STF: 8வது ஆண்டு நிதி திரட்டும் விழா
அக்டோபர் 6, 2018 அன்று சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழா கார்லண்ட் க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. பிரபல நெம்புகோல் கவிஞர். டாக்டர்.கவிதாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ப்ளேனோ தமிழ்ப்பள்ளி மாணவியர் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினர் வழங்கிய நடனங்கள் இதில் இடம்பெற்றன.

இந்த விழா மூலம் திரட்டப்பட்ட நிதியில், உதவும் கரங்கள் அமைப்பின் நலத்திட்டங்களுக்கு 23,000 டாலர், ஃபீனிக்ஸ் அகடமி மூலம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வுப் பயிற்சிக்காக 5,000 டாலர், திருக்குறள் போட்டிக்காக 5,000 டாலர் நன்கொடையாக வழங்கப்பட்டது.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே" பாடலுக்கு மேடையில் ஒரு பக்கம் குழந்தைகள் நடனமாட, இன்னொரு புறம் மழலைகள் நவீன வடிவத்தில் திரி நடனமும் ஆடினார்கள். தேஜஸ் நடனப்பள்ளி மாணவர்கள் தமிழிசைப் பாடல்களுக்கு வெவ்வேறு வகையிலான நடனங்கள் ஆடினர். நடன ஆசிரியர்கள் புவனா, சிந்தன் இருவரின் சிறப்பு நடனமும் இடம்பெற்றது. இறுதியாகக் கும்மி ஆட்டத்தில் பெண்களும் ஆண்களுமாக பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர் டாக்டர். கவிதாசன், "எண்ணங்களே ஏணிப்படிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். தேவைகள், தூண்டுதல்கள், சுற்றுச்சூழல், பெற்றோரிடமிருந்து மரபணுப்பதிவு போன்ற காரணங்களினால் எண்ணங்கள் தோன்றுகின்றன. அதை உணர்ந்துகொண்டால், எண்ணங்களை மாற்றிக்கொள்ளவும், அவற்றையே ஏணிப்படிகளாக்கி வாழ்வில் உயரவும் முடியும் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.

எட்டு ஆண்டுகளாக அறக்கட்டளையின் நிதியுதவியைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை ரம்யா வேலு விவரித்தார். உதவும் கரங்கள், காயத்ரி மருத்துவமனை, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல்வேறு இடங்களில் புயல் நிவாரணம், அமெரிக்க தமிழ் கல்விக் கழகம், ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வுப் பயிற்சி, திருக்குறள் போட்டி என இதுவரையிலும் 466,000 டாலர் தொகையை நலத்திட்டங்களுக்கு உதவியுள்ளார்கள்.

டாலஸில் வசிக்கும் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் பங்களிப்பினால் இது சாத்தியமானது என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள். முத்தையா சுபாஷ் வரவேற்புரை ஆற்றினார். விசாலாட்சி வேலு தொகுத்து வழங்கினார். ராதிகா உமா மகேஷ் நன்றியுரை வழங்கினார்.

சின்னமணி,
ப்ளேனோ, டெக்சஸ்

© TamilOnline.com