முதியவர்களை உற்சாகப்படுத்தவேண்டும், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் புகுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது மூத்தோருக்கான பாட்டுப் போட்டி. பிரபல சூப்பர் சிங்கர் அடிச்சுவட்டில் நடத்தப்படும் இந்தப் போட்டி கனடாவில் பிரபலமடைந்து வருகிறது.
விலா கருணா முதியோர் இல்லத்தின் இயக்குநராகத் திருமதி இந்திராணி நாகேந்திரம் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவ்வாண்டு விலா கருணா மூத்தோர் இல்லமும் TET தொலைக்காட்சியும் இணைந்து பாட்டுப் போட்டி நடத்தியது. தொடக்கச் சுற்றுக்கள் நான்கு மாதங்களாக நடந்தன. ஆரம்பத்தில் 26 போட்டியாளர்கள் பங்குபற்றி இறுதியில் 6 போட்டியாளர்களுடன் மேடையில் இறுதிநிலைக்கு வந்தது.
செப்டம்பர் 30 மாலை டொரண்டோவில் நடந்த இறுதிச்சுற்றுப் போட்டிக்கு கன்னிகா சந்திரன், பரா வீரகத்தியார், பிலிப்பையா ஆரோக்கியநாதன், கனகையா சோமசுந்தரம், வனிதா விக்னேஸ்வரராஜ், பேச்சியப்பன் செந்தில்நாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்த ஆண்டுக்கான சீனியர் சூப்பர் சிங்கராக முதலிடம் பெற்றார் பரா வீரகத்தியார். இரண்டாம் இடத்தைப் பிலிப்பையா ஆரோக்கியநாதனும் மூன்றாம் இடத்தைப் பேச்சியப்பன் செந்தில்நாதனும் பிடித்தனர்.
வெற்றியாளர்களுக்குக் கேடயமும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன. நடுவர்களாக நியூ யார்க் ராஜா, T.N. பாலமுரளி, பாபு ஜெயகாந்தன், அன்டன் பீலிக்ஸ், ஆனந்தம் அண்டோனி மற்றும் குரல் பயிற்சியாளராக வைத்திய கலாநிதி வரகுணன் ஆகியோரும் கடமையாற்றினர். விலா கருணாவும் அதன் இயக்குநர் இந்திராணி நாகேந்திரமும் தொடர்ந்து இந்தப் பணியைச் செய்து மூத்தோரையும் மற்றோரையும் மகிழ்விப்பார்கள் என நம்புவோம்.
அ. முத்துலிங்கம், டொரண்டோ, கனடா |