BATM: தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் சந்திப்பு
செப்டம்பர் 21, 2018 அன்று, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் மில்பிடாஸ் நகரில் 'முதலீட்டாளர் சந்திப்பு' ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர். எம். மணிகண்டன், இத்துறைக்கான அரசுச் செயலர் திரு. சந்தோஷ் பாபு, தமிழ்நாடு மின்னணு வாரியத்தின் (ELCOT) நிர்வாக இயக்குனர் திரு. எம். விஜயகுமார் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினர்.

சங்கச் செயலாளர் திரு. ரமேஷ் குப்புசாமி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தலைவர் திரு. தயா, துணைத்தலைவர் திரு. ரமேஷ் சத்யமூர்த்தி ஆகியோர் மாண்புமிகு விருந்தினர்களை வரவேற்றுப் பேசினர்.

அமைச்சர் திரு.மணிகண்டன் மற்றும் திரு. சந்தோஷ் பாபு ஆகியோர் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள தொழில்நுட்பத் துறையின் சேவைகளை விளக்கிப் பேசினர். அரசின் கொள்கை மாறுதல்களால் முதலீட்டார்களுக்கு ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலைகளையும் எடுத்துக் கூறினர். அமெரிக்காவாழ் இந்தியர்கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்யவேண்டும் என்றும், 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகளாவிய முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

வந்திருந்தோரின் கேள்விகளுக்கு அமைச்சரும், அரசுச் செயலரும் விளக்கமாகப் பதிலளித்தனர். தமது வளைகுடாப் பகுதிப் பயணத்தில் பேருதவியாக இருந்த திரு. ராஜமாணிக்கம், அவரது துணைவியாரும் தமிழுக்குச் சீரிய தொண்டாற்றி வருபவருமான திருமதி வெற்றிச்செல்வி ஆகியோருக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தினார்.

சங்கப் பொருளாளர் திரு. சங்கர் நடராஜன் நன்றி நவில, கூட்டம் நிறைவெய்தியது.

ரமேஷ் குப்புசாமி,
SFO விரிகுடாப்பகுதி, கலிஃபோர்னியா

© TamilOnline.com