குமாரி நந்திதா ஸ்ரீராம் அவர்களின் கர்நாடகக இசைக்கச்சேரி ஜூலை 16ந் தேதி 2005 சனிக்கிழமை மாலை கேம்ப்பெல் தியேட்டரில் நடைபெற்றது. ஸாவேரி வர்ணம், ஹம்சத்வனி ராகம், கணபத் கீர்த்தனையுடன் நிகழ்ச்சி ஆரம்பம். சுருதி சுத்தமாக நல்ல நயமான சாரீரத்துடன் ஆரம்பம் விறுவிறுப்புடன் தொடங்கியது. சம்போ மஹாதேவா, ஆஹிரி ராக கீர்த்தனை யாவும் கேட்க மனதிற்கு இதமாக இருந்தது.
பூர்வி கல்யாணி ராக ஆலாபனை, நிரவல், ஸாரம் யாவும் நறுக்கு தெறித்தாற்போல் கச்சிதமாக இருந்தது. நல் பாடாந்திரம், இடைவிடா அப்யாசம், குருவின் பாடல் களை போதிக்கும் திறமை இவை சேர்ந்தால் மாணவியின் முன்னேற்றம் நிச்சயம். இவை யாவும் ஒன்றுபட இருந்ததால் 3 மணிநேர கச்சேரி அலுப்புத் தட்டாமல் இருந்தது.
ஒரு மணி நேரத்திற்குப்பின் தொண்டை சூடு பிடித்தபின் பாடிய பாடல்கள் யாவும் கேட்க நன்றாக இருந்தன. ரீதிகெளனை ராகத்தில் 'நன்னுவிடச்சே' கீர்த்தனையில் அர்த்தம் புரிந்து கோதண்டராமா, பட்டாபிராமா என்ற இடத்தில் பாவத்துடன் நிறுத்திப் பாடியது மிக்க அருமை. ராகம் தானம் பல்லவியில் கரகரப்பிரியாவில் மேல் ஸ்தாயில் அநாயாசமான பிடிகள், நறுக்குத் தெரித்தாற்போல் பாடிய சாரக்கோர்வை ஆகியவற்றில் மாணவியின் திறமை பளிச்சிட்டது.
ராகமாலிகாவில் ஸ்லோகம் பாடி 'பாவயாமி கோபாலபால' என்னும் அன்னமாச்சார்யா பாடல், முருகன் பாடல், தில்லானா யாவும் நல்ல விறுவிறுப்பு. பாரதியார், பாபநாசம் சிவன் பாடல் சேர்ந்திருந்தால் இன்னும் எடுப்பாக இருந்திருக்கும்.
மாணவியின் பெருமை குருவைத்தான் சாரும். ஸ்ரீமதி ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்கள் மாணவியின் திறமையை நன்கு வெளிக்கொணர்ந்து மிக அருமையாக பயிற்சி அளித்திருக்கிறார். பாராட்டுக்கள். வயலின் வாசித்த ரங்கஸ்ரீவரதராஜன், மிருதங்க வித்வான் நாராயணன், மோர்சிங் வித்வான் மகாதேவன் அவர்களும் அருமையாக வாசித்து நிகழ்ச்சியை பிரமாதமாக களை கட்டச் செய்து ரசிகர்களை இன்புறச் செய்துவிட்டனர். பாராட்டுக்கள்.
சீதா துரைராஜ் |