சான் ஹோசே: நவராத்திரி விழா
அக்டோபர் மாதம் 9ம் தேதியிலிருந்து 18ம் தேதிவரை சான் ஹோசேயிலுள்ள பாலாஜி மாதா கோவிலில் சரத்கால நவராத்திரி துர்கா பூஜை அதன் கோவிலின் பீடாதிபதி நாராயணானந்த சுவாமிகளின் தலைமையில் நடத்தப்பட்டது எல்லா நாட்களிலும் சண்டி பாராயணமும் ஹோமமும் நடைபெற்றன.

அக்டோபர் 9ம் நாளன்று ஸ்ரீ மஹாபட்டாரிகா திரிபுரசுந்தரி ஆவாஹனம் மற்றும் கடஸ்தாபனம் நடைபெற்றன. 9 நாட்களிலும் துர்கை, லக்ஷ்மி, கன்னிகா பரமேஸ்வரி, சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாந்தா, சாகம்பரி, காத்யாயனி, சித்திதாத்ரி ஆகிய அலங்காரங்களில் தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறு பெண்குழந்தைகளுக்குக் குமரிபூஜை நடத்தப்பட்டது. தினமும் பக்திபூர்வமான கலைநிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. ஆறாவது நாளன்று ஸ்ரீ நாராயணானந்த சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.

சுவாமிகள் தமது அருளுரையில் இந்துப் புனிதநூல்களைக் கற்று, அதன்மூலம் நம்மையும் நமது சூழலையும் உயர்த்தலாம்; அப்படிச் செய்வதால் சகமனிதர்களுக்கு உதவுவதோடு, அன்னை பூமியையும் செழிப்படையச் செய்யமுடியும் என்று குறிப்பிட்டார்.

விஜயதசமியன்று தேவி மஹாசரஸ்வதி, மஹாகாளி, மஹாலக்ஷ்மியாக வழிபடப்பட்டார். திருவிழாவை முன்னிட்டுப் பல பக்தி நூல்களும் குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டன.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com