BATM: முத்தமிழ் விழா 2018
செப்டம்பர் 29, 2018 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மில்பிடாஸ் ஜெயின் கோவில் கலையரங்கில் முத்தமிழ் விழாவைச் சிறப்பாக நடத்தியது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகம், சிறப்புரைகள் மற்றும் இசை நிகழ்வுகளுடன் இவ்விழா நடைபெற்றது.

மன்றச் செயலாளர் திரு. ரமேஷ் குப்புசாமி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, சங்கத் தலைவர் திரு. தயானந்தன் வெங்கடாச்சலம், பொருளாளர் திரு. சங்கர் நடராஜன் ஆகியோர் துவக்கவுரை ஆற்றினர். இசைப்பள்ளி மாணவர்களின் கர்நாடக சங்கீதத் தமிழிசைக் கச்சேரியுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மிருதங்கம், வயலின் ஆகிய வாத்தியங்களுடன், குழந்தைகள் தங்களது இனிய குரலில் தமிழிசை பாடினர்.

'இசை வடிவில் திருக்குறள்' நிகழ்ச்சி அவையோரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும், 'மனதில் உறுதி வேண்டும், 'நின்னைச் சரணடைந்தேன்', 'காக்கைச் சிறகினிலே' போன்ற பாரதியார் பாடல்களையும், பல்வேறு தமிழ்த் திரையிசைப் பாடல்களையும், இனிமையாகப் பாடி அவையோரை வசியப்படுத்தினர்.

தமிழ் மன்ற முன்னாள் தலைவர் திரு. குணா 'தமிழ் எண்கள்' குறித்துச் சிறப்புரை ஆற்றினார். தமிழ் எண்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் எண்களுக்கு முன்னோடியாக விளங்கியமை பற்றி வரலாற்று பின்னணியுடன் விளக்கினார். சிறப்பு விருந்தினர் திரு. விக்டர் 'தமிழின் தொன்மையும், பெருமையும்' என்ற தலைப்பில், சங்க காலத்திற்கும் முந்தைய தமிழ்மொழியின் தொன்மையைப் பற்றி வரலாற்று ஆதாரங்களுடன் பேசினார்.

குழந்தைகள் அவ்வையாராகவும், திருவள்ளுவராகவும், பாரதியாராகவும், கண்ணகியாகவும் நடித்து வழங்கிய நாடகங்களைக் கண்டு அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

சிறியோர் முதல் பெரியோர் வரை பங்கேற்ற பரதநாட்டியம், பின்னலாட்டம் போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்வித்தன. இடையே நடைபெற்ற 'முத்தமிழ் வார்த்தைகளைத் தேடி' என்னும் புதிர்ப் போட்டியில் பார்வையாளர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.

கேரள வெள்ள நிவாரணத்திற்காகத் தமிழ் மன்றத்தின் சார்பாக திரட்டப்பட்ட நிதியான 1750 டாலர் தொகையை MANCA அமைப்பின் பிரதிநிதி திரு. சாஜன் அவர்களிடம் மன்ற நிர்வாகிகள் அளித்தனர்.

துணைத்தலைவர் திரு. ரமேஷ் சத்தியமூர்த்தி, தொடர்ந்து ஆதரவு தரும் புரவலர்களுக்கு நன்றி கூறினார்.

நிறைவாக 'முத்தமிழும் கலைஞரும்' என்ற நிகழ்ச்சியில் கலைஞர் இயல், இசை மற்றும் நாடகத் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புக் குறித்து திரு. இளங்கோ மெய்யப்பன், திரு. ஜெயக்குமார் முத்தழகு, திரு. உதயபாஸ்கர் நாச்சிமுத்து, திரு. அபு கான் ஆகியோர் உரையாற்றினர். பின்னர் பல்வேறு போட்டிகளின் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மன்றத் தலைவர் திரு. குமார் நல்லுசாமி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ரமேஷ் குப்புசாமி,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com