குருஸ்வாமி,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com